உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/343

விக்கிமூலம் இலிருந்து

343. மாலை இல்லை கொல்?

பாடியவர் : கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்.

திணை : பாலை.
துறை : தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.
[(து-வி.) தலைவனைப் பிரிந்து, அந்த நினைவாலே வருந்தியிருக்கும் தலைவியின் துயரம், மாலைக் காலத்து வரவினாலே மேலும் பெரிதாகின்றது. அதனைத் தாங்காத அவள், இம்மாலைப் பொழுது அவர் சென்றுள்ள நாட்டிலேயும் இல்லையோ? அவரும் நம்மை நினையாரோ? என்று நினைந்து துடிப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


முல்லை தாய கல்லதர்ச் சிறு நெறி
அடையா திருந்த அங்குடிச் சீறூர்த்
தாதெரு மறுகின் ஆபுறந் தீண்டும்
நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை 5
புன்கண் அந்திக் கிளைவயின் செறியப்
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி—தோழி!—நத்துறந்து
அரும்பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்துறை காதலர் சென்ற நாட்டே! 10

தெளிவுரை : தோழீ வாழ்வாயாக! முல்லைக் கொடியானது தாவிப் படர்ந்திருக்கின்ற, கல்லிடைப்பட்ட சிறிதான வழியினை, அடையாதே இருந்த அழகான குடிகளையுடைய சிற்றூர்; அச்சிற்றூரிடத்து, பூந்தாதுகள் வீழ்ந்து மக்கி எருப்போலக் கிடக்கின்ற தெருவினிடத்தே, பசுக்களின் முதுகைத் தீண்டுகின்ற நெடிதான விழுதுகளை இட்டுள்ளது, கடவுள் உறையும் ஆலமரம் ஒன்று. அந்த ஆலமரத்திலே இருந்தபடி, அம்மரத்தடியிலே அக்கடவுளுக்குப் படைத்த பலிச்சோற்றைத் தின்ற, தொகுதியான விரல்களையுடைய காக்கையானது, துன்பந் தருகின்ற மாலைக் காலத்திலே, அவ்விடம் விட்டுநீங்கித் தன்னுடைய சுற்றமிருக்கும் இடத்தைச் சென்று அடையும். பிரிந்தாரை வருத்தும் படைத்துணையோடு வந்துள்ள, நோயைச் செய்யும் இம்மாலைக் காலமானது, நம்மைக் கைவிட்டு, அருமையான பொருளின் கூட்டத்தை விரும்பிப் பிரிந்து சென்றுள்ளவரான நம் காதலர் தங்கியிருக்கும் வேற்று நாட்டிடத்தேயும் உண்டாவதில்லையோ?

கருத்து : 'நம்மைப் பிரிந்து வாழும் தலைவர், இம்மாலை வேளையிலே நம்போல் துயருற்றிருப்பின், விரைந்து நம்பால் வந்திருப்பாரே' என்பதாம்.

சொற்பொருள் : தாய – தாவிப் படர்ந்துள்ள. கல்லதர் – கல்லிடைப் பட்ட வழி; மலைவழியும் ஆம். அடையாதிருந்த – அடைக்காதே கவலையற்றிருந்த; அடையாதிருந்தது அவர் எந்த ஆபத்தையும் அவ்வழியே எதிர் நோக்காததால். தாதெருமறுகு – தாதாகிய பூந்துகள் வீழ்ந்து காய்ந்து எருவாகிக் கிடக்கும் தெரு. கடவுள் ஆலம் – கடவுள் குடியிருக்கும் ஆலமரம்; ஆலமர் செல்வன் என்று போற்றப் பெறுகிறவன் சிவபிரான்; வழிபடுவார் ஆலடியிற் படையலிட்டுப் போற்றினர் என்க. உகுபலி – இட்ட பலிச்சோறு. புன்கண். துன்பந்தருதலையுடைய. கிளை – இனம்; மரக்கிளை எனின், அம்மரத்தின் கிளையிலுள்ள தன் கூட்டிடத்தே என்க! படை – படைக்கலம்; இது வாடைக் காற்றும், முல்லை மணமும், பசுக்கள் வீடுதிரும்பலும் பிறவும் ஆம். கூட்டம் – சேர்க்கை.

இறைச்சிப் பொருள் : 1. ஆலின்கீழ் இடப்பெறும் பலியைத்தின்ற காக்கை, தன் சுற்றத்திடம் சென்று மாலையில் தங்கும் என்றது, என் நலனுண்ட பசலையானது நெற்றியிலே சென்று தங்கி நின்றது என்பதாம்.

2. ஆலம்வீழ் ஆவின் புறத்தே வருடுமென்றது, அருகிலிருந்து தோழி தன் துயரை ஆற்றிவருதலைக் குறிப்பிட்டதாம்.

விளக்கம் : 'பலி அருந்திய காக்கை' என்றது, பிற மகளிர்தத்தம் காதலர் வந்த மகிழ்ச்சியினாலே காக்கைக்குப் பலியிட்டுள்ளனர்; நம்மவர்தான் வந்தாரில்லையே என்பதை நினைத்துக் கூறியதும் ஆம். வீழால், வீடுதிரும்பும் பசுக்களைத் தடவிவிடும் ஆலமரம் என்றது, அதற்குள்ள அன்பு நெகிழ்ச்சிக்கூடத் தலைவன்பால் இல்லை என்று நினைத்து நொந்ததாம். 'காக்கை கிளைவயிற் செறிய' என்றது, அதற்குள்ள பாசமும் அவர்பால் இல்லையே என்று கூறி வருந்தியதாம். 'நத்துறந்து அரும்பொருட் கூட்டம் வேண்டி' என்பதன் உருக்கம் நினைத்து இன்புறத்தத்கது. 'நம் கூட்டத்தை வெறுத்து, அரும்பொருட் கூட்டத்தை விரும்பினர்' என்னும் ஏக்கக் குரல் இது.

பாடபேதங்கள் : தொகுகருங் காக்கை; சினைவயிற் செறியர்; அரும்பொருள் ஈட்டம் வேண்டி.

பயன் : வேதனை மிகுதியால் வெதும்பும் உள்ளமானது, இவ்வாறு தன்னிலை புறம்தோன்ற வாய்விட்டுக் கூறுதலாலே சிறிதளவுக்கு அமைதி பெறும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/343&oldid=1698660" இலிருந்து மீள்விக்கப்பட்டது