உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/346

விக்கிமூலம் இலிருந்து

346. நக்கனைபோலும் நெஞ்சே!

பாடியவர் : எயினந்தை மகன் இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
சிறப்பு : பொறையன் கொல்லி.

[(து-வி.) 'பொருள் தேடி வரக் காதலியைப் பிரிந்து வேற்று நாட்டிற் சென்று வாழ்கின்றான் தலைவன் ஒருவன். அவன், அவள் உறவின் வேட்கை மேலெழுந்து வருத்த, தனக்குள் ஆற்றாமையால் கூறுவபோல அமைந்த செய்யுள் இது.]


குணகடல் முகந்து, குடக்கேர்பு இருளி,
தண்கார் தலைஇய நிலந்தணி காலை,
அரசுபகை நுவலும் அருமுனை இயவின்,
அழிந்த வேலி அம்குடிச் சீறூர்
ஆளில் மன்றத்து, அல்குவளி ஆட்டத் 5
தாள்வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா—என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந்தண் சொல்லிச் சிறுபசுங் குளவிக்
கடிபதம் கமமும் கூந்தல்
மடமா அரிவை தடமென் தோளே? 10

தெளிவுரை : நெஞ்சமே! கீழ்கடலிலே நீரினை முகந்து கொண்டு, மேற்றிசைக்கண்ணே எழுந்து சென்று, இருண்டு, குளிர்ந்த மேகம் மழைபெய்ய, அதனாலே நிலமும் தன் வெம்மை தணிந்து குளிர்ந்துவிட்ட பொழுதிலே—

'அரசினது பகையால் அழிவுற்றேன்' என்று தன்னுடைய அழிபாட்டைப் பிறருக்குக் காட்டிச் சொல்லியபடி அழிந்து கிடக்கும், அரிய போர்முனையை அடுத்துள்ள வழியிலே, வேலியழிந்து போய்க் கிடக்கும் முன் அழகியதாயிருந்த குடிகளையுடைய சிற்றூரினிடத்தே, ஆள் வழக்கற்றுப்போன ஊர்ப்பொது மன்றத்திலே, அசையும் காற்றானது ஆட்டி அசைத்துக் கொண்டிருக்க, வீரத்தன்மை கொண்ட வன்மையமைந்த பாடி இருக்கையிலே,

இன்றைக்கு, எக்காலத்தும் நிறைவோடு பொருந்தி விளங்கும் மதியத்தைப்போல விளங்குகின்ற பொறையனது. மிகத் தண்மைகொண்ட கொல்லிமலையிடத்திலேயுள்ள, சிறிய பசிய மலைப்பச்சையினைச் சூடுதலாலே, மிகுதியான மணம்கமழும் கூந்தலையுடையவளும், இளைய அழகிய மடந்தையுமாகிய அவளின், வளைந்த மென்மையான தோள்களை, நீதான் தழுவுதற்கு விரும்பினாய் போலும் என்பதாம்.

கருத்து : 'என்றைக்கு அவளைத் தழுவும் இன்பத்தை அடைவோமோ?' என்பதாம்.

சொற்பொருள் : குணகடல் – கீழ்கடல்; இந்நாளைய வங்கக்கடல். 'குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி' என்றதால், இது வடகிழக்குப் பருவக் காற்று என்க. தலைஇய – பெய்து விட்ட. நிலம் தணி காலை – நிலம் வெம்மை தணிந்து குளிர்ந்து விட்ட காலம்; இது வாடைக் காலம். தாள்வலி – முயற்சியின் வலிமை. வன்கண் இருக்கை – வன்கண்மை தரும் இருக்கையும் ஆம்; அது, பாசறை இருக்கை. நிறையுறு மதி – முழுநிலவு. பொறையன் – பாண்டியன்; குளவி – மலைப்பச்சை; காட்டு மல்லிகை எனவும் கூறுவர். கடிபதம் – மணத்தின் தன்மை.

விளக்கம் : அவன் மீள்வதாகச் சொல்லி வந்த கார்காலமும் கழிந்து, வாடைக்காலமும் வந்தது. அவனோ பகையழித்து வென்று, பாழூர் மன்றிலே அமைந்த பாசறை இருக்கையிலே உள்ளனன். இரவின் அமைதியில், வானத்து முழுநிலவு அவன் வேதனையை மிகுவிக்கிறது. வினை முடிந்ததாதலின், ஊர் திரும்பும் நினைவு மேலெழுகின்றது. அரசாணையை எதிர்பார்த்திருக்கும் அவன் நினைவிலே, அவன் காதலி நிற்கின்றாள். கார்காலம் கழிந்ததாதலின், அக்காலத்தே செழித்திருக்கும் பச்சையை, அவள் தன் கூந்தலுக்குச் சூடுவதும் அவன் நினைவிலே வந்து நிழலிடுகின்றது.

'நக்கனை மன் போலா' என்றது, அன்று திண்மையோடு பிரிந்துவரத் துணைசெய்த மனம், இன்று நெகிழ்ந்து அவள் நினைவை எழுப்பி வருந்தியதை நினைந்து இகழ்ந்து சொல்லியதும் ஆம்.

பயன் : வினை முடிந்ததாகலின், விரைவிலே தன் ஊருக்குத திரும்புதற்குரிய முயற்சிகளிலே தலைமகன் மனம் செலுத்துபவனாவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/346&oldid=1698663" இலிருந்து மீள்விக்கப்பட்டது