உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/238

விக்கிமூலம் இலிருந்து

238. பருவஞ் செய்த மாமழை!

பாடியவர் : கருவூர்க் கந்தரத்தனார்.
திணை : முல்லை.
துறை : தலைமகள் பருவங்கண்டு அழிந்தது.

[(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றானாகிய தலைமகன், தான் மீள்வதாகக் குறித்துச் சென்ற காலத்தின் வரவுக்குப் பின்னரும், தான் வராதானாகத், தலைவி; அதுவரையிலும் தன் பிரிவுத்துயரை ஆற்றியிருந்தவள், நெஞ்சழிந்து புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.]


வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங்
கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப
வண்டுவாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மாலதர் நண்ணிய
பருவஞ் செய்த கருவி மாமழை 5
அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே—மான்றுடன்
உரவுரும் உரறு நீரில் பரந்த
பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத் தானும்
இனிய வல்லநின் இடிநவில் குரலே! 10

தெளிவுரை : கோடையானது தாக்குதலினாலே பட்டுப் போயுள்ளகாடு; அக்காட்டினிடத்தே சிறியவாகப் பூவணிந்த கூந்தலையுடையவரான ஆயர் மகளிர் கூட்டமாகக் கூடியிருக்கின்ற அக்கூட்டத்தினைப் போல, வண்டுகள் வாய்திறந்து தேனைப்பருகுமாறு மொய்த்திருக்கும் இதழ்விரிந்த பிடவுகளை உடையதாயிருப்பது அந்திப் பொழுது. இவ்அந்திப்பொழுதிலே, யான் மிகவும் காமமயக்கங் கொண்டு வருந்துமாறு வந்து சேர்ந்தனை! கார்ப்பருவத்தைத் தோன்றச் செய்த கூட்டமான கார் மேகமே! நீதான், இவ்விடத்தே, அவரது மனநிலையையும் அறிந்து வந்திருக்கின்றாயோ? அவ்வாறு அறிந்து வருதலானது சான்றோர்க்கு ஒத்ததான செய்கையும் அல்லவே! ஒரு சேர மயங்கி நின்று இடித்து முழக்கும் தொழிலையுடைய தன்மையினாலே, காட்டிடத்துப் பரவியுள்ள பாம்புகளின் படம் மழுங்கிப் போகுமாறு செய்வாய். அஃதும் அல்லாமல், மாட்சிமைப்பட்ட, கனியாத நெஞ்சத்தவரான நம் தலைவரின் உள்ளத்தையும் கனியச் செய்வாயோ? அப்படிச் செய்யாமையினாலே, நின் இடியாற் பிறக்கும் முழக்கங்களும் எமக்கு இனிமையானவை ஆகா காண்! இவ்வாறு இவ்வாறு மேகத்தை நோக்கிப் புலம்புகிறாள் தலைவி.

சொற்பொருள் : வறம் – கோடை. கொல் – தாக்கி வருத்த. கார்ப்பருவத் தொடக்கத்தில் பிடவு மலரும் என்பதை, 'வண்டு வாய் திறப்பு விண்ட பிடவம்' என்றனர். 'பிடவுத் தளையவிழக் கார்ப்பெயல் செய்த காமரு மாலை' எனப்பிற சான்றோரும் இதனைக் கூறுவர் (நற். 256). மால் – மயக்கம். புரைவது – ஒப்பது.மான்றுடன் – மயக்கத்துடன்; இது எங்கும் இருள் கவிதலால் உண்டாவது.

விளக்கம் : அவரை வரத்தான் தந்திலை, அவர் நிலையையேனும் நீதான் அறிந்து சொல்லவல்லாயோ என்றால், அதுவுமில்லை. அவர் நெஞ்சைக் கனியப் பண்ணி உதவுவாய் என்பதும் இல்லை. என் நோயை மிகுதிப்படுத்தலே அன்றி, அது குறைதற்கான செயல் எதனையும் செய்யாமையின், நீதான் எனக்கு இனிய அல்லை என்கின்றனளும் ஆம்.

'பிறர் நோயும் தம் நோய்போற் போற்றி அறனறிதல், சான்றோர் கட்கெல்லாம் கடன் (கலி. 139)' என்பது உலகியல் ஆதலின், அதனைப் பேணாத நின் செயல் சான்றோர் செயலோடு ஒப்பாவதும் அன்று என்பதும் ஆம்.

குறித்த பருவத்து வாராது காலந்தாழ்த்தமையினாலே பாம்பினது நஞ்சுடைப் படத்தினுங் காட்டில் அவன் நெஞ்சம் கொடிதானது என்பாள், கனியா நெஞ்சத்தானும் என்கின்றனள் எனவும் கொள்க.' நோய்க்கு நஞ்சு மருந்தாமாறு போல, நோய்ப்பட்ட அவளுக்கு. அவன் நெஞ்சு மருந்தாகும் என்றதுமாம்.

நினக்குச் சால்பாவது, வினை கருதிச் சென்ற நம் காதலர் இருக்குமிடத்தும் சென்று முழக்கினையாய், 'நீர் தான். மீள்வதற்குக் குறித்த பருவம் வந்தது காண்பீர்' என்று அவர்க்கு அறிவுறுத்தலேயாகும்' என்றதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/238&oldid=1698403" இலிருந்து மீள்விக்கப்பட்டது