உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/319

விக்கிமூலம் இலிருந்து

319. மீன் துஞ்சு பொழுது

பாடியவர் : வினைத்தொழிற் சோகீரனார்.
திணை : நெய்தல்.
துறை : காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.

[(து-ம்.) தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த தலைவியின் தாய், தலைவியை இல்லிடைச் செறித்துக் கடுமையான சிறை காவலுக்கும் உட்படுத்தினாள், ஆங்கு அவளை நினைந்து வந்த அவன், அவள் நிலையை அறிந்தான். நள்ளிரவிலும் துயில் பெறாதவனாக வருந்தும் அவன், தன் உளத்திற்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


ஓதமும் ஒலிஓ வின்றே ஊதையும்
தாதுளர் கானல் தௌவென் றன்றே
மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குரலோடு ஏறி
ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் 5
அணங்குகால் கிளரும் மயங்கிருள் நடுநாள்
பாவை யன்ன பலராய் வனப்பின்
தடமென் பணைத்தோள் மடமிகு குறுமகள்
சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி
மீன்கண் துஞ்சும் பொழுதும்
யான்கண் துஞ்சேன் யாதுகொல் நிலையே! 10

தெளிவுரை : கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதைக் காற்றானது மகரந்தத்தைக் கிண்டும் கழிக்கரைச் சோலையும் அழகிழந்து போயிற்றே! மணல்மிகுந்த இப்பழையவூரின் அகன்ற நெடிய தெருவிலே, கூகைச் சேவலானது, அதன் பெட்டையோடும் கூடியதாகச் சென்று, மக்களியக்கம் அற்றுப் போயினதான் பெரிய நாற்சந்தியிடத்தே, கேட்போர்க்கு அச்சம் வரும்படியாகக் குரலெடுத்துக் குழறி நிற்கும்! அணங்குகளும் வெளிப்பட்டவாய் எம்மருங்கும் உலவியபடியிருக்கும்! இருளும் ஒருவரையொருவர் அறிதற்கும் ஏலாத வகையில் மயக்கந்தரும் அடர்ந்த இருளாயிருக்கும். இத்தகைய இரவின் நடுயாமப் பொழுதிலே—

கொல்லிப் பாவையைப் போன்ற பலராலும் ஆராயப்படும் அழகினையும், அகன்ற மென்மைவாய்ந்த பருத்த தோள்களையும், மிகுதியான மடப்பத்தையும் உடையவளான இள மடந்ததையினது, சுணங்குகளாலே அழகுபெற்ற வனப்பு வாய்ந்த கொங்கைகளைத் தழுவுதலை எண்ணியவனாக, மீன்களும் கண்ணுறங்கும் பொழுதிலும், யான் கண்துஞ்சாதேனாய் உள்ளேனே! என் நிலைதான் இனி யாதாகுமோ!

கருத்து : 'அவளை இனி முயன்று உடனே மணந்து கொள்வேன்' என்பதாம்.

சொற்பொருள் : ஓதம் – கடல்; ஓதத்தையுடையது ஓதம் ஆயிற்று. ஊதை – குளிர்ச்சியான வாடைக் காற்று. தாது – பூந்தாது. கிளர்தல் – கிளைத்தல். கானல் – கானற் சோலை. குரால் – கூகையின் பெட்டை. சதுக்கம் – நாற்சந்தி. கால் கிளர்தல் –வெளிப்பட்டு உலவுதல். பாவை – கொல்லிப்பாவை. வனப்பு – அழகு. குறுமகள் – இளமகள். உள்ளி – நினைந்து.

விளக்கம் : இரவின் அமைதியும், அச்சந்தரும் கூகைக் குழறலும், அணங்குகளின் நடமாட்டமும், அவனுடைய உள்ளத் துயரத்தை மிகுதிப்படுத்துகின்றன. பொதுவாகத் தலைவியர் இரங்கும் நிலையே கூறப்படும். அஃதன்றி, இச்செய்யுள் தலைவனும் அவ்வாறு நினைந்து இரங்குதல் உளவாதலையும் உணர்த்தும் எனினும், அவன் ஆண்மகனாதலின், அடுத்து, அவளை வரைந்து சென்று மணந்து கொள்ளுதற்கான முயற்சிகளிலேயே விரைந்து ஈடுபடுவான் என்று கொள்ளவேண்டும். 'மணல் மலி மூதூர்' என்றது மணலூர் எனக் கூறுவர் சிலர்.

பாடபேதம் : ஆசிரியர் பெயர் விளக்குடி சொகிரனார் எனவும் கூறப்படும். 'விளக்குடி' என்பது கலங்கரை விளக்கம் அமைந்துள்ள கடற்கரையூர் எனல் பொருந்தும்.

மேற்கோள் : பண்பிற் பெயர்ப்பினும் (தொல். பொரு. 103) என்னும் சூத்திர உரையுள் 'பரிவுற்று மெலியினும்' என்றதற்கு இப்பாட்டை எடுத்துக் காட்டி, இது, 'இரவுக்குறியில் பரிவுற்றது' என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவர்.

பயன் : தலைவன், விரைவிலே மணவினைக்கு முயல்வதே செய்யத்தக்கதென்று துணிவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/319&oldid=1698592" இலிருந்து மீள்விக்கப்பட்டது