நற்றிணை-2/337
337. சிறந்தார் மறந்தாரோ?
- பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ.
- திணை : பாலை
- துறை : 1. தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரியலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; 2. தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.
[(து-வி.) 1. பொருள் தேடிவரப் பிரிந்து போவதற்குத் தலைவன் திட்டமிடுவதைக் குறிப்பால் அறிந்து, தோழி அறநெறி கூறிப் போகாது தடுத்து நிறுத்தியது; 2. தலைவன் பிரிந்து செல்வது உலகியல் அறத்தோடு பொருந்துவதே; ஆயின் அடைந்தாரைக் காப்பதும் வேண்டும் என்று தலைவனிடம் கூறித் தோழி உலகியல் உணர்த்தியதும் ஆம்.]
உலகம் படைத்த காலை—தலைவ!
மறந்தனர் கொல்லோ சிறந்தி சினோரே!
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்,
நறுமோ ரோடமொடு உடனெறிந்து அடைச்சிய
5
செப்பிடந்து அன்ன நாற்றம் தொக்குஉடன்,
அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால்
தளர்நறுங் கதுப்பில் பையென முழங்கும்
அரும்பெறற் பெரும்பயம் கொள்ளாது,
பிரிந்துறை மரபின் பொருள்படைத் தோரே.
10
தெளிவுரை : தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தினை எதிர்நோக்கிய காட்டு மல்லிகை மலரையும், பருத்த அடியையுடைய பாதிரியின் நுண்மயிர் கொண்ட சிறந்த மலரையும், நறுமணம் கமழும் செங்கருங்காலியின் மலரோடு ஒன்றாகச் சேர்த்து அடைத்து வைத்துள்ள செப்பினைத், திறந்து வைத்தாற்போன்ற நறுமணம் ஒருங்கே கமழ்வதான, அழகிய நிறங்கொண்ட நீலமணிபோலும் ஐந்து பகுதியாக முடித்தற்குரிய, சரிந்து வீழும் வண்டுகள் மெல்லென ஒலித்தலையுடைய நறுமணமிகுந்த தலைவியரின் கூந்தலினது, அரிதாகப் பெறுதற்குரிய பெரும் பயனைக் கொள்ளாதவராய், அவரைப் பிரிந்து வாழ்கின்ற பகுதியையுடைய பொருளீட்டி வாழ்கின்ற ஆடவர்கள், உலகம் படைத்த காலத்திலிருந்தே, அடைந்தாரைப் பேணிக்காக்கும் அருள்நெறியை மறந்தனரோ! அத்தகையவர் சிறந்த தகுதிப்பாட்டினை உடையவரேயாம் என்பதாம்.
கருத்து : அடையாரைக் கைவிடாது பேணுதலே சிறந்த அறநெறி என்பதாம்.
சொற்பொருள் : சிறந்திசினோர் – சிறந்த தகுதிகளை உடையோர். முதிரா வேனில் – முற்றாத இளவேனில். எதிரிய –எதிர்நோக்கிய; எதிர்ப்பட்ட எனினும் ஆம், அதிரல் மலர்வது இளவேனிலில் என்பதால். பராரை – பருத்த அடிமரம். நறுமோரோடம் – செங்கருங்காலி. அடைச்சிய – அடைத்து வைத்த. செப்பு – பூவைக்கும் செப்பு. அணி – அழகு. தளர்தல் – சரிந்து வீழ்தல். பையென முழங்கும் – மெல்லென ஒலிக்கும் என்றது, வண்டினம் மொய்த்து ஆரவாரித்தலை.
விளக்கம் : 'உலகம் படைத்த காலை மறந்தனர் கொல்லோ' என்றது, உலகியல் வகுத்த சான்றோர் அன்றே மறந்துவிட்டனர் போலும், அதனால் ஆடவர் மனைவியரை அவர் வருந்தி நலியத் தனித்து வைத்துப் பிரிதலும் அறமாயிற்று என்று ஆடவர் பொதுவியல்பைச் சுட்டி நொந்து உரைப்பதாம்.
காட்டு மல்லிகை, பாதிரி, செங்கருங்காலிப் பூக்களை ஒன்றாகச் செறித்து வைத்து, அச்செப்பினின்று வெளிவரும் இனிய கூட்டுமணத்தை நுகர்ந்து, இன்புறுதல் இங்கே கூறப்பட்டுள்ளது. இத்தகைய நறுநாற்றம் உடையது தலைவியின் கூந்தல் என்றது, அவளது செவ்வியைக் கூறி, அவளையும் பிரிதற்கு நினைத்த தலைவனின் மனப் போக்கிற்கு நொந்ததாம்.
'சிறந்திசினோர்' என்றது எள்ளற் குறிப்பு; அங்ஙனம் வகுத்தவர் சிறந்தவர் ஆகார் என்று சொன்னதாம்.
பயன் : தலைவியைப் பிரிதலால் அவளுக்கு உண்டாகும் துயரமிகுதியை உணர்கின்ற தலைவன், தன் பொருளார்வத்தைச் சிறிது ஒதுக்கிவிட்டு, அவளோடு தங்கிவிடுபவன் ஆவான் என்பதாம்.