உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/245

விக்கிமூலம் இலிருந்து

245. சுரும்பிமிர் சுடர் நுதல்!

பாடியவர் : அல்லங்கீரனார்; அள்ளங் கீரனார் எனவும் பாடம்.
திணை : நெய்தல்.
துறை : குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.
[(து-வி.) தலைமகனுக்காகக் குறைமுடிக்க இசைந்த தோழி, தலைவியிடம் வந்து, அவள் கருத்தை வயப்படுத்தக் கருதியவளாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது. சொல்லாடலின் நுட்பம் அமைந்துள்ளமை காண்க]


நகையா கின்றே தோழி தகைய
அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை
மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத்
துணிநீர்ப் பௌவந் துணையோடு ஆடி
ஒழுகுநுண் நுசுப்பின் அகன்ற அல்குல் 5
தெளிதீங் கிளவி யாரை யோவென்
அரிதுபுணர் இன்னுயிர் வௌவிய நீயெனப்
பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்
தான்நம் அணங்குதல் அறியான் நம்மில்
தான்அணங் குற்றமை கூறிக் கானல் 10
சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப்
பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே.

தெளிவுரை : தோழீ! "அழகு மிகுதியான மலர்களையுடைய கழிமுள்ளியினின்றும் ஆய்ந்தெடுத்த மலர்களாலே தொடுத்த பூமாலையினை, நீலமணி போன்ற கூந்தலினிடத்தே வண்டுகள் வந்து மொய்க்கும்படியாகச் சூடிக்கொண்டனை! தெளிந்த நீரையுடையதான கடலிடத்தே தோழியரோடும் சென்று விளையாடினை! நேரிதாய் நுணுகிய இடையினையும், அகன்ற அல்குல் தடத்தையும், தெளிந்த இனிய சொல்லையும் உடையாளே! அரிதாகச் சேர்ந்திருக்கின்ற எனது இனிய உயிரைக் கவர்ந்த நீதான் யாவளோ?" என்று அவன் வினவினான். பூண்கள் மிகுதியான நெடுந்தேரிற் பூட்டிய குதிரைகளின் வாரைக் கையிலே தாங்கியபடியே நின்றான். தான் நம் மனத்தைக் கவர்ந்தானாய், நம்மை வருந்தச் செய்ததனை அறியாதவனாய், நம்மாலே தான் வருத்த முற்றமை மட்டுமே எடுத்துக் கூறினான். கானற் சோலைக் கண்ணே, வண்டுகள் மொய்த்த ஒளிகொண்ட நம் நெற்றியை நோக்கியவாறே, பெரிய கடல்நிலத் தலைவனான அவன், நம்மைத் தொழுதும் நின்றான். இதுதான் நகையுடையதாய் இராநின்றது காண்!

சொற்பொருள் : தகைய–தகுதியுடைய; தகுதியாவது கொய்து சூடுதற்கான தகைமை; அழகுற இதழ் விரிந்திருத்தலும் ஆம். முண்டகம்–கழிமுள்ளி. மணி–நீலமணி. தைஇ–ஒப்பனை செய்து. துணிநீர்–தெளிந்த நீர்; அலை மிகுதியற்றிருக்கும் கடல்நீர். 'துணை' என்றது தோழியரை ஒழுகு நுண் இடை–நேரிதாய் நுணுகிய இடை. தெளிதீம் கிளவி– தெளிந்த இனிய பேச்சு. 'அது புணர் இன்னுயிர்' என்றது, உயிரின் சிறப்புப்பற்றி; அது கழியின் மீளக் கொணர்ந்து புணர்த்தல் ஏலாமையின் இப்படிக் கூறினாள். அதனைக் கவர்தல் மிகக் கொடுமை என்பாள் 'வௌவிய நீ' என்று பழி கூறினான். அணங்குதல்–தாக்கி வருத்துதல்.

விளக்கம் : தலைவிக்கும் தலைவனுக்கும் முன்னரே ஏற்பட்டிருந்த உறவினைத் தான் அறிந்தமை புலப்படத் தான் ஏதும் அறியாதாள் போலக்கொண்டு தோழி இப்படி உரைக்கின்றாள். கானற் சோலைக்கண் அவன் தொழுது நின்றமை கூறினாள், அவன் தலைவியைக் காண விரும்பியே அவ்விடத்துக் காத்து நின்றதனைத் தான் உணர்ந்ததனைக் கூறினாள். அவன் செல்வக் குறைபாடின்மை கூறுவாள், 'தேர்ப்புரவி தாங்கி' என்றனள். அவன் காதன்மை மிகுதி கூறுவாள் 'தொழுது நின்றது' கூறினாள். அவனாலே தலைவியும் மயங்கியதைத் தான் உணர்ந்ததைக் கூறுவாள், 'தான் நம் அணங்குதல் அறியான்' என்றாள்.

பெருங்கடற் சேர்ப்பன் இவ்வாறு நம்மைக் கண்டு வினாயதும், தொழுததும் நகையாடுதற்குரிய செயலல்லவோ என்று களிப்போடு கூறுகின்றாள். இவற்றால் தலைவிக்குத் தோன்றும் மெய்ப்பாடுகளை அறிந்து அவளைத் தலைவனோடு சேர்த்தல் இதன் பயனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/245&oldid=1698412" இலிருந்து மீள்விக்கப்பட்டது