நற்றிணை-2/358
358. பரவினம் வருகம்!
- பாடியவர் : நக்கீரர்.
- திணை : நெய்தல்.
- துறை : 1. பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்துத், தோழி, 'இவள் ஆற்றாளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; 2. அக்காலத்து ஆற்றாளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.
[(து-வி.) பிரிந்து சென்ற காதலனின் வரவு நீட்டிக்கத் தலைவியின் துயரம் மிகுவதைக்கண்ட தோழி பெரிதும் வருந்துகின்றாள். தலைவி இறந்துபடுவாளோ என்றும் நினைக்கின்றாள். அதனால், கடல் தெய்வத்துக்கு வழிபாடு செய்வோம் என்று கூறுகின்றாள்; அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. 2. அப்படி அவள் வருந்திய காலத்திலே தலைவி, தோழிக்குச்குச் சொன்னதாகவும் கொள்ளலாம்.]
பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச்
சிறுமெல் ஆகம் பெரும்பசப்பு ஊர
இன்னேம் ஆக எற்கண்டு நாணி
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம்
அணங்கள் ஓம்புமதி வாழிய நீயெனக்
5
கணங்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப்
பரவினம் வருகம் சென்மோ தோழி!
பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல்
சிறுவெண் காக்கை நாளிரை பெறூஉம்
பசும்பூண் வழுதி மருங்கை அன்னவென்
10
அரும்பெறல் ஆய்கவின் தொலையப்
பிரிந்தாண்டு உறைதல் வல்லி யோரே!
பெருத்த நம் தோள்களும் தளர்ந்தன; அழகான ரேகைகளும் வாடிப் போயின; சிறிய மென்மையான மார்பகத்திலும் பசலையானது பெரிதாகப் பரவிற்று; நாம் இந்த நிலையினை முன்பே அடைந்தேமாகவும், என்னைக் கண்டு வெட்கப்பட்டு, 'என்றும் பிரியேன்' என்று நின்பால் சொல்லித் தெளிவு செய்தனர் என்றாலும், அங்ஙனம் அவர் சொல்லிய நாளும் இப்போது பொய்யாயிற்று; அதனாலே—
கணங்களையுடைய கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டுச் சாந்தி செய்து வழிபட்டு, அவரை நீ வருத்தாதிருப்பாயாக என்று வேண்டிச் சென்று பணிந்து, நாமும் வருவேமோ?
கருத்து : 'அவர் வருகை வேண்டித் தெய்வம் பராவுவோம்' என்பதாம்.
சொற்பொருள் : பெருந்தோள் – பெருத்த தோள்கள்; பெருத்தல் பூரிப்பால் உண்டாகும் வளமை. அவ்வரி – அழகிய ரேகைகள்; கண்களிடத்தே தோன்றும் செவ்வரிகள் என்க. 'சிறு மெல் ஆகம்' – சிறிதான மென்மைகொண்ட மார்பகம்; இது இளம் பருவம் என்று விளக்கியது. பசப்பு – பசலைநோய். ஊர்தல் –பற்றிப் படர்தல். அணங்கல் – வருத்தல். கணம் கெழு கடவுள் – கணங்களைக் கொண்ட கடவுள்; நெய்தல் நிலத்துக்கு உரிய தெய்வம் வருணன் ஆதலின் அவனைக் குறிப்பதாகலாம்; நக்கீரர் பாடியதாகவே, பூதகணங்கள் நிறைந்திருக்க விளங்கும் சிவத்தையே குறித்ததாகக் கருதுதலும் சிறப்பாகும். பலிதூஉய் – பலிப்பொருள்களைத் தூவி; இது கடல் நீரிலே தூவுதல். நாள் இரை – காலை உணவான இரை. பசும்பூண் வழுதி – பசும்பூண் பாண்டியன். மருங்கை – மருங்கூர்ப் பட்டினம்; இதனைத் தழும்பன் என்னும் தலைவனுக்கு உரிய ஊணூர்க்கு அப்பாலுள்ளதென்று, 'பெரும் பெயர்த்தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர், விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர், இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்' என அருகானூறு (227) கூறும்; இன்றைய மரக்காணம் என்னும் ஊரே இது என்பர் சிலர்.
உள்ளுறை : இறாவின் முடங்கலைச் சிறுவெண் காக்கையானது நாளிரையாக அருந்தும் என்றது, அவ்வாறே அவளும் தலைவன் வந்துசேரத் தான் தன் துயரந்தீரக் காமநலம் உண்டு களிப்பவளாவள் என்பதாம்.
விளக்கம் : 'அணங்கல் ஓம்புமதி வாழிய நீயெனக் கணங்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப் பரவினம் வருவம் சென்மோ தோழி' என்பது, அந்நாளைய நெய்தல்நிலை மக்கள், தம் குறை முடிதலை விரும்பிப் போற்றிவந்த கடல்வழிபாட்டு மரபைக் குறிக்கும். கடல் தெய்வத்தை வழிபடுதலால், தலைவன் கடல் கடந்து பொருள்தேடச் சென்றவனாதலும் நினைக்கவேண்டும்.
பாடபேதம் : கடல்கெழு கடவுள்.
பயன் : இதனால் தலைவி அவன் வரும்வரை பொறுத்திருந்து, வந்ததும் கூடியின்புற்று மகிழ்வாள் என்பதாம்.
சிறப்பு : பசும்பூண் வழுதியின் மருங்கைப் பட்டினத்து எழில்.