உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/394

விக்கிமூலம் இலிருந்து

394: தண்ணியன் கொல்லோ!

பாடியவர் : ஔவையார்.
திணை : முல்லை.
துறை : (1) வினை முற்றி மறுத்தரா நின்ற தலைமகனை இடைச்சுரத்துக் கண்டார் கூறியது; (2) வன்சொல்லாற் குறை நயப்பித்த தோழி, தான் தனித்துக் கூறியதும் ஆம்.

[(து-வி.) (1) வினை முடித்து மகிழ்வோடு வீடு திரும்பி வரும் தலைவனை, வழியிலே கண்டவர் வியந்து பாராட்டித்தம்முள் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைவன் வந்து எவ்வளவு வேண்டியும் தலைவிக்கு அவன் குறையைச் சொல்லி இசைவித்துக் கூட்டுவதற்கு இசைய மறுத்த தோழி, அவனை விபந்து தன்னுள்ளே சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் எனினும் ஆம்.]


மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப்
பெய்ம்மணி யார்க்கும் இழைகிளர் நெடுந்தேர்
வன்பரல் முரம்பில் நேமி அதிரச் 5
சென்றிசின் வாழியோ, பனிக்கடு நாளே;
இடைச்சுரத் தெழிலி உறைத்தென மார்பின்
குறும்பொறிக் கொண்டே சாந்தமொடு
நறுந்தண் ணியன்கொல் நோகோ யானே?

தெளிவுரை : மரங்கள் மிகவும் நெருங்கி அடர்ந்துள்ள இடமகன்ற கானத்திடத்தே, வாடிப்போன ஞெமை மரத்திலே இருந்த பேராந்தையானது, பொன்வேலை செய்யும் கொல்லன் தட்டி எழுப்பும் ஒலிபோல இனிதாக ஒலித்துக்கொண்டிருக்க, பெய்துள்ள மணிகள் ஒலிக்கும் அணிபூட்டிய நெடிய தேரிலே, வன்மையான பரற்கற்கள் பொருந்திய மேட்டு நிலத்திலே தேர்ச்சக்கரம் அதிரும்படியாக, முன்பனி கடுமையாகப் பெய்த நாளிலே வேற்றூர் நோக்கி வினைபொருட்டாகச் சென்றனன். அவன்தான், இப்போது இடைச் சுரத்திடத்தேயே மேகங்கள் மழைபொழிந்ததென, மார்பினிடத்தே குறுகிய புள்ளிகளைக் கொண்ட சந்தனப் பூச்சோடு, நறிய குளிர்ச்சியமைந்தவனாயும் மீண்டு வருகின்றனன், இதற்கு யானும் நோவேனோ? மகிழவே செய்வேன். அவன் வாழ்வானாக என்பதாம்.

கருத்து : இனித் தலைவியின் வருத்தம் தீரும் என்பதாம்.

சொற்பொருள் : அலந்தலை – வாடிப்போன. குடிஞை – பேராந்தை. தெளிர்ப்ப – ஒலிப்ப. இழை – அணி. முரம்பு – மேட்டுநிலம். பனிக்கடுநாள் – முன்பனிக் காலமாகிய நாள். உறைத்தென – பெய்ததாக. தண்ணியன் – குளிர்ச்சியான பண்பினன்; தண்ணிய மலர்மாலை அணிந்தோனும் ஆம்.

விளக்கம் : அவன் பிரிந்து செல்லும்போது கானத்திலிருந்த வெம்மையின் தன்மைபோலவே, அவன் உள்ளமும் துன்புற்றுக் கடுமையாகிக் கிடந்தது; இப்போது திரும்பி வரும் போது மழையிற் குளிர்ந்த கானம் போலவே தன் உள்ளமும் நம்பாலுள்ள காதல் நினைவால் குளிர்ச்சியாக உள்ளது என்பதாம். சாந்தம் குறும்பொறிக் கொண்டது மழைத்துளி வீழ்தலால் என்க.

பயன் : இனித் தலைவியின் வேதனை அகன்று, அவளும் மனம் குளிர்வாள் என்பதாம்,

இரண்டாவது துறை : குறிஞ்சித் திணையின்பாற் படும். இதற்கு முன்னர் என்னிடம் வந்து தன் குறைதீர்க்க வேண்டி இரந்து நின்று கையுறை தந்துவிட்டுச் சென்ற தலைவன், இன்று, இடைச்சுரத்தே மழை பெய்தாற்போலக் குளிர்ச்சியோடு இன்று மீண்டும் வருகின்றானே! யான் நேற்று வன்சொற் கூறி அவனைப் போக்கினதற்கு நோவேனோ? இன்று அவன் தான் விரும்பியவாறு இன்புற்று மகிழ்வானாக என்று மகிழ்வேனோ? யாது செய்வேன்? என்று கூறியதாகக் கொள்க.

பயன் : தோழி, தானே தன்னுள்ளத்திற்குத் தலைவனின் காதலன்பைச் சொல்லி இவ்வாறு மகிழ்வாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/394&oldid=1698734" இலிருந்து மீள்விக்கப்பட்டது