உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/216

விக்கிமூலம் இலிருந்து

216. வேட்டோரே இனியர்!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : மருதம்.
துறை : தலைமகளுக்குப் பாங்காயினார் கேட்பத், தலைமகன் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, பாணற்காயினும் விறலிக்காயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது.

[(து.வி.) தலைமகனின் காதல் பரத்தையானவள், தனக்கு அவன்பாலுள்ள காதலின் மிகுதியை இவ்வாறு தலைவியின் பாங்கிலுள்ளோர் கேட்குமாறு எடுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. பரத்தையரினும் இத்தகைய உழுவலன்பு உடையாரும் பலர் இருந்தனர் என்பதற்குக் கோவலன்பால் மாதவிக்கு இருந்த அன்பினையும் கூறலாம்.]


துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்!
கண்ணுறு விழுமங் கைபோல் உதவி
நம்முறு துயரங் களையார் ஆயினும்
இன்னா தன்றே அவரில் ஊரே! 5
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்


குருகார் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை யறுத்த திருமா வுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும், 70
வேட்டோர் அல்லது பிறர்இன் னாரே!

தெளிவுரை : ஊடலுணர்த்திக் கூடுகின்ற கலவியோடே பொருந்தியவராக, என்பால் எய்திலராயினும், காண்டற்கு இனியராகிய தலைவரைக் கண்டு இன்புறுவதற்கான எல்லையிலேனும் வாழ்ந்திருத்தலும் அந்த அளவிலே எனக்கு இனிதாவதாகும். கண்ணில் விழுதலானவொரு சிறு துகளையும் கையானது அப்பொழுதுதானே சென்று விலக்குமாறு போல, நம்மிடத்தே பொருந்தியுள்ள அவரது பிரிவாலுண்டாகிய இக்காமநோயினை வந்து விலக்காராயினும், அவரில்லாத ஊரிலே யானிருப்பது என்பது மேலும் துன்பந்தருவதாகும் அல்லவோ! எரிபோலும் பூக்களைக் கொண்ட வேங்கை மரத்திடத்தே உறைவோனாகிய கடவுள் காத்தலைச் செய்கின்ற, குருகுகள் ஆரவாரிக்கின்ற வயலின் கண்ணே இருந்த கட்டுப்பரணாகிய அவ்விடத்திலே, அயலானாகிய ஒருவன் உண்டாக்கிய கவலையானது உள்ளத்தை வருத்துதலினாலே, தன் ஒரு முலையையே அறுத்துக் கொண்டவளான திருமாவுண்ணியின் கதையினைக் கேட்டோரும், அத்தன்மையராகவே நம்மைக் கைவிட்டனராயினும், நம்மால் விரும்பப்பட்டோராகிய அவரையன்றிப், பிறர் யாவராயினும் நமக்கு இன்னாதாரே யாவர்!

சொற்பொருள் : துனி – புலவியாகிய துன்பம். துன்னல் – வந்து சேர்தல். காணுநர் – காண்டற்கு இனியராய தலைவர்–காண்புழி – காணற்கு ஏற்கும் ஓர் இடத்து. விழுமம் – துயரம். எரி – நெருப்பு. வேங்கைக் கடவுள் – வேங்கையிடத்தே உறையும் கடவுள்; வேங்கை மலரும் காலமே திருமண நிகழ்வை அறிவிக்குங் காலம் எனக் கொள்வது பண்டைய மரபு; அதுகாலை அதன்கண் தெய்வம் உறைவதாகக் கருதி அதனைப் பூசிப்பதும் வழக்கம்; இதுபற்றியே தன் உறவுக்கு அத்தெய்வத்தைச் சான்றாக்கிய திருமாவுண்ணி, பின்னர்க் காதலனாற் கைவிடப்பெற்ற போதிலே சான்றோர்பால் வழக்குரைத்த காலத்து, அத்தெய்வம் சான்று கூறாதிருக்கத் தன் ஒரு முலையை அறுத்தெறிந்து நன் கற்பை நிலைநாட்டியபோது, நெய்வமும் தோன்றிச் சான்று கூறிற்று என்பதும், அவனும் மனந்திருந்தி அவளை மணந்து வாழ்ந்தான் என்பதும் பழங்கதை. கேட்டோர் – கேட்டறிந்தவராகிய தலைவரும் பிறரும்.

விளக்கம் : தலைவன் தன் உறவை மறுப்பினும், தானும் திருமாவுண்ணி போலத் தங்கள் உறவை மெய்ப்பித்து அவனைப் பெறுவதற்கு மனவுறுதி கொண்டவள் என்கிறாள் அவள். 'வேங்கைக் கடவுள்' முருகனைக் குறிப்பதும் ஆகலாம். குறமகளிர் தம் காதலனோடு தம்மைச் சேர்ப்பிக்க முருகனை வேண்டிக் குரவையாடுதலைச் சிலம்பிற் கண்டு இன்புறுக. நாணுடைப் பெண்டிர் இவ்வாறு மன்றேறி வழக்குரைத்தல் வழக்கமில்லை. எனினும், அருகிய நிலையில் இவ்வாறுஞ் செய்து தம் கற்பறத்தைக் காத்தாரும் உளர் என்பதும் இதனால் அறியப்படும்.

கண் பரத்தையாகவும், விழுமம் அவள் கொண்ட பிரிவுத் துயராகவும், கைபோல் உதவுங் கடப்பாட்டினன் தலைவன் எனவும் உவமங்களைப் பொருத்திக் காண்க.

திருமாவுண்ணி கதை கண்ணகி கதையையே ஒத்திருத்தலைக் காண்க. 'குருகார் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற' என்பதற்கு, அதற்கேற்றவாறு கோவலனின் கொலை நிகழ்வைப் பொருத்திப் பொருள் கொள்ளுதல் பொருந்தும்.

'முலையறுத்தல்' என்பது நகில் குறைத்தல் என்பதும், அது காமவின்ப நுகர்ச்சிக்கண் இன்புறுத்திய உறுப்புக்களின் ஒன்றான முலைக்கண்களைத் தாம் பிரிவுத்துயரால் வெதும்பிய வெம்மையின் வேகத்தால் திருகி எறிதல் என்பதும் ஆய்வாளர் உறுதிப்படுத்திய செய்திகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/216&oldid=1698376" இலிருந்து மீள்விக்கப்பட்டது