நற்றிணை-2/294
294. நோயும் இன்பமும் ஆகின்று !
- பாடியவர் : புதுக்கயத்து வண்ணக்கன். கம்பூர்கிழான்.
- திணை : குறிஞ்சி.
- துறை : மணமகனை உட்புக்க தோழி தலைமகளது கவின்கண்டு சொல்லியது.
[(து.வி.) தலைவியைத் தன்னுடனே அழைத்துப் போய் மணந்து கொண்டு, தலைவன் இல்வாழ்க்கை நடத்துவதனைக் கண்டு, தோழி வியந்து கூறியது.]
தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய்பயின்று
எருவை நீடிய பெருவரை அகந்தொறும்
தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇக்
5
கொன்ற யானைக் கோடுகண்டு அன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழுஞ் சாரல்
விலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே
தெளிவுரை : தோழீ! பெரிய மலையிடத்து உட்பகுதி தோறும் மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருப்பதோடு கொருக்கச்சியும் முளைத்துப் பரவியிருக்கும். அவ்விடத்தே தொன்றுதொட்டே வருகின்ற பகையாகிய புலியோடும் மாறுபாடு மிகுதியினாலே சினஞ்சிறந்தது களிறு ஒன்று. அப்புலியைத் தன் கோட்டாலே குத்தியும் கொன்றது. அதனாலே, குருதிக்கறை படிந்த அதன் கொம்பைப் போலச் சிவந்த புறத்தையுடைய கொழுவிய காந்தள் முகையினது அரும்பும் அவிழ்ந்தது. அதனால் அம்மலைப்பக்க மெல்லாம் மணங்கமழ்வதாயிற்று. அத்தகையமலைச்சாரலைக் கொண்ட, குறுக்கிட்டுக் கிடக்கும், விளங்கும் மலைநாட்டிற்கு உரியவன் தலைவன்! அவன் அகன்ற மார்பானது தீயையும் காற்றையும் ஆகாயமானது ஒருங்கே பெற்றாற்போலத் துன்பமாகவும் இன்பமாகவும் அதுதானே ஆயிற்றுக்காண். இது பொய்யன்று என்றும் நீதான் அறிவாயாக!
கருத்து : தீயாக வருத்தித் துயர் தந்த அவன் மார்பே, இதுபோது மென்காற்றாகி இன்பமும் தருவதாயிற்று என்பதாம்.
சொற்பொருள் : வளி–காற்று. நோய்–பிரிவாலுண்டாகும் காமநோய். இன்பம்–அணைத்து மகிழ்தலால் அடையும் இன்பம். மாயம் – பொய்ம்மை. எருவை – கொருக்கச்சி. தொன்று உறை துப்பு–பழைமையாக உண்டான பகைமை. முரண்–மாறுபாடு. செப்புடை–சிவந்த புறப் பகுதி. 'காந்தள்' என்றது செங்காந்தளை. இலங்குதல்–விளங்குதல்.
உள்ளுரை :காந்தள் சிலம்பிடமெங்கும் கமழும் என்றது, தலைவனது அன்பு கலந்த இல்வாழ்க்கையின் செவ்வி அவனூரினராலும் தலைவியின் ஊரினராலும் உவந்து பாராட்டப்பெறும் சிறப்பினது என்பதாம்.
விளக்கம் : அவன் பரந்த மார்பை விசும்புக்கும், பிரிவுப் பெருநோயை தீக்கும், உடனுறைந்து தரும் இன்பத்தை வளிக்கும் பொருத்திக் காண்க. வெம்மையை ஆற்றும் வளி என்று கொள்க. 'மாயம்' என்றது இல்லாத ஒன்றை உள்ளது போலத் தோன்றக் காண்டல். காந்தள் முகையானது புலியைக் கொன்ற குருதிக்கறை படிந்த யானைக் கோடு போலத் தோற்றுமாயினும், அதுதான் எத்தகைய வன்கண்மையும் இல்லாததாய், சிலம்புடன் நறுமணம் கமழும் நற்செயலையே செய்தலைப்போலத், தலைவனும் கொடியவனே போலப் பிரிவுப் பெருநோயால் வருத்தமுறச் செய்யினும், அதனைப் போக்கி, மென்காற்றென வந்து அணைத்து இன்பம் செய்வானாக அமைந்தனன் என்பதாம். தலைவியை எண்ணி வருந்திய தோழியானவள் அவள் நடத்திய இல்வாழ்க்கைச் செவ்வியைக் கண்டு மகிழ்ந்து கூறுகின்றாள் என்றும் கொள்க. தோழிக்குத் தலைவி கூறுவதாகவும் உரைக்கலாம்.