உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/365

விக்கிமூலம் இலிருந்து

365. அவனூர் வினவிப் போவோமா?

பாடியவர் : கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சோகோவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து, 'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது.

[(து-வி.) தலைவன் வந்து செவ்விநோக்கி ஒருபக்கமாக மறைந்து நிற்பனைத் தோழி காண்கின்றாள். அவன் உள்ளத்தை விரைந்து தலைவியை மணந்து கொள்வதிலே செலுத்த நினைக்கிறாள். தலைவியிடம் நெருங்கிச் சென்று, அவனை இகழ்ந்து பேசுகின்றாள். இதனைக் கேட்கும் தலைவன், தன் அறியாமையை உணர்ந்து தெளிவான் என்பது இதன் பயனாகும். அந்தத் தோழியின் பேச்சாக அமைந்த செய்யுள் இது.]


அருங்கடி அன்னை காவல் நீவிப்
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்
பகலே பலரும் காண வாய்விட்டு
அகல்வயற் படப்பை அவனூர் வினவிச்
சென்மோ வாழி—தோழி!—பல்நாள் 5
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்தோய் மாமலைக் கிழவனைச்
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே.

தெளிவுரை : தோழீ! வாழ்வாயாக! பலப்பல நாட்களும் தொகுதியையுடைய மேகம் பெய்யாது போனாலும், அருவியின் ஒலியானது கேட்டபடியேயிருக்கும், நீர்வளத்தையுடைய பக்க மலைகளைக் கொண்டதும், வானத்தே தோய்ந்தாற்போல உயர்ந்ததுமான பெரிய மலைநாடன், நம் தலைவன். அவனை, 'நீ தான் சால்புடையவன் அல்லை' என்று சொன்னோமாக, மீண்டும் நம்மூர்க்கு வருவதற்கு—

அருமையான காவலைச் செய்துள்ள அன்னையின் காவல் ஏற்பாடுகளையும் கடந்தேமாய், பெரிய கடைவாயிலையும் நீங்கினமாய், ஊர்ப்பொதுவாகிய மன்றத்திடத்தே சென்று, பகற்போதிலேயே, பலரும் நம் செயலைக் காணும்படியாக, வாய்விட்டு, அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவன் ஊரினைக் கேட்டறிந்தேமாய், நாமும் செல்வோமோ? நீதான் கூறுவாயாக என்பதாம்.

கருத்து : 'அவன் நம்பால் அருளுடையவனாகத் தோன்றாததனாலே, அவனூர்க்கு நாமே நம் நாண்விட்டுச் சென்று, அவனிடம் 'இதுதான் நின் சால்போ?' எனக் கேட்டு வருவோமா? என்பதாம்.

சொற்பொருள் : கடி – காவல் நீவி – கடந்து. இறந்து – நீங்கிச் சென்று. மன்றம் – ஊர்மன்றம். படப்பை – கொல்லை. கருவி – தொகுதி. அயம் – நீர்வளம். சான்றோய் – சால்பு உடையவன்.

இறைச்சி : 'சால்பில்லாதவனது மலையாயிருந்தும் பல நாளும் மழையற்றபோதும், அருவிநீர் வீழ்கின்ற ஒலியுடையதாயிருக்கின்றதுதான் எதனாலோ?' என்று கூறி வியப்பது போலப் பழித்ததாகும்.

விளக்கம் : 'மன்றம் போகிப் பகலே பலரும் காண வாய் விட்டு அவனூர் வினவிச் சென்மோ?' என்றது, பெண்மைக்கு ஏலாத செயலேயானாலும், அதனை நாண்விட்டாயினும் நாம் செய்தால் அல்லாமல், அவன்றான், தானே நமக்கு அருளிச்செய்து காக்கும் சால்புடையவன் அல்லையே! என்று கூறி நொந்து பழிப்பதாகும் இது. இந்த நிலைக்கு அவரை அவன் செல்லவிடான் ஆதலின், விரைவிலே மணவினைக்கு ஆவன செய்வான் என்பதும் விளங்கும். 'அவனூர்வினவி' என்றதனால் வினவுதல் தம்மூரின் மன்றிடத்தே எதிர்ப்படும் பலரையும் என்க. இதனால், விளைவது பழியென்பதும் குறிப்பாக உணர்த்தினளாம். இதனால், அவன் களவே விரும்பியவனாக ஒழுகும் மனப்போக்கினன் என்பதும் அறியப்படும். ஊர்மன்றிற் சென்று அவனூர் வினவிச் செல்வோம் என்றது, ஊர்மன்றமே வழியோடு செல்வாரான பாணர் முதலியோர் பலரும் தங்கிப்போகும் இடமாதலால்.

"ஒரு சிறை நெஞ்சமோடு உசாவுங்காலை, உரியதாகலும் உண்டென மொழி" (தொல். பொருள். 203) என்னும் விதியால் இவ்வாறு மரபல்லாதன செய்வோமோ என்று நினைத்தலும் கூறுதலும் இயல்பாகும் என்று கொள்க. ஆயின் செய்வது என்பது இல்லை என்பதும் உறுதியாம்.

பயன் : இதனை கேட்கும் தலைவன் வெட்கித் தன் பிழையுணர்ந்தவனாய் விரைவில் மணவினைக்கு ஏற்பாடு செய்வான் என்பதும், தலைவி, அவன்பாற் கொண்ட அன்பின் உறுதிப்பாட்டைத் தோழிக்கு உணர்த்துவாள் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/365&oldid=1698683" இலிருந்து மீள்விக்கப்பட்டது