உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/271

விக்கிமூலம் இலிருந்து

271. தாவின்று கழிக கூற்றே!

பாடியவர் : ........
திணை : பாலை.
துறை : மனை மருண்டு சொல்லியது.

[(து.வி.) தன் மகள், தான் விரும்பிய காதலனுடனே, தன் வீட்டினின்றும் நீங்கிச் சென்றுவிட்டனளாக, அதனால் எழுந்த பழியுரைகளைக் கேட்டுப் பொறுக்கவியலாதவளாயினாள் அவள் தாய். அவள், தன் மனையிடத்தே இருக்க முடியாதபடி மனம் மயங்கியவளாகப் புலம்பிக் கூறுவது போன்று அமைந்த செய்யுள் இது.]


இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தா தெருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனையொடு எம்மிவண் ஒழியச்
செல்பெருங் காளை பொய்ம்மருண்டு சேய்நாட்டுச்
சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் 5
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த
குவளை யுண்கண் என்மகளோ ரன்ன
செய்போழ் வெட்டிய பொய்த லாயம்
மாலைவிரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு 10
மாயிருந் தாழி கவிப்பத்
தாவின்று கழிகளற் கொள்ளாக் கூற்றே.

தெளிவுரை : கரிய எருமையினது அணித்தாக ஈனப்பெற்ற பெரிய செவியையுடைய கன்றானது, பசிய பூந்தாதுகள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவினிடத்தே, தங்கப் பெற்ற துயிலை மேற்கொண்டு உறங்கா நிற்கும், செழுமையும் தண்மையும் கொண்டது இம்மனையாகும். இதனோடு, எம்மையும் இங்கே தனித்திருக்கவிட்டு, எம்மகளும், தன்னோடு வருகின்ற பெரிய காளையாவானின் பொய்ச்சொற்களாலே மயங்கியவளாக, நெடுந்தூரத்தேயுள்ள அவன் நாட்டை நோக்கியும் செல்வாளாயினள். சுவையான காய்களையுடைய நெல்லி மரங்கள் செறிவுற்றுப் போவாரை மேற்போகாதபடி தடுக்கின்ற நெல்லிமரச் சோலையினுள்ளே, தரையிலே வீழ்ந்து கிடந்த கடைதிரண்ட காய்களை ஒருசேரத்தின்று, வறண்ட சுனையிடத்தேயுள்ள மிகச்சிறிதளவான நீரையும் குடித்தவளாக, அவளும் போவாளோ! குவளை மலரைப் போலத் தோன்றும் மையுண்ட கண்களை உடையவளான அத்தகைய எம்மகள் தான்—

சிவந்த பனங்குருத்தை வெட்டிப் பதப்படுமாறு பனியிற் போடுதலாகிய மாலைப்பொழுதின் பின்னே, நிலவு விரிகின்றதான இரவுப்பொழுதிலே, அவளைத் தேடிப் பின்சென்றவர் அவளை மீட்டுக் கொணர, அவள் மனைக்கு மீண்டுவருகின்ற அந்தத் தோற்றுவாடிய நிலையைக் காணற்கும், என்னை விதி விதித்துவிட்டதே! அதற்கு முன்பேயே என்னைப் பெரிய தாழியிலேயிட்டுக் கவிக்கும்படியாக, என் உயிரைக் கொண்டு போகாத கூற்றமானது, தானும் தன் வலியழிந்ததாய்த், தன்னையே தாழியிலிட்டுப் புதைக்கும்படியாக இறந்து ஒழியக் கடவதாகுக!

சொற்பொருள் : வைகுதுயில் – தங்கப் பெற்ற உறக்கம். செழுந்தண் மனை – செழுமையும், மரச்செறிவால் தண்மையுங் கொண்டதான மனை. பெருங்காளை – பெரிய காளை; பெரிய என்றது எள்ளற் குறிப்பு. பொய் மருண்டு – பொய்யுரைகளாலே மயங்கி; பொய் என்றது அவன் தன் மகட்குச் சொல்லிய உறுதிமொழிகளை; அது வாயாமற்படி அவளைத் தன் வீட்டார் மீட்டுக் கொணர்வர் என்பதனால் இப்படிக் கூறினள். போக்கரும் பொங்கர் – போக்கைத் தடுக்கும் சோலை; போதற்கு அரிதாயது, நெல்லிக் காய்கள் காலை உறுத்தலாலும் தன்னத் தூண்டுதலாலும் வீசுனை – வறண்ட சுனை. புறங்காண்டல் – எண்ணம் நிறைவேறாமல் தோல்வியுற்று மீண்டதைக் காணுதல்; இதனால், அவள் கருத்தும் வாயாது, குடிக்குப் பழியும் வந்தடைதலின், அதனைக் காணாமுன், தான் உயிரைவிட்டுவிட விரும்புகின்றாள் தாய். தாழி கவிப்ப – தாழியாற் கவித்து மூட; இது இறந்தபின் உடலைப் புதைக்கும் பண்டைய தமிழ் மரபு. தாவின்று – வலியழிந்து.

விளக்கம் : பனையின் குருத்தோலையை வெட்டி விரித்துப் பனியிற் பதப்படுமாறு வைத்தல் இன்றும் காணும் வழக்கம் ஆகும். தன் மகளின் நல்ல வாழ்விலே ஆர்வங் கொண்ட தாயது மனம், இவ்வாறு அவள் செய்த பழிக்குரிய செயலாலே நொந்து நலிவுற்று வெதும்புகின்றது. 'தமர் அவளை மீட்டு வருவர்' என்பது, அவள் கொண்ட நம்பிக்கை. அதற்குள் தன் உயிரையே விட்டுவிட நினைக்கின்றாள் அவள்.

இறைச்சி : 'எருமைக் கன்றும் பூந்தாதிலே கிடந்து துயில் கொள்ளும்' என்றது, அத்தகைய வளமனை வாழ்வையும் விரும்பாது, தன் காதலனின் மார்பே பாயலாகத் துயிலக் கருதி, அவனுடன் போகிய தன் மகளது காதற் பெருக்கை வியந்து கூறியதாகும். அதனை வாழ்த்தி உள்ளம் மகிழ்வதும் ஆகும். இதனால், அவள் தமரின் கண்ணிற் படாதபடி, தன் காதலனுடன் அவனூர்க்கே நலமாகச் சென்று சேர்ந்து, அவனையே மணந்து, இன்பமான இல்வாழ்விலே திளைப்பதையே அந்த அன்னை விரும்புகின்றாள் என்பதும், அவளைத் தமர் மீட்டுக் கொணர்தலை அவள் விரும்பவில்லை என்பதும் விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/271&oldid=1698464" இலிருந்து மீள்விக்கப்பட்டது