உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/261

விக்கிமூலம் இலிருந்து

261. அருளிலர் வாழி தோழி!

பாடியவர் : சேந்தண் பூதனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது (1) தலைமகள் இயற்பட மொழிந்தூஉம் ஆம்.

[(து-வி.) தலைவன் வந்து ஒரு சிறைப்புறமாக நிற்பதறிந்து அவன் மனதை வரைந்து வருதலிலே செலுத்தக் கருதிய தோழி, தலைவிக்குச் சொல்வது போல அமைந்த செய்யுள் இது. (2) தலைவி தன்னைத் தலைவன் வரைந்து கொள்ள முற்படாததனை நினைத்து வருந்தத், தோழி தலைவனை அது குறித்துப் பழித்துக் கூறுகின்றாள். அவளுக்குத் தன் கற்புத்தன்மை புலப்படத் தலைவி கூறுவதாக அமைந்ததும் இச்செய்யுள் ஆகலாம்.]


அருளிலர் வாழி தோழி? மின்னுவசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ்சுடர் கரந்த கடுஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகித்
தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்துக் 5
களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம்
வெளிறில் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும்
சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை
எருவை நறும்பூ நீடிய
பெருவரைச் சிறுநெறி வருத லானே, 10

தெளிவுரை : தோழி, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! நம் காதலர் நம்மாட்டு அருளில்லாதவரே ஆயினார்! மின்னல் பிளந்தபடியே இருளை நிறைத்து மேகங்கள் பரந்துள்ள வானத்திடத்தே, இடிகளும் முழக்கமிட்டபடி அதிர்கின்றன. வெம்மையான ஞாயிற்றை வெளியே தோன்றாதபடியாக மறைத்துக் கொண்டு நிறைந்த சூலையுடையவாயின கார்மேகங்கள்! அம்மேகங்கள் நெடியவும் பெரியவுமான குன்றுகளிடத்தே குறுகிய பல படலங்களாக இயங்குவனவாயின. இடையீடில்லாத பெரும் பெயலையும் அவை பெய்யத் தலைப்பட்டன. இத்தகையதான இரவின் நடுயாமத்தே, களிற்று யானையைப் பற்றிச் சுற்றிக் கொண்ட பெருஞ் சினத்தையுடைய மலைப்பாம்பானது, வெளிறே இல்லாதபடி முற்றவும் வயிரமேறிய மரத்தினையும் தன்னுடலாற் பிணித்து மிகவும் பற்றிப் புரட்டா நிற்கும். சந்தனமரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள இனிய மணம் கமழுகின்ற மலைப்பிளவினிடத்தே கொறுக்கச்சியின் நறிய பூக்கள் நீடி மலர்ந்துள்ள அத்தகைய பெரிய மலையிடத்துச் சிறுநெறியினைக் கடந்தும், அவர் வருதலை உடையர்! ஆதலானே, அவர் நம்பால் அருளிலர் கண்டாய்!

சொற்பொருள் : வசிபு–பிளந்து எழுந்து. இருள் தூங்கு விசும்பு–இருளடர்ந்து கருத்திருக்கும் வானம். ஏறு–இடியேறு. வெஞ்சுடர்–வெம்மையைச் செய்யும் சுடர். கமஞ்சூல்–நிறை சூல். நெடும் பெரும் குன்றம்–நெடிய பெரிய குன்றம். குறும் பல மறுகி–குறுகிய பலவாகப் படர்ந்து. தாவில் பெரும் பெயல்–குற்றமற்ற பெரும் பெயல். இடைவிடாத பெரு மழை. மாசுணம்–பாம்பு; களிறை அகப்படுத்திய பெருமலைப் பாம்பு. வெளிறில் காழ்மரம் –வெளிறேயின்றி முற்றவும் வயிரம் பாய்ந்த பெருமரம்; இதனைச் சந்தன மரமாகவும் கொள்ளலாம். போகிய–உயர்ந்து வளர்ந்த. எருவை–கொறுக்கச்சி.

விளக்கம் : அவர், தாம் வருகின்ற வழியிடையே அவருக்கு யாதாயினும் ஏதம் உண்டாதலை நினைந்து யாம் மிகவும் வருத்தமுறும்படி செய்பவராயினதால், அவர்க்கு நம்மீது அருள் இல்லை; இதனை விடுத்து, அவர் நம்மை வரைந்து வந்து மணந்து கொண்டு பிரியாத இன்பந்தருதலன்றோ அருண்மையாகும் என்று சொல்லி வரைவு கடாயதாகக் கொள்க.

அவர்தாம் வரைந்து கொள்ளாதே, யாம் பெரிதும் கலக்கமடையுமாறு இரவு நேரத்தே இவ்வழியைக் கடந்து வருதலால், நம்மீது அருளில்லாதவர் ஆயினார். ஆயினும், நாம் இறந்துபோதலைக் கருதினவராக நம் துயரைத் தீர்க்கும் கருத்தோடு வருதலால், அவர் எத்தகைய ஏதமுமற்றவராகி நெடிது வாழ்வாராக என்று கூறியதாக, இரண்டாவது துறைக்குப் பொருத்தி உரைகொள்க.

இதனைக் கேட்டலுறும் தலைவன் தலைவிமாட்டுத் தானும் ஆராத காதலை உடையோனாதலினாலே, அவளை விரைந்து மணந்து கூடி வாழ்தலிலே மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம். இதுவே, இப்படிச் சொல்வதன் பயனும் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/261&oldid=1698435" இலிருந்து மீள்விக்கப்பட்டது