உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/325

விக்கிமூலம் இலிருந்து

325. தகுமோ பெரும!

பாடியவர் : மதுரைக் காருலவியங் கூத்தனார்.
திணை : பாலை.
துறை : தோழி செலவு அழுங்குவித்தது.

[(து-வி.) பொருளீட்டி வருதலை நினைத்துத் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுகின்றான் தலைவன். அவனை நெருங்கி, அவன் பிரிவைத் தலைவி பொறுத்து உயிர் வாழாள் எனக்கூறி, அவன் போவதைத் தடுத்து நிறுத்தத் தலைவியின் தோழி முயல்கின்றாள். அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


கவிதலை எண்கின் பரூமயிர் ஏற்றை
இரைதேர் வேட்கையின் இரவிற் போகி
நீடுசெயற் சிதலைத் தோடுபுனைந்து எடுத்த
அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும் 5
ஊக்கரும் கவலை நீந்தி மற்றிவள்
பூப்போல் உண்கண் புதுநலம் சிதைய
வீங்குநீர் வாரக் கண்டும்
தகுமோ பெரும தவிர்கநும் செலவே!

தெளிவுரை : பெருமானே! இவளுடைய குவளைமலர் போலும் மையுண்ட கண்களின் புதுமையான அழகு சிதைந்து போகுமாறு, மிகுதியான நீர் வடிதலைக் கண்டும், நீர் பிரிதல் என்பது தான் தகுதியுடையதாகுமோ? நும் செலவினைத் தவிர்வீராக! கவிந்த தலையையுடைய கரடியினது, பருத்த மயிரைக் கொண்ட ஆணானது, இரையைத் தேடிவரும் ஆசையாலே இரவு நேரத்தில் காட்டுட் செல்லும். நீடிய செயற்பாட்டையுடைய கரையான் கூட்டம் செய்து உயர்த்தியிருக்கும், பாம்புகள் வாழ்கின்ற புற்றிடத்தேயுள்ள அச்சிதலைகள் ஒழியுமாறு, விரைவாக, ஒடிந்த முகப்பையுடைய பெரிய நகங்களாலே பறித்து, உள்ளிருக்கும் புற்றாஞ்சோறு முதலாயவற்றை உறிஞ்சி இழுக்கும். உள்ளத்தைச் செலுத்துதற்கும் அரிதான கவர்த்த அத்தகைய அறநெறியினைக் கடந்து செல்ல நினைப்பதை நீர் தவிர்வீராக!

கருத்து : 'நீர் பிரியின் இவள் அழிவாள்' என்பதாம்.

சொற்பொருள் : கவிதலை – கவிந்துள்ள தலை. எண்கு – கரடி. ஏற்றை – ஆண்கரடி. வேட்கை – ஆர்வம். சிதலை –கரையான். தோடு – கரையான் கூட்டம். புனைந்து – செயலாற்றி. எடுத்த – உயர்த்த. அர – அரா; பாம்பு. முர வாய் – முறிந்த வாய்; வாய் – முன் பகுதி. கவலை – கவர்த்த வழி. பூ – கருங் குவளைப் பூ.

இறைச்சி : இரை தேடியுண்ணும் ஆர்வத்தாலே, கரடி புற்றைப் பெயர்த்து இரவில் உண்ணும் காடு என்றனள். இவளது காமவேட்கை நின்னை நாடிச் சேரும் ஆர்வத்தாலே இவள் அரிய உயிரையே உண்டு ஒழித்துவிடும் என்பதாம்.

விளக்கம் : கரடியின் பசிவேட்கை, கரையான் கூட்டம் நெடிது முயன்று உயர்த்திய புற்றுக்கும், அவற்றின் முட்டைக்கும், அவற்றுக்கும் அழிவை உண்டாக்குவதுபோல, நின்னது பொருள் வேட்கை, நெடிது முயன்று அமைத்த நின் இல்லற வாழ்வுக்கும், அதனை அமைத்த நின் துணைவியான இவளுக்கும் அழிவைத் தரும் என்பதாம். 'அரவாழ் புற்றம்' என்றது, கரையானின் புற்றில் ஒடுங்கியிருந்த அரவும் ஒழியுமாறுபோல, தலைவியின் அழிவால் அவளது தோழியராகிய யாமும் வருந்தி நலிவோம் என்பதாம். இதனைக் கேட்டல் உறுபவன், தன் செலவை நிறுத்தி வைப்பான் என்பதாம்.

"உகுநீர் புதுநலம் சிதைய வாரக் கண்டும் தகுமோ பெரும! தவிர்க நும் செலவே' என்பது, தலைவியின் கவலை மிகுதியைப் புலப்படுத்திச் செலவைக் கைவிடுமாறு கேட்பதாகும்.

பயன் : தலைவன், தன் பிரிவைச் சிறிது நாள் தள்ளிப் போடுதலும் நேரலாம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/325&oldid=1698608" இலிருந்து மீள்விக்கப்பட்டது