நற்றிணை-2/379
379. நீலமும் கூந்தலும்!
- பாடியவர் : குடவாயிற் கீரத்தனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : (1) தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; (2) காப்புக் கைமிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.
[(து-வி.) (1) தலைமகன் தோழியின் உதவியை வேண்டுகின்றான், தலைவியைப் பெறுவதற்கு. அவள், தலைவியின் குழந்தைத்தனம் மாறாத இயல்பை எடுத்துக்காட்டி, இத்தகையாள் எவ்வாறு நின்னுடைய ஆர்வத்துக்கு உதவமுடியும் என்று மறுக்கின்றாள். இவ்வாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகள் வீட்டிலே வைத்துக் காவற் படுத்தப் பெற்றனள். அவள் கலக்கத்தைப் பிரிவினது ஏக்கத்தால் என்று கருதிய தோழி ஆறுதல் கூற, அவள் அதற்கான காரணம் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகவும் கொள்ளலாம்.]
புன்தலை மந்திக் கல்லா வன்பறழ்
குன்றுழை நண்ணிய முன்றில் போகாது
எரியகைந் தன்ன வீததை இணர
வேங்கையம் படுசினை பொருந்திக் கைய
தேம்பாய் தீம்பால் வௌவலின் கொடிச்சி
5
எழுதெழில் சிதைய அழுத கண்ணே
தேர்வண் சோழர் குடந்தை வாயில்
மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயலுறு நீலம் போன்றன விரலே
பாஅய் அவ்வயிறு அலைத்தலின் ஆனாது
10
ஆடுமழை தவழும் கோடுயர் பொதியில்
ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த
காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே!
தெளிவுரை : ஐயனே! புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் அறிவு முதிராத வலிய குட்டியானது, குன்றத்தின் பக்கமாகவுள்ள சிறுகுடியிருப்பிலுள்ள வீடுகளின் முற்றத்தினின்றும் போகாதேயே இருக்கும். நெருப்பு கப்புவிட்டாற் போன்ற பூக்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய வேங்கையின் தாழ்ந்த கிளைமீதிலே பதுங்கியிருந்தபடி, ஒருநாள் கொடிச்சியின் கையகத்திலிருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தோடும் பறித்துக்கொண்டும் அது போய்விட்டது. அதனாலே, கண்மை எழுதிய எழிலுடைய தன் அழகெல்லாம் கெடும்படியாக அவள் அழுத கண்ணினள் ஆயினாள். இரவலர்க்குத் தேர்களை வழங்கி மகிழும் சோழரது 'குடவாயில்' என்னும் ஊரிடத்து, மழை பெய்து நிரம்பிக் கிடக்கும் அகழியிலே குளிர்ச்சியாக மலர்ந்துள்ள, பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலரைப் போன்றவாயின, அக்கண்ணீரைத் துடைத்த அவள் கையின் விரல்கள். அத்துடனும் நில்லாது, அழகிய வயிற்றினிடத்தேயும் மீண்டும் மீண்டும் அவள் அடித்துக் கொண்டதனாலே, இடையறாது இயங்கும் மேகங்கள் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் மலையினிடத்தே, உயர்ந்த பெரிய மலைப்பக்கத்திலே பூத்த காந்தளின் கொழுமையான மொட்டையும் போன்றவாய் அவை சிவந்தும் போயின. இத்தகையாளைக் கண்டு மயங்கியதும், நின் காமம் தணிப்பாள் அவளே என்பதும் பொருந்தாதுகாண் என்பதாம்.
கருத்து : அவள் நின் வேட்கை தீர்க்கும் பருவத்தாள் அல்லள் என்பதாம்.
சொற்பொருள் : கல்லா – தன் குலத் தொழில் ஏதும் – கல்லாத. வன்பறழ் – முரட்டுத்தனமுடைய குட்டி. குன்று உழை – குன்றின் பக்கம். முன்றில் – வீட்டு முற்றம். அகைதல் – கப்பு விட்டு எரிதல். இணர் – பூங்கொத்து. படுசினை – தாழ்வான கிளை. கைய – கையகத்துள்ள. கொடிச்சி – குறமகள். எழுதெழில் – மை தீட்டிய அழகு. மாரியங் கிடங்கு – மழை நீரால் நிரம்பிக்கிடக்கும் அகழி. குடந்தைவாயில் – குடவாயில். ஈரிய – தண்ணென. பா அய் – பரவி. அவ்வயிறு – அழகிய வயிறு. பொதியில் – பொதியில் மலை. கொழுமுகை – கொழுமையான மொட்டு, மணக்கும் பருவத்தது.விளக்கம் : கையிடத்துப் பாற்கலத்தைக் குரங்கு பறிக்க அழுது அழுது வயிற்றலடித்துப் புலம்பும் அறியாப் பருவத்தாள் என்று கூறுகின்றனள். அதுபோல அவள் நலனை நுகர்ந்து நீயும் அழுதரற்றச் செய்ய நினைத்தனை போலும் என்பதாம். ஏதிலார் அவளுக்கு வரைபொருளீந்து மணந்துபோக, நீ தான் மனந்தளர்ந்து வாட நேரிடும்; ஆகவே விரைய வரைவோடு வருக என்று குறிப்பால் உணர்த்தியதுமாம்.
பயன் : தலைமகன் தன் முயற்சியைக் சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பவனாவான் என்பதாம்.
2வது துறையின் தெளிவுரை : கொடிச்சியாகிய தோழியே! என் மேனியிலேயுள்ள மாற்றம் பற்றி வருந்துவையோ? பாலைப் பறித்துப்போக அழுதலால் கண் அழகழிந்தன; கண்ணீரைத் துடைத்துத் துடைத்துக் கைவிரல்கள் நீலம்பெற்றன; வயிற்றிலடித்து வாடியதால் கைவிரல்கள் சிவந்து காந்தள் முகை போல ஆயின; நீ வேறு நினைந்து வருந்தாதே என்பதாம்.
பயன் : தன் துன்பம் வாய்விட்டுக் கூறுதலானே சிறிது ஆறுதல் அடைதல்.