உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/225

விக்கிமூலம் இலிருந்து

225. இரந்தாரும் உள்ளாரோ?

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) வன்புறை எதிரழிந்தது; (2) பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.

[(து-வி.) (1) பிரிவாலே வருந்தி நலனழியும் தலைவியைத் தெளிவிக்க நினைத்த தோழி, அவள்பாற் சென்று, 'அவர் இன்றே வருவார்; வருந்தாதே' என்று வலியுறுத்திக் கூறுகின்றாள். தலைவன் வருகையைப் பல நாட்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து, அவன் வரவைக் காணாமல் வாடியிருக்கும் தலைவி, அதனைக் கேட்டதும், தன் பொங்கிவரும் துயரத்தை ஆற்ற மாட்டாதவளாகக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.

(2) காதற்பரத்தையானவள் தலைமகட்குப் பாங்காயினார் கேட்கும்படியாகத், 'தலைவன் தானே விரும்பி வந்து என்னைச் சேர்ந்திருப்பதனை நினைந்து, தலைவி உள்ளம் வருந்துவதனாலே யாது பயனோ?' எனச் செருக்கிக் கூறியதுமாம்.]


முருகுறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப்
பொருத யானை வெண்கோடு கடுப்ப
வாழை ஈன்ற வையேந்து கொழுமுகை
மெல்லியல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல், தோழி? திருந்திழைத்
தொய்யில் வனமுலை வரிவனப்பு இழப்பப்
பசந்தெழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நாரின் மார்பே!

தெளிவுரை : தோழீ! திருத்தமாகச் செய்யப் பெற்ற அணிகலனை அணிந்தவும், தொய்யிற் குழம்பாலே எழுதப் பெற்ற அழகினைக் கொண்டவுமான வனப்புடைய முலைகளது இரேகையின் அழகெல்லாம் இழந்துபோகும்படியாகப் பசலை நோயானது பாய்வதனாலே உண்டாகின்ற, பிரிவுத்துயராகிய வருத்தம் எல்லாம் நீங்குவதற்குத் தன்னைக் காதலித்தோர்க்கு உதவியாக அமையாத, அன்பற்ற மார்பினை உடையவன், நம் காதலன்!

முருகவேளைப் போன்ற வலிமையோடு, கடுமையான சினத்தை மிகுத்துக் கொண்டு போரிட்ட யானையினது குருதிக் கறைபடிந்த வெண்மையான கொம்புகளைப்போல, வாழையினது அப்பொழுதுதானே ஈன்ற கூர்மை பொருந்திய கொழுத்த முகையானது, வெவ்விய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடியிட்டுக் கொண்டையாகப் போட்டாற்போல, அதன் பூவோடும் கூடியதாக அசைந்து கொண்டிருக்கும், பெரிய மலைகளுக்குரிய நாடனாகிய அவனை, அதுகுறித்து இரந்து வேண்டினாரும் உளரோ, காண்!

சொற்பொருள் : முருகு – முருகப்பெருமான். முன்பு–வலிமை. சினம் செருக்கல்–சினத்தை மிகுத்துக்கொள்ளல்; சினத்தால் செருக்குறுதல். 'பொருத யானை வெண்கோடு' எனவே, அதன்மேல் படிந்துள்ள குருதிக்கறையும் பெற்றனம். வை–கூர்மை. முகை–மொட்டு. வெண்கோடு தாறுவிடுதலுக்கும், ஓதி பூவுக்கும் உவமை. துயல்வரல்–அசைதல். வரி – இரேகைகள். பருவரல் – பிரிவுத்துயரம். நார்–அன்பு.

விளக்கம் : 'தானே வந்து தலையளி செய்தவன், இன்று நாம் இவ்வாறு நலனழிந்து வாடியிருக்கும்போது, அருளற்றவனாய் நம்மை மறந்தானே?' என்பவள், 'இரந்தோர் உளர்கொல்?' என்கின்றாள். உதவாத தன்மையை நினைவாள் 'நாரில் மார்பு' என்கின்றனள். நார்–அன்பு.

"விரும்பினார்க்கு உதவாத அன்பற்ற அவன் மார்பினை இங்கு விரும்பினாரும் எவரேனும் உளரோ? அவன் பலர் மாட்டும் துய்க்கச் செல்லும் தன் பரத்தைமை இயல்பினாலே தூண்டப் பெற்று என்னிடத்தும் வந்தனன். இதுகொண்டு தலைவியும் என்னை நோவது எதன்பொருட்டோ?" எனப்பரத்தை கூறியதாக, இரண்டாவது துறைக்குப் பொருத்திப் பொருள் கொள்ளுக.

'வாழை ஈன்ற கொழுமுகையானது, பகையைக் கொன்று குருதிக்கறை படிந்து விளங்கும் யானைத் தந்தம் போல விளங்கும் மலைநாடன்' என்றனள். இதுதான், அவன் அன்புடையான் போலவே தோன்றினாலும், உள்ளத்தே பெரிதும் கொடுமை செய்யும் இயல்பினைக் கொண்டவனாகவும் இருக்கின்றான் எனக் குறிப்பால் கூறியதும் ஆகலாம்,

'தொய்யில்' என்பது, கொடிபோல மணச்சாந்தால் வரைவது; அதனை 'விரித்தல்' என்றும் கூறுவதுண்டு. இது பற்றியே அதனாலமையும் வனப்பை 'வரிவனப்பு' என்றனர்.

'பசந்தெழு பருவரல் கூறியது' தன்வயின் உரிமை கூறியதாம்; நயந்தோர்க்கு உதவாமை சொன்னது, அவன்வயிற் பரத்தைமை சுட்டியதாம் என்று அறிதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/225&oldid=1698387" இலிருந்து மீள்விக்கப்பட்டது