உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/263

விக்கிமூலம் இலிருந்து

263. பிறைவனப்பு இழந்த நுதல்!

பாடியவர் : இளவெயினனார்.
திணை : நெய்தல்.
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.

[(து.வி.) தலைமகனானவன் ஒருசிறைப் புறமாக வந்திருப்பதை அறிந்த தோழி, அவனுக்குத் தலைவியை விரைய வந்து மணந்துகொள்ளல் வேண்டுமென்று அறிவுறுத்தக் கருதினவளாக, அவன் கேட்குமாறு, தலைவிக்குச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


பிறைவனப் பிழந்த நுதலும் யாழநின்
இறைவரை நில்லா வளையும் மறையாது
ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு
உரையவற் குரையா மாயினும் இரைவேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது 5
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு
முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக்
கரப்பவுங் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த தோழி! உண்கண் நீரே. 10

தெளிவுரை : தோழீ! பிறையைப்போன்ற தன் வனப்பை எல்லாம் இழந்துவிட்ட நினது நெற்றியையும், தங்குதற்கு உரியதான இடத்திலேயே நில்லாதபடி கழன்றோடும் நின் வளைகளையும், மறைத்தேனும் கூறாதே எதிராக வந்தே ஊரவர் அலர்தூற்றும் பழியுரைகளையும், நமக்குள்ள நாணத்தாலே மறைத்தேமாய், நாமும் அவருக்கு நம் துயரைப்பற்றி ஒரு சொல்லேனும் சொல்லேமாயினேம். எனினும்,

பசியது மிகுதியாலே இரைதேடி வருதற்குச் செல்லுதலைத் தான் விரும்பியபோதும், தலைச்சூலாலே உண்டாகிய இயங்கமாட்டாத தன் வருத்தத்தினாலே, கானற் கழிக்குத்தான் செல்லாது, கழனிக் கண்ணேயே தங்கியிருந்து விட்டது வளைந்த வாயையுடைய நாரையின் பேடை ஒன்று; அதற்கு, உடல் வளைந்த நாரைச் சேவலானது, கடலிடத்து மீனைப் பற்றிக் கொண்டுபோய் அன்போடுங் கொடுக்கும்; அத்தகைய மென்னிலமான கடற்கரைத் தலைவனைக் கண்டதும், பலகால் நாம் ஒளித்துக்கொள்ள முயலவும், அதற்கு உட்படாதே கைகடந்து, நின் மையுண்ட கண்களிலிருந்து வெளிப்படுகின்ற கண்ணீரே நம் வேட்கை நோயை எடுத்துச் சொல்வதாயிற்றே! இனி, யாமும் யாதுதான் செய்வோமோ?

சொற்பொருள் : இறை–முன்கை, கௌவை–பழிச்சொல். கடுஞ்சூல்–தலைச்சூல். கானல்–கழிக்கானல். கொடுவாய்–வளைந்த வாய். முடமுதிர் நாரை–உடல்வளைந்த நாரைச் சேவல். கைம்மிகல் –அளவு கடந்து வெளிப்படல்.

விளக்கம் : தலைமகள் தானுறு துயரைத் தானே தலைமகனுக்கு எடுத்துச் சொல்வது என்பது பெண்மை இயல்பு ஆகாமையின், அதனைக் காப்பதற்கு முயன்றனர் என்றனள். 'தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல், எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை' என்பது களவியல் விதியாகும் (தொல். களவு. 27). ஆயின், அவனைக் கண்டதும் பெருகிவழியும் கண்ணீர், அவனுக்கு அவளது நோயின் மிகுதியைக் காட்டும் என்பதாம்.

தன்னாட்டுப் பறவையும், தன் பேடைக்கு நலிவு தீர்த்தற்கு விரையச் செயல்படுகின்ற அன்புடைமையைக் காண்பவன், தானும் அதனை மேற்கொள்ளாததனை எண்ணி வெட்கமுற்று, விரையச் செயற்பட முனைவன் என்பதாம்.

தலைவியின் வனப்பிழந்த நெற்றி முதலாயினவற்றைத் தலைவன் கண்டறிந்தானல்லையோ எனின், அவனது ஆர்வத்து மிகுதியும், தலைவியது வேட்கை மிகுதியும் அவற்றைக் கண்டும் உணரவிடாது செய்தன வென்று கொள்ளுக.

உள்ளுறை : வயலிலே தங்கிய பேடைக்கு நாரைப் போத்து கடல்மீனைக் கொண்டுவந்து தந்து உதவுதல் போலத், தலைவியை இல்லத்தே கொண்டுவைத்துத் தானும் பொருளைத் தேடிவந்து அவளுடனே கூடி இன்பமான இல்வாழ்க்கையினை நடத்துதல் வேண்டும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/263&oldid=1698437" இலிருந்து மீள்விக்கப்பட்டது