உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/314

விக்கிமூலம் இலிருந்து

314. மொழி வன்மையின் பொய்த்தனர்!

பாடியவர் : முப்பேர் நாகனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.

[(து-வி.) பிரிந்து போயின தலைவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற பருவமும் வந்து கழிந்தது. அவனை வரக்காணாதாளான தலைவியின் துயரமும் பெரிதாகின்றது. அவள் தன் நெஞ்சழிந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார்
வாழ்நாள் வகையளவு அறிநரும் இல்லை
மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி
நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும்பொறிக் கொண்ட கொம்மையம் புகர்பில் 5
கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல் என்று தாம்
மொழிவன் மையின் பொய்த்தனர் வாழிய
நொடிவிடு வன்ன காய்விடு கள்ளி
அலங்கலம் பாவை ஏறிப் புலம்புகொள் 10
புன்புறா நீளிடைச் சென்றிசி னோரே!

தெளிவுரை : நெஞ்சமே! காய்கள் நொடித்துவிட்டாற் போல ஒலியோடு தெறிக்கின்ற தன்மையுடையது கள்ளி. அக்கள்ளியின், அசையும் பாவைபோலத் தோன்றும் கிளையிலே ஏறித், தனியே துயருடன் இருந்தது ஆண் புறா ஒன்று. அது தான், தான் விரும்பிய தன் பெடையைக் புணர்குறிப்போடு கூவி அழைத்தபடியே இருக்கும். வெயிலின் வெம்மையானது சற்றும் குறையாது நீண்டபடியிருக்கின்ற, அத்தகைய சுரத்தின் கண்ணே, நம்மைப் பிரிந்தும் சென்றவர் நம் தலைவர். அவர்தாம்—

யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீளவும் இளமைப் பருவத்தைத் தவறியும் அடைபவர் அல்லர்; வாழ்நாளின் வகுத்து அமைந்த அளவு இதுதான் என்று அறிபவரும் யாரும் இலர் ஆதலினாலே—

மாரிக் காலத்து மலர்வது சிறு செண்பகம்; அதன் ஈரிய இதழ்களையுடைய மலரினை மாலையாகக் கட்டி, நறிய வயிர முற்றிய சந்தனத்தேய்வை பூசப்பெற்ற தம் மார்பிலே அவர் சூடிக்கொண்டனர்; சிறுசிறு தேமற்புள்ளிகள் கொண்ட அழகிய நிறத்தையும், கருங்கண்களையுமுடைய, விருப்பமிகு மார்பகங்கள் அமுங்குமாறு நெஞ்சுற நம்மை இறுகத் தழுவினர்; தழுவிய படியே, 'இவ்விரவுப்போது இவ்வாறே இன்பமாகவே கழிவதாக' என்றும் முன்பு கூறினர். 'தாம் சொல்வன்மையுடையர்' ஆதலின், அவ்வாறு பிரிவையும் மறைத்து, நம்மிடம் அன்புடையார் போலப் பொய்யும் பேசினர். அவர்தாம் நெடிது வாழ்வாராக!

கருத்து : "சூள் பொய்த்த அவர்தாம் நெடிது வாழ்வாராக" என்று வாழ்த்துவதன்மூலம், தன் ஆற்றாமை கூறியதாம்.

சொற்பொருள் : ஒழிந்தும் – தவறியும்; என்றது கழிந்த இளமை மீளவும் வரப்போவதே இல்லை என்பதனால். வகையளவு – வகுத்து அமைந்த கால அளவு. பித்திகம் – சிறு செண்பகம். அலரி – அலர்ந்த மலர். காழ் – வயிரம். கொம்மை – அழகு. பொறி –புள்ளி. வெம்முலை – விருப்பந்தரும் முலைகள்; வெம்மையுடைய முலைகளும் ஆம். ஞெமுங்க – அமுங்க. மொழி வன்மை – சொல் வன்மை; பொய்யையும் மெய்யே போலப் பிறர் நம்புமாறு வலியுறுத்திக் கூறுதல். நொடிவிடு அன்ன – கை நொடித்தால் எழும் ஒலிபோல. பாவை – கள்ளியின் கிளை. புன்புறா –புல்லியபுறா; பேடையைப் பிரிந்து தனிமையுற்ற ஆண் புறா. பயிரும் – கூவியழைக்கும். என்றூழ் – கோடை வெப்பம்.

விளக்கம் : குறித்த காலத்து வாராது அவர்தாம் தம் சூள் உரை பொய்த்தனர். சூள் பொய்த்த அவரைத் தெய்வம் வருத்தும். அதுதான் வருத்தாதிருக்க, அவர் நெடுநாள் வாழ்க! என்கின்றாள். தன் துயரத்து எல்லையிலும், தன் காதலரின் நலன் கருதும் பெண்ணியல்பும் இதனால் உணரப்படும். தாம் செல்லும் நெறியானது, புல்லிய புறவும் தன் பேடையை விருப்போடு அழைக்கும் தன்மையதாயிருந்தும், அதைக்கண்டு போவாரிடம் நம்மால் மீண்டுவரும் அன்பு தோன்றவில்லையே என்று நினைத்து வருந்தியதாம். 'நாளது இன்மையும், இளமையது அருமையும், அன்பினது அகலமும் பிறவும் நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே' என்னும் தொல்காப்பிய விதியையும் நினைவிற்கொள்க-(தொல் பொருள். 44).

"முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார், வாழ்நாள் வகையளவும் அறிநரும் இல்லை; ஆதலின் வெம்முலை ஞெமுங்கப்புல்லிக் கழிவதாக கங்குல்" என்று, தலைவன் முன்பு கூறியிருந்த நாளிற் சொன்னதாகக் கொள்ளுக.

பயன் : அவர் சொற் பொய்த்தனர் என்பது உண்மையாயினும், நம்மை வருந்தச் செய்தனர் எனினும், அதனால் ஏதும் நோயுறாதே நலமாக இருப்பாராக என்று, தன் கற்புத்தன்மை தோன்றக் கூறியதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/314&oldid=1698580" இலிருந்து மீள்விக்கப்பட்டது