உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/322

விக்கிமூலம் இலிருந்து

322. வயப்புலி ஒடுங்கும் நாடன்!

பாடியவர் : மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்.
திணை : குறிஞ்சி.
துறை : 1. தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; 2. தலைமகன் பாங்கிக்கு உரைத்ததூஉமாம்.

[(து-வி.) 1. களவு ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தலைவனைத் தலைவியை மணந்து கொள்ளுமாறு விரைவுபடுத்த வேண்டும் என்று கருதுகின்றாள் தலைவியின் தோழி. அவன், ஒரு நாள் வந்து சிறைப்புறத்தானாகுதலை அறிபவள், அவன் கேட்டு உணருமாறு, தலைவிக்குச் சொல்வாள்போல அமைந்த செய்யுள் இது; 2. தலைமகன், தலைமகளின் பாங்கிக்குத் தங்கள் உறவுக்கு உதவவிரும்பிக் கூறியதும் ஆம்.]


ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனிற் கொடியது பிறிதொன் றில்லை
வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து
எறிந்துசெறித் தன்ன பிணங்கரில் விடர்முகை
ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர் 5
ஆளியங்கு அரும்புழை ஒற்றி வாள்வரிக்
கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன்
தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது
நன்னுதற் பசந்த படர்மலி அருநோய்
அணங்கென உணரக் கூறி வேலன் 10
இன்னியங் கறங்கப் பாடிப்
பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே.

தெளிவுரை : தோழீ, வாழ்வாயாக! மூங்கில்கள் உயரமாக வளர்ந்துள்ளன. வெட்டிச் செறித்து வைத்தாற்போலப் புதர்கள் பின்னிக் கிடக்கின்றன. அத்தகைய மலைப்பிளப்பை அடுத்துள்ள துறுகல்லிடத்தே, ஊனைத் தின்னுகின்ற பெண்புலியானது மிகுந்த பசியால் துடித்தபடி இருந்தது. அதன் பசியைப் போக்குதற்கு விரும்பியது அதன் ஆண்புலி. மக்கள் சென்று வருதலையுடைய நுழைவதற்கு அரிதான சிறு வழியை அடுத்துச் சென்று, வாள்போன்ற கோடுகளையும் கொடிய கண்களையுமுடைய வலிமையான அப்புலியானது, பதுங்கியிருக்கும். அத்தகைய நாட்டிற்குரியவன் தலைவன். அவனுடைய தண்மை கமழுகின்ற பரந்த மார்பினைத் தனக்கே உரிமையுடையதாக நீயும் பெற்றாயல்லை. அதனால், நின் அழகிய நுதலிடத்தே பசலையும் படர்ந்தது. பிறரால் தீர்த்தற்கு அருமையுடைய நின் காமநோயை, 'அணங்குத் தாக்கு இது' என்று அன்னை அறியும்படி வேலனும் கூறுவான். இனிய வாச்சியம் பலவும் ஒலிக்கப் பாடியபடியே பலவாகிய பூக்களைத் தூவியும் முருகனைத் துதிப்பான். இவ் யாட்டினைப் பலியாக ஏற்றுக் கொள்வாயாக என்று கூறி, அதனை அறுத்துப் பலியும் கொடுப்பான். அவ்வாறு செய்யவும் நின்னோயும் தணிவதாயினால், எவ்விடத்தும் இதனிலும் கொடியதான செயலும் பிறிதொன்று இல்லை கண்டாய்! அதுதான் உண்மையாமோ?

கருத்து : 'முருகைப் பரவுதலாலே இந்நோய் தீராது, என்பதாம்.

சொற்பொருள் : 'இதனில்' என்றது, முருகைப் பரவி வழிபட்டு, அதனால் தலைவியின் நோய் தணியும் என்று கொண்ட முடிபினை. பிணங்கர் – புதர். வேய் – மூங்கில். விடர்முகை –மலைப்பிளப்பு. பிணவு – பெண்புலி. வாள் வரி – வாள்போன்ற வளைவான கோடுகள்; ஒளியுடைய கோடுகளும் ஆம். உட்கு பசி – அஞ்சத்தக்க பெரும்பசி ; அச்சம் – உயிர் போகுமோ என்பதனால்; இதனால் பெண்புலி ஈன்றதன் அணிமையதாதலினால் தானே வேட்டைமேற் செல்லற்கு இயலாதது என்பதுமாம். தண் கமழ் – தண்மை கமழ்தல். இன்னியம் – துடி, பறை முதலிய வாச்சியங்கள்.

உள்ளுறை : பெண்புலியின் பசியை உணர்ந்து, அதைப் போக்கக் கருத்தும் ஆண்புலி சிறுவழியிடைப் பதுங்கியிருக்கும். கொடிய குணமுடைய அதுவே, அதன் பிணவின் துயர்போக்கக் கருதிச் செயற்படுகின்றது. அவ்வாறே, தலைவன். விரைவிலே வரைபொருளோடு வந்து, தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதல் வேண்டும் என்பதாம்.

விளக்கம் : 'வேய் உயர்ந்து எறிந்து செறித்தன்ன பிணங்கரில் விடர் முகை' என்றது, புலி தங்கியிருக்கும் இடத்தின் கொடுமையைக் குறித்தது. உட்குபசி என்றது அளவுகடந்த பசியை. 'தண்கமழ் வியன்மார்பு' என்றது, அவன் மலர்மாலை சூடியவனாக வருதலைக் கருதிக்கூறியதாகும். 'பரவுறுபலி' பரவிச் செலுத்தும் பலி; பலி என்றது ஆடறுத்துத் தரும் குருதிப் பலியினை. 'வேலன் இன்னியம் கறங்கப்பாடிப் பன்மலர் சிதறிப் பரவுறு பலி' என்பது இன்றும் உண்மையாதலை, தென்தமிழ் நாட்டுப் பகுதிகளிலுள்ள முருகன் ஆவேசித்துக் குறி சொல்வார் செய்து வரும் பலியிடு முறையாற் காணலாம். வேலன் – பூசாரி; வேலை நட்டு வழிபாடாற்றுவோன் வேலன் எனப்பட்டனன்.

பயன் : வேலன் வெறியாடி உண்மை கூறின், களவுறவு வெளிப்பட, இற்செறிப்புக் கடுமையாகும்; ஆகவே விரைவில் மணவினை முடித்தலே தக்கதெனத் தலைவன் துணிவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/322&oldid=1698600" இலிருந்து மீள்விக்கப்பட்டது