உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/388

விக்கிமூலம் இலிருந்து

388. அகல்வு அறியான்!

பாடியவர் : மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) வரைவுநீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது; (2) மனையுள் வேறுபடாது ஆற்றினாய் என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.

[(து-வி.) தலைமகன் வரைபொருள் குறித்துச் சென்றவன் குறித்த காலத்து வராது, காலம் நீட்டித்தலாலே தலைவியும் மனம் கலங்குகின்றனள். அவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பதறிந்து, தோழி அவன் செயலை ஐயுற்றாள் போலக் கூறுகின்றாள். அவளுக்குத் தான் அவன்பாற் கொண்டுள்ள நம்பிக்கையைத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) 'வீட்டிலிருந்தபோது எழில் வேறுபாடு தோன்றாமல் பிரிவுத் துயரை அடக்கிக் காத்தாய்' என்று தோழி பாராட்டிய போது, அதற்குத் தலைவி பதில் சொல்வதாகவும் இதனைப் பொருத்திக் கொள்ளலாம்.]


அம்ம வாழி தோழி!—நன்னுதற்கு
யாங்கா கின்றுகொல் பசப்பே நோன்புரிக்
கயிறுடை யாத்த கடுநடை எறிஉளித்
திண்திமிற் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறைக் 5
கடல்மீன் தந்து கானற் குவைஇ
ஓங்கிரும் புன்னை வரிநிழல் இருந்து,
தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப்
பெரிய மகிழும் துறைவன், எம்
சிறிய நெஞ்சத்து அகல்வறி யானே! 10

தெளிவுரை : தோழீ, வாழ்வாயாக யான் சொல்வதனையும் கேட்பாயாக. கடலிலே விரையச் செல்லக்கூடிய திண்ணிய படகினையுடைய பரதவர்கள், வலிமையான புரிகளைக் கொண்ட கயிற்றின் நுனியிலே கட்டிய, பெருமீன்களை எறிந்து கொல்லும் உளியினைக் கைக்கொண்டவர்களாக, ஒள்ளிய விளக்கங்களைக் கொளுத்திக்கொண்டு, நள்ளிரவுப் போதிலே மீன்வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று, வைகறை வேளையிலே கடலிற் பிடித்த மீன்களைக் கொண்டு வந்து, கானற் சோலையிடத்தே அவற்றைக் குவித்து வைத்துவிட்டு, உயர்ந்த கரிய புன்னை மரங்களின் வரிப்பட்ட நிழலிலே அமர்ந்திருந்தவராக, தேன் மணம் கமழ்கின்ற கள்ளினைத், தம் சுற்றத்தோடும் சேர்ந்திருந்து நிறையக் குடித்து, பெரிதாக மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகைய துறையை உடையவன் தலைவன்! அவன், எம் சிறிய நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் நீங்கி அறியான்! ஆகவே, என் நல்ல நெற்றிக்குப் பசலைநோய் என்பதும் எப்படி உண்டாகும்? அதுதான் உண்டாகாது காண் என்பதாம்.

கருத்து : 'அவன் நெஞ்சிலே நிற்பதால் யான் பிரிவை நினைந்து வருந்திலேன்' என்பதாம்.

சொற்பொருள் : நோன்புரி – வலிமிக்க புரி; வலிய புரிகளை மூன்றும் ஐந்துமாகச் சேர்த்து முறுக்கிய கயிறு என்பார்; நோன்புரிக் கயிறு என்றனர். யாத்த – கட்டிய. கடுநடை – கடுமையான வேகம். எறி உளி – எறியும் உளி. 'கடுநடை எறி உளி' எனக்கொண்டு, கடுவேகத்துடன் பெருமீன்கள் மேல் எறிந்து கொல்லும் உளி எனவும் கொள்ளலாம். திமில் – மீன்பிடி படகு. வைகறை – விடியல். குவைஇ – குவித்து. வரிநிழல் – வரிப்பட்ட நிழல். கிளை – சுற்றம்; ஏவற்சுற்றம் என்றலும் பொருந்தும். பெரிய மகிழும் – பெரிதான மகிழ்ச்சி கொள்ளும்.

உள்ளுறை : பரதவர் எறி உளியும் விளக்கமும் கொண்டு நள்ளிரவிலே கடல்வேட்டத்திற்குச் சென்று, வைகறையில் மீன் கொள்ளையோடு வந்து, மீன்களைக் கானலிலே குவித்து விட்டுப், புன்னை நிழலிலே சுற்றத்தோடு அமர்ந்து கள்ளைக் குடித்துப் பெரிதாகக் களித்திருக்கும் துறைவன் என்றனள். தலைவனும், அவ்வாறே வரை பொருளுக்குச் சென்று, பொருள் தேடியவனாக வந்து, அப்பொருளைத் தலைமகள் வீட்டு முற்றத்திலே குவித்துத், தமர் இசைவோடு தலைவியை மணந்து கொண்டு காமக் களிப்பிலே பெரிதாக இன்புற்றுக் களிப்பவனாவான் என்பதாம்.

விளக்கம் : 'சிறிய நெஞ்சம்' என்றது, அவன் உயர்வைச் சிறப்பிக்க நினைந்து கூறியதாம். 'தேங்கமழ் தேறல் கிளையோடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன்' என்றது, தலைவனையே குறித்ததாகவும் கொள்ளலாம். அப்படித் தன் இனத்தோடு கூடிப் பெரிதாகக் களித்திருக்கும் அவன், 'என் சிறிய நெஞ்சத்தும் அகலாதே உள்ளனன்' என்கிறாள் தலைவி. அவள் மீது வருத்தம் இருந்தாலும், அதையும் தன் செவ்வியால் மறைத்தொழுகும் பெண்மைப் பண்பு இது. அவள் இரவெல்லாம் உறங்காது புலம்பியிருந்தமையும். வைகறையில் அவன் களிப்புக் குரல்கேட்டு மேலும் நொந்தமையும் இச்செய்யுள் காட்டும்.

பயன் : இதனை மறைந்திருந்து கேட்பவன், தன்னுடைய நிலைக்கு வருந்தி விரைந்து மணவினைக்கான பலவும் முயல்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/388&oldid=1698711" இலிருந்து மீள்விக்கப்பட்டது