உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/392

விக்கிமூலம் இலிருந்து

392. நனி பேர் அன்பினர்!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) இரவுக்குறி முகம் புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.
[(து-வி.) (1) பகற்குறி வாயாமற் போதலாலே, தலைவியைச் சந்திக்க முடியாமற் போன தலைவன், தோழியின் உதவியோடு இரவுக்குறிச் சந்திப்பை விரும்புகின்றான். அவளும் அதற்கு இசைந்தாளாகித் தலைவி இருக்குமிடம் செல்கின்றாள். ஆயம் சூழ அமர்ந்திருந்த அவளிடம் சொல்லால் எதுவும் கூறமுடியாமல், முகக்குறியால், அவள் மட்டுமே அறிந்து கொள்ளுமாறு செய்தியைத் தெரிவிக்கின்றாள். அவள் கூற்றாக அமைந்த செய்யுள் இது; (2) வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த காலத்தில் வாராத வேதனையாலே வருந்தியிருந்த தலைவியிடம் வந்து, அவன் வருவது உறுதி எனத் தேறுதல் உரைக்கிறாள் தோழி என்றும் கொள்ளலாம்.]


கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை
புள்ளிமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென
மனையழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர்
துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின்
பணைகோள் வெம்முலை பாடுபெற்று உவக்கும் 5
பெண்ணை வேலி உழைகண் சீறூர்
நன்மனை அறியின் நன்றுமற் றில்ல
செம்மல் நெஞ்சமொடு தாம்வந்து பெயர்ந்த
கானலோடு அழியுநர் போலாம் பால்நாள்
முனிபடர் களையினும் களைப
நனிபேர் அன்பினர் காத லோரே! 10

தெளிவுரை : கொடுமையான சுறாமீனை எறிந்து கொன்று கைப்பற்றிய, கடுமையான முயற்சியையுடைய நம் தந்தையானவன், கடற்பறவைகள் ஆரவாரிக்கின்ற பெருங்கடலிலே, தம்மையும் உடன்கொண்டு போகாமற் சென்றனனாக, அதனால் மனையிடத்தேயிருந்து அழுதழுது வருந்தினர், மெல்லிய தலையை யுடையவரான அவன் சிறுவர்கள். அவர்கள், விரைவாக முயற்சியோடு கிடைத்த இனிய கண்ணையுடைய நுங்கின், பணைத்தலைக் கொண்ட விருப்பம்வரும் கொங்கையின் பயனைப் பெற்று, அதனால், தம் மனம் உவப்படைந்தனர். பனைமரங்கள் வேலிபோல அமைந்த அகன்ற இடத்தையுடைய அச்சிற்றூரிலுள்ள நம்நல்ல மனையினை காதலரும் அறிந்தால் மிகவும் நன்றே அல்லவோ! இரவின் நடுயாமத்திலே நம்மை வருத்தும் துன்பத்தை அவர் போக்கினாலும் போக்குவர். நம்பால் மிகப் பெரிய அன்பையும் உடையவர். அவர்தாம், செம்மாப்புற்ற நெஞ்சத்தோடு, முன்பு தாம் வந்து நம்மையும் மகிழ்வித்துப் பிரிந்துபோன கானற் சோலையிடத்துக்கு வந்து நின்று, இப்போதும், நம்மை வரக்காணாதே நெஞ்சம் அழிகின்றனர் போலும்!

கருத்து : 'அவர்தாம் நம் மனையகத்துக்கு விருந்தாக வரின் நன்று' என்பதாம்

சொற்பொருள் : கடுஞ்சுறா – கடுமையினையுடைய சுறாமீன். எறிந்த – எறி உளியால் எறிந்து வேட்டமாடிய. கொடுந்தாள் – கொடுமையான முயற்சி; கொடுமையாவது துடிக்கத் துடிக்கச் சுறாவைக் கொல்வது. புள் – கடற் புட்கள்; நீர்க் காக்கை போல்வன. கொள்ளான் – உடன்கொண்டு செல்லானாய். மனை – வீட்டில். ஒழிந்த – ஓய்ந்து கிடந்த. பாடுபெற்று – பயனைப் பெற்று; நுங்கை வாய்வைத்து உறிஞ்சிப் பருகி; பெண்ணை – பனை. உழைகண் – அகன்ற இடத்தையுடைய. செம்மல் – தலைமை; செம்மாப்பு. கானல் – கானற்சோலை; பகற்குறியிற் சந்தித்த இடம். பானாள் – நள்ளிரவு. முனி படர் – வருத்தும் துன்பம்.

இறைச்சி : தம் தந்தையோடு தாமும் செல்ல விரும்பியும், அவனால் நீத்து மனையிடத்தே விடப் பெற்றதனாலே அழுது வருந்திய சிறுவர்கள், பனையின் நுங்கை அருந்தி மகிழ்ச்சி அடைவர் என்றது, தலைவனோடு அவனை மணந்து மனைவியாகி அவனில்லம் சேர்ந்து மனையறம் நடத்த விரும்பும் தலைவியானவள், அஃது வாயாமற் போயினும், தலைவியின் இல்லத்திற்கே விருந்தினன் போல் வந்து தங்கி, அவளை அவன் இன்புறுத்தினனாயின், அதனாற் சிறிது மகிழ்ச்சியேனும் அடைவள் என்பதாம்.

விளக்கம் : பனைநுங்கை வாய்வைத்துக் கண்ணிடத்தே உறிஞ்சிச் சிறுவர் குடித்து மகிழ்வதற்கு, 'பணைகொள் வெம்முலை பாடு பெற்று உவக்கும்' என்று உரைத்த உவமை மிகவும் சிறப்பானது. மார்பகத்துக்குப் பனைநுங்கை உவமிப்பது மரபு; அந்த உவமையை மாற்றியுள்ளது மிகவும் சிறந்த நயமாகும். முதல் துறைக்கு, நீயுடன்படின் அவர் இரவு நேரத்தில் நம் மனைப்பாங்கில் வந்து நின் துயர்தணிப்பர் என்று குறிப்பால் உணர்த்தினதாகக் கொள்க. இரண்டாம் துறைக்கு அவன் வரைவொடு வந்தமை உணர்த்தியதாகக் கொள்க. தந்தை வேட்டம் போகியது உரைத்தது, இரவுக்குறி ஏதமின்றி இனிது வாய்ப்பதைக் குறிப்பால் உனர்த்தியதுமாகும்; 'நன்மனை அறியின் நன்று' என்றதால், அறியாது திகைக்காவாறு யானே சென்று அழைத்து வருவேன் எனத் தோழி சொன்னதாகவும் கருதலாம்.

பயன் : விரைவிலே தலைவன் வரைவொடு வந்து தலைவியை மணந்து அவள் துயர் தீர்ப்பவனாவான் என்பதாம்.

பாடபேதம் : கடுஞ்சுறா எறிந்த கொடுங்கோள் தந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/392&oldid=1698730" இலிருந்து மீள்விக்கப்பட்டது