நற்றிணை-2/307
307. அவன் துயர் காண்போம்!
- பாடியவர் : அம்மூவனார்.
- திணை : நெய்தல்.
- துறை : குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
[(து-வி.) தலைமகன் குறித்தபடி, குறித்த காலத்தில் வராததால், தலைவியின் பிரிவுத் துயரம் கரைகடந்து பெரிதாகின்றது. 'அவன் சொற்பிழையானாய் வருவான்' என்று வற்புறுத்திக் கூறுகின்றாள் தோழி. அவள், அதனை மிகவும் நயமாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]
கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
பெயர்பட வியங்கிய இளையரும் ஒலிப்பர்
கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்த
திதலை யல்குல் நலம்பா ராட்டிய
வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்
5
இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மாவரை மறைகம் வம்மதி பானாள்
பூவிரி கானல் புணர்குறி வந்துநம்
மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன்
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே!
10
தெளிவுரை : தோழீ! விருப்பந்தரும் செலவைக்கொண்ட குதிரை பூட்டிய, நெடிய தேரினது மணியும் அதோ ஒலிக்கின்றது. பெயர்ந்துபட நடக்கின்ற ஏவல் இளைஞரும் அதோ ஆரவாரிக்கின்றனர். கடலாட்டு விழாவினை முன்னிட்டுப் பெரிய அணிகளாலே பொலிவுற்றிருக்கின்ற, திதலை படர்ந்த நின் அல்குலது நலத்தைப் பாராட்டுதலின் பொருட்டாக, நீண்ட மணல்பரந்த நெய்தல்நிலத் தலைவனும் இன்னே வருவான் கண்டாய்! அவன் இதுகாறும் வாராதானாகக் காலந்தாழ்த்து நம்மையும் வருத்தியவனாதலின்—
இந்நடுயாமத்தே—மலர் விரிந்த கானற் சோலைக் கண்ணேயுள்ள நாம், அவனைக் களவிலே சேர்கின்ற குறியிடத்திற்கு அவனும் வந்து, மெல்லிய பூங்கொத்துக்களையுடைய நறும் பொழிலினிடத்தே நம்மைக் காணாதவனாகி, அவன் படுகின்ற அல்லல் மிகுந்த அரிய அவலத்தையும்—நம் மனையருகே வளைந்து படர்ந்துள்ள குடமுழாப்போலும் அடியையுடைய புன்னையினது, கரிய அடிமரத்தின் பின்னாக மறைந்திருந்து, நாமும் சிறிதுபோது காணலாம்—வருவாயாக!
கருத்து : 'அவன் தவறாதே வருவான்' என்று, தலைவியின் துயரத்தை மாற்ற முயல்கின்றாள் தோழி என்பதாம்.
சொற்பொருள் : கவர்பரி – விருப்பந்தரும் செலவுடைய குதிரை; 'கவர்வு விருப்பாகும்' என்பது தொல்காப்பியம். நெடுந்தேர் – நெடிதான தேர்; இது தலைவனது குடிப் பெருமை சுட்டியதாகும். பெயர்பட – பெயர்ந்து போவதற்கு. இளையர் – ஏவலிளைஞர்; அன்றித் தேரின் வரவைக் கண்டு வழிவிட்டு ஒதுங்கிப்போகும் பரதவர் இளையர் என்றும் கருதலாம். கடலாடு விழாவிடை – கடலாட்டுப் பூணும் விழாவினிடத்தே; 'கடலாடு வியலிடை' எனவும் பாடம்; வியலிடை – அகன்ற கடற்றுறையிடம். பேரணி – பெரிதான அழகு செய்யும் அணிவகைகள்; சிறப்பான அலங்காரங்கள். திதலை–தேமற் புள்ளிகள். வார்மணல் – நெடிதாகப் பரந்துகிடக்கும் கடற்கரை மணற்பாங்கு. சேர்ப்பன் – நெய்தல் நிலத் தலைவன். வாங்கிய – வளைந்த. 'நிழற்பட ஓங்கிய' என்றும் பாடம். முழவு முதல் – முழாப் போன்று பருத்த அடிமரப் பகுதி. மா – கரிய. பூவிரி கானல் – பூக்கள் மலிந்த கானற் சோலை. அரும்படர் – அரிய அவலநோய்; தீர்த்தற்கரிய கவலை.
விளக்கம் : 'புணர்குறி' என்றது, புணர்தற்காகச் சுட்டப் பெற்ற குறி இடம். இதனை இரவுக்குறிப் போதில் தலைவியே சுட்டுவாள் என்பது மரபு; 'களஞ் சுட்டுக் கிளவி கிழவியதாகும்' என்பது விதி (தொல். பொ. 126). இவ்வாறு கூறுவதன்மூலம், தலைவியின் துயரத்தைச் சிறிதுபொழுதுக்கு ஆற்றுவித்து, அவளை வீட்டிற்கு அழைத்தேக முற்படுகின்றாள் தோழி! என்றும் கருதுக. 'தலைவன் வருவான்' என்பது தோழியின் கற்பனைச் செய்தியே யாதலும் அறிக.
மேற்கோள் : (1) 'நாற்றமும் தோற்றமும்' என்னும் தொல்காப்பியச் சூத்திர உரையுள் (தொ. பொ. 112), 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்' என வருமிடத்து, 'நயம்புரி இடத்தினும்' என்றதனால், களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க' என்று கூறி, இச்செய்யுளைக் காட்டி, 'இது வருகின்றான் எனக் கூறியது' என்பர் ஆசிரியர் இளம்பூரணனார்.(2) 'இது தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி, அவன் வருத்தம் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ' எனக் கூறியது என்று, நச்சினார்க்கினியரும் இச்செய்யுளைக் காட்டுவர் (தொல். பொ. 114 சூ.உரை.).