உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/352

விக்கிமூலம் இலிருந்து

352. எவ்வாறு வந்தாளோ?

பாடியவர் : மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிந்த தலைமகன், இடைச்சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) பொருளார்வம் மிகுதலாலே தலைவியைப் பிரிந்து வேற்று நாடு நோக்கிச் செல்கின்றான் தலைவன். இடை வழியிலே, அவன் நினைவிலே அவள் தோற்றம் தோன்றி மயக்க, அவன் வியந்து வருந்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


இலைமாண் பகழிச் சிலைமான் இரீஇய
அன்பில் ஆடவர் அலைத்தலின் பலருடன்
வம்பலர் தொலைத்த அஞ்சுவரு கவலை
அழல்போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம்புரி முதுநரி 5
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்றுத்
தேர்திகழ் வறும்புலம் துழைஇ நீர்நயந்து
பதுக்கை நிழல் ஒதுக்கிடம் பெறாஅ
அருஞ்சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய வாயின அமைத்தோள் 10
மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

தெளிவுரை : நெஞ்சமே! இலைவடிவாகிய மாட்சியமைந்த அம்பினை வில்லிடத்தே மாண்புபட இருத்தியவர், உயிர்களிடத்தே அன்பற்ற ஆறலைப்போரான ஆடவர்கள். அவர்கள் கொன்றும் புண்படச்செய்தும் வருத்துதலாலே, வழக்கமாகப் போய்வருவார் பலரோடு புதியவரும் பட்டு வீழ்ந்துகிடந்த, அச்சம் வருதலையுடைய கவர்த்த நெறி அது. அதனிடத்தே, அழலைப் போலச் சிவந்த காதுகளையுடைய கழுகின் சேவல் பிணங்களைத் தின்னாதபடி, அதனை அலைக்கழிக்கும் கிழநரியானது, அங்கே தோன்றும் தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடும். அதன்பின், பச்சை ஊனை நிறையத் தின்று,நீர் வேட்கையுற்றதாய்ப், பேய்த்தேர் தோன்றும் வறண்ட பாலையிலே, அங்குமிங்குமாக நீர் பருகுதற்கு விரும்பித் தேடியபடி அலையும். அலைந்து வருந்தியபின், பிணத்தை மூடியுள்ள கற்குவியலின் நீழலிலே தான் ஒதுங்கிக் கிடந்து களைப்பாறுதற்கும் இடம்பெறாது வருந்தியிருக்கும். அத்தகைய கடத்தற்கரிய சுரத்தின் கவர்த்த நெறியானது வருதலினாலே, வழி நடந்து வருந்தியுள்ள நமக்கும் கடத்தற்கு அரியவாயின். இவ்விடத்தே, மூங்கில் போலும் தோள்களையுடைய மாட்சியமைந்த இளமடந்தையான நம் காதலியும், தன் மாளிகையை விட்டு வெளிப்போந்து எவ்வாறு வந்துசேர்ந்தாளோ? அவள் இரங்கத்தக்கவள்காண்!

கருத்து : "அவள் நினைவே தொடர்ந்து நெஞ்சில் நிறைகின்றது" என்பதாம்.

சொற்பொருள் : இலை மாண் பகழி – இலை வடிவாக முனை அமைந்துள்ள மாண்பமைந்த அம்பு; மாண்பாவது கூர்மையும் முன்னர்ப் பல உயிரைக் குடித்துள்ள தகுதியும். வேறு வடிவு களினின்றும் வேறுபடுத்த இலைமாண் அம்பு என்றனர்; பிற பிறைவாய் அம்பு முதலியன. மாண் இரீய – மாண்புடன் இருத்திய; மாண்பு என்பது இங்கே தன் குறி தப்பாது என்னும் திடமான மனவுறுதி. அன்புஇல் ஆடவர் – ஆறலை கள்வர். பிறரைக் கொன்று வழிபறிக்கும் இயல்பினர் ஆதலால், அன்பில் ஆடவர் என்றனர். வம்பலர் – புதியவர். 'பலருடன்' என்றது, முன்பே அவ்வழி வந்து உயிரிழந்தவர் பலரையும். வம்பலர் – அன்று பட்டு வீழ்ந்தவர். சேவல் – கழுகுச் சேவல்; எருவைச் சேவலும் ஆம். வெய்துற்று – நீர் வேட்கையாலே வருத்தமுற்று. முதுநரி – கிழநரி; முதுநரியாயிருந்தும் அறிவற்று மயங்கித் திரிந்தது என்க. தேர் – பேய்த் தேர்; கானல் நீர். கொள்ளை – மிகுதி. மாந்துதல் – நிறையத் தின்னல். கவலை –கவர்த்த நெறி.

விளக்கம் : ‘அழல்போற் செவிய சேவல்' என்றது போலவே, 'ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல்' (அகம். 51) எனப் பிறரும் கூறுவர். செஞ்செவி என்பதையே அழல்போல் என்று உவமித்தனர். வழியின் கொடுமை மிகுதியைச் கூறினதால், அதற்கு அஞ்சினான் என்பது பொருளன்று; அவ்விடத்தே வருந்துமவன் நினைவிலே தலைவி பின் நினைவு உருவெளித்தோற்றமாகத் தோன்ற மனம் மயங்கி இவ்வாறு கூறினான் என்றே கொள்க. 'யாங்கு வந்தனள் கொல் அளியள்' என்பது அதனையே குறிக்கும். ஆழமாக அழுந்திய நினைவுகள் இவ்வாறு உருவெளித் தோற்றமாகத் தோன்றும் என்று கொள்க. 'பதுக்கை' புதைகுழிமேல் குவிக்கப் பெற்றுள்ள கற்குவியல். 'மாண்பு' என்னும் சொல் மூன்று முறை வந்துள்ள செவ்வியையும் இச்செய்யுளிற் காணலாம்.

இறைச்சி : ஆறலைப்போரால் வீழ்த்தப் பெற்றுக்கிடக்கும் பிணங்களைக் கழுகு தின்னாதபடி வெருட்டிவிட்டுத்தானே தின்ற நரியானது, உண்ண நீர் கிடைக்காதும், உறங்க நிழலிடம் கிடைக்காதும் வருந்திற்று என்றனன். அவ்வாறே தலைவனும், தானடைந்த தலைவியை நுகர்ந்து இல்லறமாற்றப் பொருள் தேடி வந்து எய்த்தும் இளைத்தும் பொருள் பெறும் இடம் தோன்றாமல் வருந்துவேன் என்றதாம்.

பாடபேதங்கள் : 1. சிலைமாண் வல்வில், சிலையார் வல்வில். 3. வெம்பலை அருஞ்சுரம், வெம்பரல் அருஞ்சுரம். 10. அளிய வாயின.

பயன் : தலைவன், மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொண்டு மேலும் தொடர்ந்து வழிச்செல்லவியலாதபடி வருந்தினாலும், சென்று செயல் முடித்து விரைந்து திரும்பி வருவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/352&oldid=1698771" இலிருந்து மீள்விக்கப்பட்டது