உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/290

விக்கிமூலம் இலிருந்து

290. புதுமலர் ஊதும் வண்டு !

பாடியவர் : மருதனிளநாகனார்.
திணை : மருதம்.
துறை : (1) பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச்சொல்லியது; (2) பரத்தையிற் பிரிய வாயிலாய்ப் புக்க பாணன் கேட்பத் தோழி சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) பரத்தை தலைவியின் ஊடலைத் தணிக்க நினைக்கின்றாள். விறலியிடம் கூறுவாள் போலத் தலைவனின் இயல்பை உரைத்து, அவனைத் தலைவியும் ஏற்றுக் கொள்ளத் தூண்டுவதுபோல் அமைந்த செய்யுள் இது. (1). பரத்தைமை கொண்டிருந்த தலைவன், தன் தலைவியை மீளவும் நாடிவர விரும்பினனாய்ப் பாணனை முதற்கண் வாயிலாக அனுப்புகின்றான். அவன் கேட்கத் தலைவியின் தோழி தலைவிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுளும் இது.]


வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முதுபகடு ஆரும் ஊரன்
தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொல்
கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே 5
நீயே பெருநலத் தகையே அவனே
நெடுநீப் பொய்கை நடுநாள் எய்தித்
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டென மொழிப மகனென் னாரே.

தெளிவுரை : முள்ளைப் போன்றவான பற்களை உடையாய்! வயலிடத்தேயுள்ள வெள்ளிய ஆம்பற் பூவானது களத்துக் கதிர்ச்சூட்டிடத்தே மலர்ந்திருக்கும். அண்மையிற் கன்றீன்ற பசுவானது அப்பூக்களைத் தின்னும். அது தின்ற தன் பின்னுள்ள எஞ்சியதை ஓய்ந்த நடையையுடைய பகடு மிகுதியாகத் தின்னும். அத்தகைய ஊருடையான் தலைவன். அவன் தொடர்பினை நீயும் விரும்பினையானால் என் சொற்களையும் நின் மனத்திற் கொள்வாயாக! நீயோதான் பெருநலங்கொண்ட தகுதிப்பாட்டினை உடையவள். அவனோவென்றால், நெடிய நீரையுடைய பொய்கையிடத்தே நடு நாளிலே சென்றடைந்தானாய்த், தண்ணிதாக மணம் கமழ்கின்ற புதுப்பூக்களை ஊதித் தேனுண்ணுகின்ற வண்டாவான் என்றே அவனையறிந்தோர் சொல்வார்கள். அல்லாமல், அவனை ஆண்மகன் என்று எவரும் கூறார். ஆதலின், அவனைப் புலத்தலாற் பயன் யாது கொல்லோ?

கருத்து : 'அவனியல்பு பரத்தைமை விரும்பலே என்று கொண்டு அதற்காக அவன்பால் ஊடாதே என்பதாம்.

சொற்பொருள் : ஆம்பல்–நீர்வளமிகுதியைக் காட்டுவது. சூடு–நெற்சூடு; கதிர்க்கட்டுகள் அடுக்கி வைக்கும்போது சூடு மிகவுண்டாவதானால் 'சூடு' என்றனர். புதுப்பூ–அன்று மலர்ந்த பூ. மிச்சில்–எஞ்சிய பூக்கள். ஓய்விடுநடை–காலோய்ந்து விட்டுவிட்டு நடக்கும் நடை; இது முதிய பகட்டின் நடை. ஓய்தல் தளர்வால் உண்டாவது. முள் எயிறு – முட்போலும் கூர் எயிறு. நலத்தகை – நலமாம் தகைமை; நலம் அழகும் எழிலும்,

விளக்கம் : நள்ளிரவிலே சேரிபுகுந்து புதுப்புதுப் பரத்தையரை நாடித் திரிபவன் என்பதனால், நடுயாமத்தே மலரும் ஆம்பற் பூவையுண்ணும் வண்டென்று கூறினள்.

உள்ளுறை : புனிற்றா தின்று சுழித்த மிச்சிலை முதுபகடானது சென்று மிகுதியாகத் தின்றாற்போல, நின்னால் இளமைச் செவ்வியெல்லாம் உண்டு கழிக்கப் பெற்றானாகிய தலைவனைப் பிற பெண்டிரும் நுகர்வாராயினர்; அதுதான் நினக்கு ஏதும் இழுக்கம் தருவதன்று என்பதாம்.

இரண்டாவது துறைக்கு ஏற்பக் கொள்வதாயின், 'முள் எயிற்றோய்! நீதான் தலைவனது தொடர்பை விரும்பினையானால், என் சொல்லை ஏற்றுக் கொள்ளலும் வேண்டா. நீதான் மிக்கழகு உடையவளாயிருந்தும் நின்னைப் பிரியாது உடனிருந்து வாழும் ஆண்மகன் அவன் அல்லன்; புதுப்புது மலரை நாடிச்சென்று நுகர்ந்து கழிக்கும் வண்டுபோல் பவன் அவன் என்பர் உலகோர். இதனை நீயும் கருதுவாயாக' என்பதாம்.

'சூடுதரு புதுப்பூ' என்பதனைச் சூடுதற்காகக் கொய்யப்படும் புதுப்பூ எனினும் பொருந்தும். இதனைக் கொய்து சூடுவது மரபு. அவர் சூடியபின் கழித்துப் போட்ட மிச்சிலைப் புனிற்றாவும் ஓய்பகடும் பின்னர்த் தின்பவாயின என்க.

மேற்கோள் : 'தாய்போற் கழறித் தழீஇக் கோடல்' என்னும் சூத்திரவுரையில் இப்பாட்டை இளம்பூரணனார் காட்டுவர். 'புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்' என்பதன் உரையில் இச்செய்யுளைக் காட்டி, இதனுள், "நீ இளமைச் செவ்வி எல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற்போலப், பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று' எனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ, அவள் அவனோடு கட்டில்வரை எய்தியிருக்கின்றாள் என்று ஊரார் கூறுகின்ற சொல்லை, என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாது எனவும், அவனை வண்டு என்பதன்றி மகன் என்னார் ஆதலின், அவன் கடப்பாட்டாண்மை அது என்றும் கூறினாள்' என்றும், 'என் சொற் கொள்ளன் மாதோ' என்பதற்கு, 'என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ, விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். (தொல். பொருள். 171,151)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/290&oldid=1698511" இலிருந்து மீள்விக்கப்பட்டது