நற்றிணை-2/229
229. வாடையும் வந்து நின்றது!
- பாடியவர் :........ இளங்கண்ணனார் எனக் கொள்வர் உரையாசிரியர் ஔவை.
- திணை : பாலை.
- துறை : (1) தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது. (2) செலவழுங்குவித்த தூஉம் ஆம்.
[(து-வி.) (1) தலைமகன் பிரியக்கருதிய செய்தியைத் தலைவியிடஞ் சென்று பக்குவமாகச் சொல்லி அவளை அதற்கு இசைய வைத்த பின்னர், தலைவனிடம் வந்து, தோழி, அவன் செலவுக்கு உடன்பட்டு கூறியதாக அமைந்தது இச்செய்யுள். (2) தலைமகன் பிரிந்து போதலைத் தடுத்துவிடக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம்.]
சேறும் சேறும் என்றலின் பலபுலந்து
செல்மின் என்றல் யானஞ் சுவலே!
செல்லா தீமெனச் செப்பின் பல்லோர்
நிறத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே!
அதனால்,
செல்மின்; சென்றுவினை முடிமின்; சென்றாங்கு
5
அவண்நீ டாதல் ஓம்புமின்! யாமத்து
இழையணி யாகம் வடுக்கொள முயங்கி
உழையீ ராகவும் பனிப்போள், தமியே
குழைவான் கண்ணிடத் தீண்டித் தண்ணென
வாடிய இளமழைப் பின்றை
வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே!
தெளிவுரை : நாம் வினை கருதிப் பிரிந்தேமாய்ச் செல்வேம் செல்வேம் என்று நீர்தான் பலகாலும் கூறுதலினாலே, யான் தலைவியின் துயரை நினைந்தேனாய்ப் பலவாகப் புலந்து, 'செல்வீராக' என்று சொல்லுதற்கும் அஞ்சா நிற்பேன். 'நீர்தான் செல்லாதீராய் இவண் இருப்பதாக' என்று சொன்னால், பலருங் கூறாநிற்கும். மார்பில் எறியும் அம்புகளைப் போலுங் கடுஞ் சொற்களின் நிமித்தமாக அஞ்சா நிற்பேன். அதனாலே, நீரும் செல்வீராக; சென்று செயக் கருதும் வினையினையும் முடிப்பீராக; சென்ற அவ்விடத்திலே நெடுங்காலம் நிற்றலைக் கைவிடுதற்காவது பார்த்துக் கொள்வீராக! இரவின் நடுயாமத்தே கலன் அணிந்த மார்பகம் வடுக்கொள்ளுமாறு தழுவியபடி நீர் தாம் அருகிலேயே இருப்பீராயினும், அந்தச் சிறுபிரிவையும் நினைத்து நடுங்குபவள் தலைவி கண்டீர்! அவள்தான் தனியே இருந்து வருந்துமாறு, அகன்ற இடமெங்கணும் பரவியபடி நெருங்கித் தண்ணென்னும்படி பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர் வந்து நின்ற வாடைக் காற்றையும் கண்டீர் அல்லவோ! ஆயின், ஆராய்ந்து செய்யத்தகுவன கருதிச் செய்வீராக!
சொற்பொருள் : சேறும்–செல்வேம். புலந்து–வேறுபட்டு. நிறம்–மார்பு. புன் சொல்–பழிச் சொற்கள். நீடாதல்–நீட்டித்து இருத்தலைச் செய்யாதிருத்தலையாவது மேற்கொள்ளாமல். யாமம்–இரவின் நடு யாமம். உழையீர்–அருகிருப்பீர். பனிப்போள்–நீர் தாம் பிரிந்தும் போவீரோ எனச் சிறு பிரிவுகட்கே நடுங்குபவள். வாடை– வாடைக்காலம்.
விளக்கம் : 'பலபுலந்து' என்றது, தலைவனின் பிரிவைப் பற்றிக் குறிப்பினாலே அறிந்தாளான தலைவியின் நடுக்கமும் மெலிவும் ஆகிய பலவற்றையும் நினைந்து புலந்து என்றதாம். அதனால், தலைவனைச் 'செல்மின்' என்று சொல்ல முடியாதவளாகின்றாள். ஆயின், உலகியல் அறநெறி கருதிப் பிரிதலை மறுக்கவும் முடியாதவள், ஊரவர் உரைக்கும் பழிச்சொற்கள் குறித்து அஞ்சுகின்றாள். இதனால், இதனை நாடு காவலைக் குறித்த பிரிவு என்று கொள்ளுக; அதற்குப் போவதே கடன் என்பதும், அதனை மறுத்தல் பெண்களுக்கும் மரபாகாது என்பதும், அவன் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதும் தோன்றச் 'செல்மின்', 'சென்று வினை முடிமின்' என்கின்றனள். 'முயங்கி உழையீராகவும் பனிப்போள்' என்று தலைவியைக் கூறியது, அவள் பிரியின் உயிரினையும் தரித்திருப்பாளோ எனக் கலங்கியதாம். அதனை அவனும் நினைவிற் கொண்டு வினைமுடித்ததும் விரைய மீளவேண்டும் என்றதும் ஆம். 'வாடையும் கண்டீரோ' என்றது, அது உடனுறைந்து இன்புறுத்தற்கு உரிய காலம் என்பதை நினைவுபடுத்தி, அக்காலத்துப் பிரிவை ஆற்றியிருப்பதற்கு இயலாளாய்த் தலைவி கொள்ளும் நடுக்கத்தை உணர்த்தியதாம்.
செலவழுங்குவித்தல் என்னும் துறைக்கு ஏற்பப்பொருள் கொள்ளுவதாயின், பிரிவைக் கல்வியிற் பிரிவாகவும், இதனைக் கேட்டலுறும் தலைவன், அதனை அப்போதைக்கு கொள்க.