நற்றிணை-2/372
372. விளக்கம் எண்ணும் மகளிர்!
- பாடியவர் : உலோச்சனார்.
- திணை : நெய்தல்.
- துறை : மேல் இற்செறிப்பான் அறிந்து, ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்றவேண்டி, உலகியலின்மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியாரெனச் செப்பியது.
[(து-வி.) களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டிருக்கும் தலைவிக்கு, தான் இற்செறிக்கப்படுதல் கூடும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. அதை நினைந்து நினைந்து கவலையும் அதிகமாகி வருத்துகின்றது. அவளைத் தேற்ற நினைக்கும் தோழி, இது உலகத்தியல்பு; நின்னை நம்மவர் இற்செறித்து வையார் என்று தேறுதல் கூறுகின்றதாக அமைந்த செய்யுள் இது.]
அழிதக் கன்றே தோழி!—கழிசேர்பு
கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம்
வள்ளிதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக்
கிளைக்குருகு இரியும் துறைவன் வளைக்கோட்டு
5
அன்ன வெண்மணற்று அகவயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான்கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி—'அடைந்ததற்கு
இனையல் என்னும்' என்ப—மனையிருந்து
10
இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர்
திண்திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழிநல் லூரே!
தெளிவுரை : தோழீ! கழிக்கரையைச் சேர்ந்துள்ள கானற்சோலையிலேயுள்ள, பனையின் தேனையுடைய அழிந்த பழமானது மூக்கு இற்று, வளவிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு கரிய சேற்றிலே வீழ்ந்து ஆழமாகப் புதையுண்டு போனது. அது விழுந்த ஓசைகேட்டுச் சுற்றத்தைக் கொண்டவான நாரைகள் அஞ்சி ஓடிப்போயின. அத்தகு நீர்த்துறையினுக்கு உரியவன் தலைவன்! அவன், வளையாகிய சங்கைப் போன்ற வெண்மணலை உடையதான இடத்திலே நின்னைத்தழுவி மகிழவேண்டும் என்று விரும்பியது நினது பெருமித உள்ளம். அதனோடு பொருந்துமாறு, மனையிடத்தே இருந்தபடி மகளிர் ஓம்பிவர, கருங்கழியிடத்தே சென்று மீன்தேடுவர் பனியால் நனைந்த தலையினையுடைய பரதவர். அவருடைய திண்மையான மீன்பிடி படகிலிருக்கும் விளக்குகளை. அம்மகளிர் வீட்டிலிருந்து பார்த்து எண்ணியபடியே இருக்கின்ற தன்மையுடையது, கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழிசூழ்ந்த நம்முடைய நல்ல ஊராகும். அதுதான் நின்னை இனிமையோடும் பார்த்து, அன்னை நினக்குத் தந்த அசைகின்ற பெரிய கோலானது குலைந்ததனாலே நீ நோகின்றனை என நினைந்து அஞ்சும். "நினைந்து அதற்கு வருந்தாதே கொள்" எனவும் நின்னைத் தேற்றும். ஆதலின், நீதான் ஏங்காதிருப்பாயாக என்பதாம்.
கருத்து : "நின் துயரத்தை மறந்து ஆற்றியிருப்பாயாக" என்பதாம்.
சொற்பொருள் : அழிதக்கன்றே – அழியத் தகுந்தது அல்லவே. தேனுடை அழி பழம் – தேனையுடையது போல முற்றக் கனிந்து அழிந்த பனம்பழம். வள்ளிதழ் – வளவிய இதழ். மூக்கு – குலையில் இணைத்திருந்த பாகம். அள்ளல் இருஞ் சேறு – அள்ளுதல் அமைந்த கரிய சேறு. ஆழப் படுதல் – ஆழத்துள் வீழ்ந்து புதையுண்டு போதல். வளைக்கோட்டு அன்ன – வளையாகிய சங்கு போன்ற. அண்ணல் உள்ளம்- பெருந்தகவுடைய உள்ளம். இனையல் – அழுது வருந்தல். விளக்கம் – விளக்குகள். கண்டல் – ஒருவகைக் கடற்கரை மரம். அலங்கல் – அசையும். மணற்று –மணலையுடையது. கோடு – கொம்பு.
உள்ளுறை : முதிர்ந்து கனிந்த பனம்பழமானது, நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு நாரையினம் அஞ்சியோடும் என்றது, கனிந்த காதலுடையோனாகிய தலைமகன் நின்னை வரைந்தானாக நின்னில்லத்திற்கு வருவானாயின், அலர் கூறும் பெண்டிர்கள் அஞ்சி, வாயடங்கியவராகி ஒதுங்கிப் போவர் என்பதாம்.இறைச்சி : மகளிர் வீட்டிலிருந்தவாறு. மீன் பிடிக்கும் பரதவருடைய விளக்குகளை எண்ணியபடி இருப்பர் என்றது, பரதவர் மகளிரின் உள்ளம் எப்போதும் அவர்தம் காதலரைச் சுற்றியே படர்ந்துகொண்டிருக்கும் என்பதாம். இதை அறியாது போயினரே நம் தலைவர் என நொந்ததுமாம்.
விளக்கம் : மீன் பிடிக்கப் போகும் பரதவர் அவர்தம் தொழிலே கவலையுடையராய் முனைந்திருப்பர். அவர்தம் மகளிரோ அவர்தம் படகின் விளக்கினை எண்ணிக் கண்டபடி அவர் நலனை விரும்பி வேண்டியிருப்பர். அவ்வாறே தலைவி இல்லறமாற்றலை விரும்பி மணத்தை எதிர்பார்த்திருக்கவும், தலைவன் அவள் நினைவற்றுத் தன் போக்கிலேயே காலம் கடத்துகின்றான் என்பதாம். மீனுணங்கலைக் காப்பதற்குத் தந்த கோல் வளைந்ததென அவள் வருந்துவதாக நினைத்து, அவள் காதலனைக் காணாது வருந்துதலை நினையாத ஊர்ப்பெண்டிர், அவளைத் தேற்றுவர் என்று, ஊர்ப்பெண்டிரது கரவற்ற நல்ல உளப்பாங்கையும் உரைத்தனள்.
பயன் : தலைவன் வரைந்து வந்து மணந்து கொள்ளத் தலைவியும் அவனுடன் இணைந்து இல்லறம் இனிதாற்றி மகிழ்வள் என்பதாம்.