நற்றிணை-2/361
361. விருந்தயர் விருப்பினள்!
- பாடியவர் : மதுரைப் பேராலவாயர்.
- திணை : முல்லை.
- துறை : வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.
[(து-வி.) தலைவன் பிரிந்து சென்றவன், குறித்த பருவம் கடந்த பின்னரே வீடு திரும்புகின்றான். அதனால், தலைவி அவனை மகிழ்ந்து வரவேற்காமல் ஊடிச் சினத்தலும் கூடும் என்று அஞ்சுகிறாள் தோழி. அவள் வீட்டுப் பணியாளர்களிடம் சொல்லித் தலைவியும் கேட்டு மனம் திரும்புமாறு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
சிறுவீ முல்லைப் பெரிதுகமழ் அலரி
தானுஞ் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
விசும்புகடப் பன்ன பொலம்படைக் கலிமாப்
படுமழை பொழிந்த தண்நறும் புறவின்
நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப
5
மாலை மான்ற மணன்மலி வியனகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும்படர் அகல நீக்கி
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே!
தெளிவுரை : சிறிதான மலர்களையுடைய முல்லையது, பெரிதாக மணம் கமழுகின்ற மலரினை நம் தலைவன் தானும் சூடியுள்ளனன்; அவனுடன் வரும் ஏவல் இளைஞரும் சூடியுள்ளனர். வானத்தையே கடந்தாற் போன்ற விரைவுடன் பொன்னால் ஆகிய முகபடாத்தை அணிந்துள்ள செருக்குடைய குதிரைகள், மிகுதியான மழை பொழிந்து தண்ணென்று தரை குளிர்ந்துள்ள நறுமணம் கமழும் காட்டினிடத்தையும் கடந்தவாய், நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியானது ஒலியாலே சிறந்ததாக ஒலி முழக்க, மாலைப் பொழுது மயங்கிய வேளையிலே மணல் மிகுந்த அகன்ற நாம் மாளிகையின் வாயிலிலே நம் நெடுந்தகையின் தேரையும் கொண்டு வந்து சேர்த்தன. எந்நாளும் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பம் எல்லாம் முற்ற விலகுமாறு நீக்கி, அவனுக்கு விருந்தினைச் செய்கின்ற விருப்பினளாக, நம் திருந்திய நலனணிந்த தலைவியும் ஆதலால், யாரும் கவலையடைதல் வேண்டாம் என்பதாம்.
கருத்து : 'அவள் துயர் மறந்து அவனை வரவேற்பாள்' என்பதாம்.
சொற்பொருள் : சிறுவீமுல்லை – சிறுபூக்களையுடைய முல்லை; முல்லையின் ஒரு வகை இது; இதன் பூக்கள் மிக்க மணம் உடையன; இதனைச் சாதிமுல்லை என்பர். அலரி – அலர்ந்த பூக்கள். இளைஞர் – ஏவலிளைஞர். படை–பொற்பட்டம்; கலணை எனக்கொண்டு சேணமாகவும் கொள்வர்; தேரிலே பூட்டப் பெருங் குதிரைகட்குச் சேணம் வேண்டாம் என்பதால் முகத்திலே அணியும் முகபடாம் என்றே கொள்க. படுமழை – மிகுந்த மழை; படுவெயில் எனவருவதும் நினைக்க. தண்நறும் புறவு என்றது, மழையிற் குளிர்ந்து மண்மணம் கமழும் காடு என்றற்காம். மான்ற–மயங்கிய; இது பொழுதைக் குறித்தது; இதனை அந்தி என்பது மரபு. மணல்மலி வியனகர் – பெருமனையிடத்தே, மணல் மிகுந்துள்ள முற்றப்பகுதி. அகல நீக்கல் – முற்றவும் போக்குதல். விருந்தயர் விருப்பு – விருந்து செய்யும் விருப்பம்; இது தலைவனுக்கும் பிறர்க்கும் இன்சுவை உணவு அளித்து உபசரித்தலும், அவனுக்கு ஆசைதீர முயங்கி இன்பம் தருதலும் என்னும் இருவகை விருந்தையும் குறிக்கும்.
விளக்கம் : தலைவனும் இளைஞரும் முல்லை சூடினர் என்றதும், தேர் படுமழை பொழிந்த தண்நறும்புறவின் வழியாக வந்தது என்றதும், அதுதான் கார்காலம் என்று சுட்டித் தலைவியின் சினத்தைத் தணிவித்ததாம். 'நெடுந்தகை' என்றது, தலைவனின் உயர்வைச் சுட்டி, அவன் சொற்பிழையான் என்று போற்றியதாம்.
பயன் : தோழி வாயில்களிடம் தலைவி விருந்தயர்வாள் என்று கூறும் பேச்சைக் கேட்டலுறும் தலைவியானவள், தன் சினத்தை மறந்து இன்முகத்தோடு தலைவனை வரவேற்று மகிழ்வாள் என்பதாம்.