உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/267

விக்கிமூலம் இலிருந்து

267. வந்துநின்ற வயமான் தோன்றல்!

பாடியவர் : கபிலர்.
திணை : நெய்தல்.
துறை : தோழி, காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப் புறமாகச் சொல்லியது (1); வரைவு கடாயதுமாம் (2)

[(து.வி.) களவுறவாலே தலைவியின் மேனியிடத்தே தோன்றிய மாற்றங்களைக் கண்ட தாய், அவளைத் தெய்வம் அணங்கிற்று எனக் கருதினள். அவளை இல்லத்தில் காவலிட்டுச் சிறையும் வைத்துப் பேணினள். அவ்வமயம் தலைவியது காமநோய் மிகுதலைக் கண்டு வருந்தின தோழி, ஒருநாள், தலைவன் ஒருசார் வந்து நிற்பதைக் கண்டவள், அவன் கேட்டு உணருமாறு, அவனைக் காணாதாள் போன்று, தனக்குள் சொல்லிக் கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது. (1); இவ்வாறு சொல்லி வரைவு கடாயதும் ஆகும்.(2)]


நொச்சி மாவரும் பன்ன கண்ண
எக்கர் ஞெண்டி னிருங்கிளைத் தொழுதி
இலங்கெயிற் றேஎர் இன்னகை மகளிர்
உணங்குதினை துழவும் கைபோல் ஞாழல்
மணங்கமழ் நறுவீ வரிக்குந் துறைவன் 5
தன்னொடு புணர்ந்த வின்னமர் கானல்
தனியே வருதல் நனிபுலம் புடைத்தென
வாரேல் மன்யான் வந்தனென் தெய்ய
சிறுநா வொண்மணித் தெள்ளிசை கடுப்ப
இனமீன் ஆர்கை யீண்டுபுள் ளொலிக்குரல் 10
இவைமகன் என்ன வளவை
வயமான் தோன்றல் வந்துநின் றனனே!

தெளிவுரை : நொச்சியது கரிய அரும்பினைப் போன்ற கண்களையுடையன ஞெண்டுகள். மணலிடத்தேயிருக்கும் அத்தகைய ஞெண்டினது பெரிதான சுற்றத்தோடுங்கூடிய கூட்டமானது, ஞாழலின் மணங்கமழும் உதிர்ந்த மலர்களைத் தம் கால்களாலே வரிவரியாக வரித்துக் கோலஞ் செய்தபடி யிருக்கும். அதுதான், விளங்குகின்ற பற்கள் ஒளிசெய்கின்ற அழகிய இனிய நகையினையுடைய, குன்றத்து மகளிர்கள் காயவைத்திருக்கும் தினையைத் தம் கை விரல்களாலே துழாவி விடுவதனைப் போன்றும் தோற்றும். அத்தகைய துறைக்கு உரியவன் தலைவன்! அவனோடு தலைவியைக் கூட்டுவித்த, விருப்பத்தையுடைய கானற் சோலையிடத்தே, தலைவியில்லாதே, யான் மட்டும் தனியே வருதல் மிகவும் வருத்தம் உடையதென்று கருதிய யானும், அவ்விடத்திற்குப் பெரும்பாலும் வாராதிருந்தேன். ஆயின், ஒருநாள் அவ்விடத்துக்கு யானும் வந்தேன். அவ்வேளையிலே, சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியினது தெளிந்த ஓசையைப் போல ஓசை எழுப்பியபடியே, மீனினத்தைத் தின்னுகின்றதற்கு வந்து கூடுகின்ற புட்களின் ஒலிக்குரலைக் கேட்டேன். கேட்டவள், 'இவ்வோசை நம் தலைமகனது தேரிற் கட்டியுள்ள மணியோசையினைப் போன்றது' என்று சொல்லுவதற்கு நினைந்த அளவிலேயே, வலிமிக்க குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தியபடியே அவனும் வந்து நின்றனன். ஆனால், இனி அவர்கள் கூட்டந்தான் இவ்விடத்தே நேர்தல் வாயாது!

சொற்பொருள் : மா அரும்பு – கருமையான பூவரும்பு. எக்கர் – மணல்மேடு. இருங்கிளைத் தொழுதி – பெரிய சுற்றமாகிய கூட்டம். துழவும் – துழாவி விடும்; இது தினை நிரலே போலக் காயும் பொருட்டாக மகளிர் செய்யும் வினை. ஞாழல் – சுரபுன்னை. வரிக்கும் – கோடிட்டுச் செல்லும். அமர் கானல் – விருப்பமுடைய கானற் சோலை; விருப்பம் உடையதானது அதன்கண் தலைவனும் தலைவியும் களவிற் கூடி இன்புற்றிருந்த காரணத்தால். நனி புலம்பு – மிகுதியான வருத்தம்; இது பழைய களிப்பையும் தற்காலத்துப் பிரிவையும் நினைதலால் உண்டாவது. வயமான் – வலிய குதிரைகள்.

விளக்கம் : புள்ளொலி கேட்டதனை மணியொலி என மயங்கினாள் என்றாலும், அவன் தேர் வந்ததும் உண்மையாதலின், இது படைத்துக் கூறியதெனக் கொள்க. அல்லது, அவன் தேர்வரவால் கலைந்து மேலெழுந்த புட்குரல் எனவும் கருதுக.

இற்செறிப்பாலும் காப்பு மிகுதியாலும் களவுக்கூட்டம் இனிமேல் வாயாது; தலைவியின் காமநோய் பெருகுதலால் அவள் இறந்து படுதலும் நிகழக் கூடும்; எனவே இனி விரைந்து அவளை வரைந்து மணந்து கொள்ளலே செயத்தக்கது என்று தலைவன் துணிவானாவது இதன் பயனாகும்.

இறைச்சி : ஞாழலின் உதிர்ந்த பூவை ஞெண்டு துழவும் என்றது, தலைவனைப் பிரிந்து வருந்தி வாடியவளாக இற்செறிக்கப் பெற்றிருப்பாளான தலைவியை, ஏதிலாட்டியர் பழிச்சொற்கள் பலவுங்கூறி வருத்தா நிற்பர் என்றதாம். காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்தே கூறினமையால், இவ்வாறு கூறுதலும் அறத்தொடு பொருந்துவ தென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/267&oldid=1698454" இலிருந்து மீள்விக்கப்பட்டது