உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/222

விக்கிமூலம் இலிருந்து

222. ஊக்கிச் செலவுடன் விடுகோ!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்பறமாகச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

[(து.வி.) தலைவனின் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணங்கொள்ளுதலிலே செலுத்த விரும்புகின்றாள் தோழி. தலைவியிடம் கூறுவாள்போலத், தலைவனும், ஒருசார் நிற்பவன் கேட்டுத் தெளியுமாறு, தலைவியைப் பெற்றோர் ற்செறித்தல் நேரும் என்று குறிப்பாகக் கூறுகின்றாள்.]


கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை
வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கைபுனை சிறுநெறி வாங்கிப் பையென
விசும்பாடு ஆய்மயில் கடுப்ப, யான் இன்று
பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச் 5
செலவுடன் விடுகோ, தோழி—பலவுடன்
வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது
பெருங்களிறு பிளிறுஞ் சோலையவர்
சேணெடுங் குன்றங் காணிய நீயே! 10

தெளிவுரை : தோழீ! பலாமரங்களுடனே மலைவாழையும் உயரமாக வளர்ந்து செறிந்துள்ளதும், உயரமிக வளர்ந்த சுரபுன்னை மரங்களும் உடையதுமான பக்கமலைச் சாரலிலே துயிலுகின்ற, பிடியானையின் பக்கத்திலே மேகங் கவிந்து அதை மறைத்தது. அதனால், அதனைக் காணாதுபோன அதன் பெருங்களிறானது, அதனை அழைத்ததாகப் பிளிறாநிற்கும். இத்தகைய சோலைகளைக் கொண்டதான, நின் தலைவருக்கு உரியதும், தொலைவிடத்தே இருப்பதுமாகிய நெடிய குன்றத்தினை நீயும் காணும் பொருட்டாக—

கரிய அடியையுடைய வேங்கையது சிவந்த பூக்களோடுங் கூடியதான வளைந்த கிளையினிடத்தே வடுக்கொள்ளுமாறு பிணித்திருக்கின்ற, முறுக்கேறிய புரிகளோடுங் கூடிய கயிற்றினைச் சார்ந்ததும், கைவினைத் திறனாலே புனையப்பெற்ற சிறிய முடக்கத்தை உடையதுமான ஊசலை இழுத்து, மெல்ல நின்னை அதன்பால் ஏற்றிவைத்து, நீதான் விசும்பிடத்தே ஆடிப்பறக்கின்ற அழகான மயிலைப் போல எழிலுடன் தோன்றுமாறு, யானும், இன்று, நின் அல்குலிடத்தே கிடக்கின்ற பசும்பொன் மணிகள் கோத்துள்ள மேகலையைப் பற்றினேனாய், மேலே செல்ல உயர்த்தி, உடனே பின்னே செல்லுமாறும் விடலாமோ? இதனைச் சொல்வாய் காண்!

சொற்பொருள் : செவ்வீ–சிவந்த மலர். வாங்கு சினை–தரைப்பக்கமாக வளைந்து தாழ்ந்துள்ள கிளை. விடுபுரி முரற்சி–புரிகள் முறுக்குற்று அமைந்த கயிறு. 'கைபுனை சிறுநெறி' என்றது, அக்கயிற்றிடத்தே அமர்ந்து ஆடுதற்கு ஏற்றபடியாகக் கையால் அழகிதாகப் புனையப்பெற்ற சிறியவளைவான பகுதி. பசுங்காழ்–பசிய மணிகள்; இதனை மேகலை என்னும் அணியாகக் கொள்க. ஊக்கி-மேலே உயரத் தூக்கி. பலவுடன்–பலாமரங்களுடன். 'பலவுடன் வாழை ஓங்கிய' என்பதற்குப் பலவாகச் செறிந்துள்ள வாழைகள் உயரமாக வளர்ந்துள்ள என்றும் உரைப்பர்.

விளக்கம் : அவர்களது சிறுகுடியின்கண், அவர்களது இல்லின் அணித்தாகவுள்ள சோலையிடத்தே இருந்து அவள் இவ்வாறு சொல்லுகின்றாள் எனக் கொள்க. 'அவனைத்தான் யாம் வரக்காண்கிலேம். இற்செறிப்புற்ற யாம் இனிமேல் அவனைக் கூடித் துயர்தெளிதல் என்பது அரிதாகலின், அவன் குன்றத்தைக் கண்டேனும் தேறியிருப்பேம்' என்பது இது. இதனைக் கேட்டலும் தலைவன், இனிக் களவுறவு வாய்த்தற்கு இயலாமையினையும், தன்னைப் பிரிந்துறைதல் ஆற்றாளாய்த் தலைவி கொள்ளும் நோயின் மிகுதியையும் அறிந்தானாய், அவளை வேட்டுவந்து முறைப்படி மணத்தற்கு மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம்.

'இனிக் களவு நிகழ்தல் கூடாமையின், தலைவன் வரைந்து எய்துதலே செய்யக்கூடியது' என உணர்த்தலின், இது வரைவு கடாயது ஆயிற்று. மெய்ப்பாடு; பெருமிதம்; பயன்; வரைவு கடாதல். உயர்ந்தும் தாழ்ந்தும் ஊசலாடும் தலைவியை 'விசும்பாடு ஆய்மயில் கடுப்ப' என வியந்து கூறியது, தலைவன் தலையளி செய்யானாயின் அந்த அழகு நலம் அழியும் என அவனுக்கு அறிவித்தற்கு ஆகும்.

உள்ளுறை : 'மேகம் மறைத்தலாலே பிடியைக் காணாது வருந்திய களிறு பிளிறும்' என்றது, தலைவனும் நின்னைக் காணாதே நின்போலவே துயருற்றிருப்பன் என உள்ளுறுத்துக் கூறித்தலைவியைத் தேற்றியதாம்; அவனை வரைந்து வருதற்குத் தூண்டியதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/222&oldid=1698384" இலிருந்து மீள்விக்கப்பட்டது