உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/311

விக்கிமூலம் இலிருந்து

311. ஒன்றே கானலது பழி!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.

[(து-வி.) கானற் சோலையிலே கலந்து பிரிந்த தலைவனை, மீண்டும் வரக்காணாத தலைவி அதனால் சோர்கின்றாள். அது குறித்து ஊரிலே பழிச்சொற்கள் எழுகின்றன. அப்பழிப் பேச்சு தலைவியை மேலும் வாட்டுகின்றது. தலைவியின் வாட்டத்தை மாற்றக் கருதிய தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே
வறப்பின், மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்
அழியா மரபின்நம் மூதூர் நன்றே 5
கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கிச்
சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே
ஒன்றே தோழிநங் கானலது பழியே
கருங்கோட்டுப் புன்னை மலரில்தா தருந்தி
இருங்களிப் பிரசம் ஊதஅவர் 10
நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிதே!

தெளிவுரை : தோழீ! அழியாத மரபினை உடையது நம் பழைய ஊர். மழை பெய்தால், எங்கும் உலவுகின்ற உழை என்னும் மானினங்கள் செறியத் தோன்றப் பெற்றதாயும், பெருங் கதிர்களைக்கொண்ட நெல்லின் புதுவருவாயினை உடையதாயும் இதுதான் விளங்கும். அம்மழைதான் பெய்யாது வறண்டுவிட்டதானாலோ, பெரிய கழியிடத்துள்ள முள்ளிச் செடிகளின் மலர்கள் உதிர்ந்து பரந்தும், சேறு எல்லாம் ஈரமற்றுக் காய்ந்தும் விளங்கும், கரிய கழிப்பாங்காகிய சேற்றிடம் எங்கணும், வெள்ளுப்பும் விளையா நிற்கும். இவையும் அன்றி, கொழுமையான மீன்களைச் சுடுகின்றதால் எழுகின்ற புகையானது நம்மூர்த் தெருவெல்லாம் எப்போதும் பெருகப் பரந்து கலந்தும் விளங்கும். முன்பு, சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களையுடைய கடல்துறையும் நமக்கு இனிதாயிருந்தது! இருந்தும், ஒன்றுமட்டும் நம் கானற்பகுதிக்குப் பழி தருவதாகின்றது. கரிய கிளைகளையுடைய புன்னை மலரிலுள்ள தேனைப் பருகிக் களிப்பினைப் பெற்ற கருமையான வண்டுகள், நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலிசெய்ய, நம் காதலராகிய அவருடைய நெடிய தேரினது, செவிக்கு இனிய ஒலியைக் கேட்டல்தான் நமக்கு அரிதாகிவிட்டதே!

கருத்து : இக்குறை ஒன்றுமட்டும் இன்றாயின், 'நம்மூரும் அவர் உறவும் நமக்குக் குறைவற்ற இன்பந்தருவனவாய் ஆகுமல்லவோ!' என்றதாம்.

சொற்பொருள் : வெறுத்தல் – செறிதல். உழை – மான் வகையுள் ஒன்று. இருங்கதிர் – பெரிய நெற்கதிர். முண்டகம் – நீர் முள்ளிச் செடி. செறு – வயல்; உப்புப் பாத்தி; செறுக்கப்பட்டது செறு; செறுதல் – தகைதல். மரபு – இயல்பு. தாது – பூந்தாது; இங்கு தேனைச் சுட்டியது. களி – வண்டு

விளக்கம் : 'வான் பெய்யினும் வறப்பினும் வளம் குன்றா வாழ்வினர் நெய்தல் நில மக்கள்' என்னும் உண்மையும் இதனால் கூறப்பட்டது. இயற்கையின் மாறுபாட்டானும் வருந்துதல் இலமாகிய யாம், நம் காதலனின் வன்செயலாலே ஊரில் உண்டாகிய பழிச்சொல்லைப் பெற்று வருந்துவம் ஆயினேம் என்பதாம். 'சிறு வீ ஞாழல் துறையும் ஆர் இனிதே' என்றது, அதுதான் முன்னர்த் தலைவனை முதற்கண் கண்டு கூடியின்புற்ற இடமாதலால், 'புன்னை மலரில் தாதருந்தி இருங்களிப் பிரசம் ஊத' என்றது, அவர்கள் மீளவும் சந்திப்பதற்குக் குறித்த இடம். அங்கும் அவனைக் காணாது இவர்கள் வருந்துகின்றனர். இதனைக் கேட்கும் தலைவி தன் பெருமிதத்தை உணர்ந்தாளாய்ச் சற்று அமைதி அடைவாள் என்பதாம்.

'மழை பெய்யாது போயினும் உப்பு விளையும்' என்பது, மழை பெய்யினும் பெய்யாது போயினும் அழியாத வளமையுடையது நம் ஊர் என்று உரைத்ததாம். தலைவி ஆற்றியிருப்பாள் என்பது இதன் உட்கருத்து ஆகும்.

பயன் : எல்லாமே நன்றாக அமையப்பெற்ற நமக்குத் தலைவனுடன் நாம் கொண்ட உறவும் முடிவில் நல்லபடியாகவே மண நிகழ்ச்சியாக முடியும் என்று தேற்றியதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/311&oldid=1698572" இலிருந்து மீள்விக்கப்பட்டது