உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை நாடகங்கள்/நான் பேசிய நாடகம்

விக்கிமூலம் இலிருந்து

9. நான் பேசிய நாடகம்



1

தமிழ் ஒரு பெருங்கடல். தமிழரது வரலாறும் ஒரு பெருங்கடல். அலைகள் மேலே ஓங்கியும், கீழே தாழ்ந்தும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. பேரூக்கம் ஒருகாலம்; பெருஞ் சோர்வு மற்றொரு காலம். தமிழ்ப் பாட்டுக்களைத் திரட்டுவது, அவற்றின் சுவையிலீடுபட்டு ஆராய்வது—இப்படி ஒரு காலம் வரும். தமிழரைவிடச் சுவையுணர்ந்து, அந்நூல்களைச் செல்லும் கரப்பானும் உண்ண விருந்தளித்த காலம் ஒருமுறை வரும். ஒரு பஞ்சம் வந்தபோது புலவர்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறி வாழவந்த கொடுமையையும், அதன் பின்னர் அகத்திணை மரபை அறிய முடியாமற் போகவே, ஆண்டவனே வந்து அறிவுறுத்தியதனையும் இறையனார் அகப்பொருள் உரை விரித்துக் கூறுகின்ற தன்றோ? தமிழ் நூலுலகிலும் இவ்வாறு பகலும் இரவும் மாறிமாறி வருகின்றன. சங்க காலத்திலேயே பாக்களைத் தொகுத்த காலமும் உண்டு. புலவர்கள் பெயரையும் மறந்துவிட்ட காலமும் உண்டு. விடுபாட்டுக்களாக உள்ளவையே நமக்கு அகப்படுவன. பொருட்டொடர்ச் செய்யுளாகச் சிலப்பதிகாரத்துக்கு முன் இருந்தவை காலக் கடலில் அமிழ்ந்துவிட்டன. தமிழர் வரலாற்றில் கடல்கோள்கள் பல காண்கிறோம். சம்பந்தர் பாட்டொன்றுதான் நெருப்பில் எரியாது, நீரோடு ஓடாது, பிழைத்தது என எண்ண வேண்டா; நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ப் பாடல்கள் எல்லாம் இவ்வாறு நெருப்பிற்கும் நீருக்கும் அழியாது நிலைநின்ற கன்னித் தமிழ்ப் பாடல்களேயாகும்.

தமிழ்க் கடலுள் ஊக்கம் என்னும் அலையோங்கிய காலத்தே சில பாடல்கள் நற்றிணையாகத் தொகுக்கப்பெற்றன. 'பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி'யே இப்பாடல்களையும் நமக்குத் தந்தவன். அதற்கு முன்னிருந்த கரிநாள்களை இந்தத் தொகை நூலே சிறிது விளக்குகின்றது. வண்ணப்புறக் கந்தரத்தனார் (71-ம் பா), மலையனார் (93-ம் பா), தனிமகனார் (153-ம் பா), விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் (242-ம் பா), தும்பிசேர் கீரனார் (277-ம் பா), தேய்புரிப் பழங்கயிற்றினார் (284-ம் பா) என்ற நற்றிணைப் புலவர்கள், நற்றிணையில் தாம் பாடிய பாடல்களில் வரும் அருந்தொடர்களால் பெயர் பெற்றவர்கள். இவர்களில், தனிமகனார், தேய்புரிப் பழங்கயிற்றினார் என்ற இருவரது இயற்பெயரை அந்த நாளைய தமிழுலகமே மறந்துவிட்டது. இத்தகைய நன்றிகெட்ட காலம் இடை இடையே தோன்றுவது தமிழின் தலையெழுத்து. இத்தகைய காலங்களை அடுத்தடுத்து நன்றியுள்ள மக்களும் தோன்றிவந்துள்ளார்கள்; நற்றிணை தொகுத்த காலத்து நன்றி மறவா மக்கள், அப்பாடல்களில் தம்மையும் மறந்து சுவைத்த நிலைமையால் புலவர்கள் இட்ட இலக்கியப் பெயரைக் காத்து இன்றும் நாம் உணர உணர்த்திச்சென்றார்கள்.

2

போர் நடந்த ஒரு நாட்டில், பல ஊர்கள் பாழாய்க் குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றைக் காக்க ஒவ்வொருவர் படைமக்கள் இருப்பர். அந்தக் கொடுநிலைமையை மனத்தில் எண்ணிப் பார்க்கும்போதுதான் தனிமகனார் பாட்டின் சிறப்பும், அவர்க்குத் தனிமகனார் எனப்பெயரிட்ட தமிழ்ப் பெருமக்களின் பாட்டுணர்வும் நமக்கு நன்கு விளங்கும். தலைவன் பிரிந்தான். அவனையே எண்ணிக் கிடக்கின்றாள் தலைவி; எண்ணம் அவன் பாலதாகலின் தன் நெஞ்சம் தலைவனிடமே போய்விட்டது எனப் புலம்புகிறாள். பல வகை வளங்களும் சிறந்த பட்டினம் போன்றது தலைவியின் அழகு என்று சொல்வது பழந்தமிழ் வழக்கு. அத்தகைய பேரெழில் எல்லாம் வாடிப் பசலை பாய்ந்து அழிந்துகிடக்கும் பாழ்ம் பட்டினம்போன்றிருக்கின்றது தன் உடல் எனப் புலம்புகிறாள் தலைவி. உடம்புதான் எஞ்சிநிற்கிறது. அந்த நிலையில் பாழ்பட்ட ஊரிலே தனியே ஊர் காத்திருக்கும் படைமகன் உண்பதும் பேயுண்பதுபோலத்தானே தோன்றும்! தலைவன் இருந்தாலன்றோ விருந்து! அவ்வாறு விருந்து புறந்தருதலை இழந்த தலைவி, 'தனியுண்டல் மிக இரங்கத்தக்கது' எனப் புலம்புகிறாள். அவளுடைய நாட்டம் அறமேயன்றி இன்பம் அன்று. மழை, எத்தனை நாள் மின்னிப் பெய்யவேண்டுமோ, அத்தனை நாளும் பெய்த பின்னர், அதற்குமேல் மழை பெய்தல் இல்லையாகவே, தன்னிருப்பிடம் செல்கிறது. அதுபோலத் தலைவியின் மனம் எத்தனை நாள் அவளுக்கு ஆறுதல் எண்ணங்களைத் தூண்ட முடியுமோ, அத்தனை நாளும் அவளுடன் இருந்து, பின் ஆற்ற முடியாத நிலையிலே, தலைவனே புகல் என அவனிடம் செல்கின்றது. இவ்வாறு தலைவி கூறும் கூற்று, ஆற்றாமையை மிக அழகாகப் புலப்படுத்துவதாகும். செம்பைக் கடையும்போது பொரிகள் பளபள எனப் பறப்பதுபோல. வானம் மின்னும் என்பது உள்ளதை உள்ளபடி உள்ளமுவக்கக் கூறும் உயர்வுடையதாகும்.

"குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்றற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்(டு) ஒழிந்து
உண்டல் அளித்தென் உடம்பே; விறல்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே." (நற்.158)

அந் நாளைய தமிழர், பொருளில் ஈடுபட்டுச் சுவைமிகுந்த பகுதிகொண்டு பெயரிட்ட மற்றொரு பாடலைமட்டும் கூறி மேற்செல்வாம்:

"புறந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின்
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்

உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்;
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தரும்என
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும்; ஆயிடை
ஒளிறுஏந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்என் வருந்திய உடம்பே." (நற்.284)

உலகில் பெருமக்களிடையே எழும் போராட்டத்தைக் குறிக்கின்றது இப்பாடல். அறிவு ஒரு புறம் இழுக்கின்றது. உணர்ச்சி ததும்பும் நெஞ்சம் மற்றொரு புறம் இழுக்கின்றது. தலை கொழுத்து நெஞ்சுலர்ந்து நிற்கின்ற உலக மன்றோ இன்று போரிடை மடிகின்றது! தலை சிறுத்து நெஞ்சு பெருத்த உலகம் பிறர்க் கடிமையாகிச் சாகும். பெருமக்களிடையோ பேரறிவும் பேருணர்ச்சியும் ஒருங்கே இயைந்து நிற்கக் காண்போம். தலைமகன் என்றால் அவ்வகையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் அல்லனோ? இவ்விரண்டினிடையே செயற்படும் ஊக்க நிலையும் விளங்கவேண்டும். அறிவும் உணர்வும் செயலும் அழகாக அமைந்த நிலையே முத்தமிழ் நிலை என உணர்தல் வேண்டும். அத்தகைய முத்தமிழ் நிலையில், உடம்பு, உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இயையச் செயல் செய்துவரும் ஓர் அருமையை இந்தப் பாடல் விளக்குகிறது. தலைவன், தலைவியின் கூந்தலே அணையாகக் கொள்ள, அவள் அன்பெலாம் மலரத் தன்னைக் கண்ட பார்வையைத் தலைவன் மறக்கின்றான் இல்லை. பிரிந்துவந்து பொருள் ஈட்டும் இந்த நிலையில் அப்பார்வை வந்து இவனை மருட்டுகின்றது. தானும் அவளும் ஒருவரே எனக் காட்டிய அந்தப் பார்வையை எண்ணுந்தோறும் தனியவள் வாட்டமும் மனக்கண்ணெதிரே தோன்றுகிறது. அவ்வாட்டந்தவிர அவளுடைய கூட்டந்தான் உறுதிப் பொருள் என்கிறது நெஞ்சம். செய்வினை முடிப்பதற்குமுன் போதல் அறியாமையாகும்; அங்குள்ளாரும் எள்ளத்தக்க இளிவரவு நிலையேயாகும். ஆதலின், சிறிது தாழ்த்துச் செல்லுதலே தக்கது என்று இவ்வாறு கூறுகிறது அறிவு. இவ்விரண்டில் எதனைத் துணிவது? இரண்டும் பொருத்த முடையன அல்லவோ? இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட செயனிலை படாதபாடு படுகின்றது. "இரண்டு நுனியையும் இரண்டு யானைகள் பிடித்திழுக்கின்றன; கயிறோ தேய்ந்த பழங்கயிறு. இவற்றிற்கிடையே அந்தக் கயிறு அற வேண்டுவதுதான். இந்த நெஞ்சிற்கும் அறிவிற்கும் இடையில் அகப்பட்ட செயற்படும் உடம்பின் நிலையும் அந்தக் கயிற்றின் நிலையே"—இங்ஙனம் வாய்விட்டுப் புலம்புகின்றான் தலைவன். இவ்வாறு முத்தமிழ் நிலையை விளக்கித் தலைவன் பெருமையையும் புலப்படுத்தி, அதற்கேற்ற உவமையையுந்தேடிக்கொடுத்து, உலகுள்ளளவும் மறக்கத்தகாத இப்பாடலைப் பாடியவரைத் தேய்புரிப் பழங்கயிற்றினர் என அழைத்த நற்றிணைத் தமிழுலகம், தன் நன்றியையும் தன் தமிழ்ச் சுவையையும் நிலைநாட்டியது எனலாம். இவ்வாறே பாட்டாற் பெயர் பெற்ற புலவரின் பாடல்களை உணர்ந்து துய்ப்பது தமிழர் கடனாகும்.

3

நெடுந்தொகை எனும் அக்நானூற்றுப் பாடல்கள் போல மிகப்பெரியன அல்ல இதன் பாடல்கள்; பொருள் முடிபு காண வருந்த வேண்டுவதில்லை. குறுந்தொகைப் பாடல்கள்போல மிகச்சிறியன அல்ல இவை; பொருள் ஆழங் காணாது அலையவேண்டுவ தில்லை. இடை நிகரனவான பாடல்களே இந்த நற்றிணையில் உள்ளன. இரண்டன் அழகும் இதனிடை உண்டு. அகத்திணைப் பாடல்களுக்குத் "திணை" எனப் பெயர் வழங்கும் மரபு உண்டு. திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது என்ற நூல்களின் பெயர்களைக் காண்க. அத்தகைய "திணை" என்ற பெயரோடு "நல்" என்ற அடையும் சேர வழங்குகிறது இந்நூல். "நல்ல குறுந்தொகை" என்று பிற்காலத்தார் பாடினார்கள். ஆனால் தொகுத்த காலத்தே "நல்" என்ற அடை இந்நூலுக்குத்தான் இடப்பட்டது என்பதை நாம் மறத்தலாகாது. ஆனாலும், இத்தொகை நூல்களில் வரும் பாடல்கள் எல்லாம் ஒரு தகையனவேயாம்; இவற்றில் ஏற்றத்தாழ்வு கூறுவதற்கு இல்லை.

4

இவற்றை, ஆசிரியர் முறையாகத் தொகுத்துச் "சைவ சித்தாந்த சமாசம்" நமக்குப் பெரியதோர் உதவி புரிந்திருக்கிறது. இப்போது தமிழுக்கு வந்துள்ள நல்ல காலத்தையே ஈதும் குறிக்கிறது. நற்றிணை நூல் பலர் கையிலும் பரவிக் கூத்தாடுமாறு செய்து, அதன் பொருளையும் விளங்க எழுதி உதவிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயரை நாம் மறக்கப் போமா? அவரோடு பழகிய மறைமலையடிகள், திரு.வி.க. முதலியவர்கள் அவருடைய சிறந்த தமிழன்பையும் உயர்ந்த ஆராய்ச்சியையும் புகழக் கேட்டுள்ளேன். இந்த நூல் அச்சாகி வெளிவருவதைக் காணாமலே அப்பெரியார் போனது மிகவும் மனத்தை வருத்துகின்றது. அவர் செய்த உரையினும் சிறந்த உரை சில பாடல்களுக்குச் சொல்லுதல் கூடும். ஆனால், நற்றிணை என்ற தமிழ்ச் சுவைப் பேழையை முதல் முதல் தம் உரையாம் திறவுகோல் கொண்டு திறந்தவர் அவரே என்பதனை நாம் மறத்தல் ஆகாது. முகம்புகு கிளவியின் பெருமையில் ஈடுபட்டும், உள்ளுறை இறைச்சியின் வேறுபாட்டைப் புலப்படுத்தியும், வரலாற்று ஆராய்ச்சியோடு இயைந்தும் எழுதிப்போகும் அவர் உரை நுட்பம் பெரிதும் பாராட்டத்தக்கதேயாம். முன் எல்லாம் தமிழ்ப் பெரியார் ஒவ்வொரு நூலையே வாணாள்வரை ஆராய்ந்துவருவார்கள்; பிற நூல்களைத் திறம்பெறக் கற்பதெல்லாம் தம் நூலை ஆராய்வதற்கென்றே முடியும். அத்தகைய ஆராய்ச்சித் திறமெல்லாம் நற்றிணையுரைக்குப் பயன்பட்டிருப்பது நன்கு தெளிவாகிறது. இந்நாளைய தமிழ்ப் புலவர்கள் அந்த வழியே செல்வார்களானால் மிகமிகப் பயன் உடையதாகும் என்பதில் என்ன ஐயம்?

5

அகத்திணை என்பது அன்பு வரலாறு. கடவுளும் காதலும் அன்றித் தமிழில் வேறென்ன இருக்கிறது எனச்சிலர் எள்ளி நகையாடுகிறார்கள். அவர்கள் உண்மை காணாதவர்களே. கடவுளும் தமிழ்க் காதலிலே ஒடுங்கிநிற்பதை அறிந்தால், பெருஞ் சிரிப்புச் சிரிப்பர் போலும்! அன்பே சிவம் என்பதற்குக் காதலே கடவுள் என்பதன்றோ பொருள்? கடவுளைச் சுட்டினொடு காட்ட வந்த சம்பந்தர் ஆண்நிலை மாறிப் பெண்ணாய்க் கடவுளாம் காதலன்மேல் வெறிகொண்டு, "இறை வளை சோர என் உள்ளங்கவர் கள்வன்" என்றன்றோ பாடுகிறார்! ஆழ்வார்களும் மற்றைய முதலிகளும் அத்தகைய கடவுட் காதல் கொண்டவர்களே யாவர். திருவள்ளுவர் கூறிய காமத்துப்பால் ஒப்புமை வழியாக வீட்டுப்பால் கூறியதே என்று கொள்ளுவோரும் உண்டு. அன்பை வளர்த்து, உலகோடு ஒட்ட ஒழுகி, ஒன்றாய் விடுவதே நீக்கமற நிறைகின்ற பெரு வாழ்வாகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என வாழ்வது இந்த முறையில்தான்.

இவ்வாறு, அன்பாக உலகத்தோடொட்ட ஒழுகும்போது, பிறர் செய்யும் பெருந்தீங்கையும் மறந்து வாழ்கிற நிலை வருதல் வேண்டும். பிறன் நஞ்சு வைத்தாலும், நாம் நஞ்சென உணர்ந்ததை அவன் அறியின், அவன் மனம் நடுங்கு மன்றோ என அவனுக்கிரங்கி, அந்நஞ்சையும் உண்பதே நாகரிகமாம். திருவள்ளுவர் கண்ட புது நாகரிகமாகும் ஈது:

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்." (திருக்.580)

இக் கருத்தை அகப்பொருட் சுவைததும்ப நற்றிணைப் புலவர் ஒருவர் பொன்னேபோற் போற்றிப் பாராட்டுகின்றார். நாகரிக உலகத்தில் குழவியுலகமே தோன்றுவதும் காண்க:

"புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவா யுறுக்கும் கைபோற் காந்தள்
குலைவாய் தோயுங் கொழுமடல் வாழை
அம்மடற் பட்ட அருவித் தீநீர்
செம்முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
அஞ்சில் ஓதிஎன் தோழி தோள் துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ
என்க ணோடி அளிமதி
நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே" (நற்.355)

என வருதல் காண்க.

மக்கள் மட்டும் அல்லர்; விலங்குகளும் பறவைகளும் அன்பாய் வாழ்கின்ற நிலையையும் மக்களது அன்பு வாழ்க்கைக்கெதிரே புனைந்துரைத்துப் போவதை, இந்நூலுள் எங்கும் பார்க்கின்றோம்.

"வண்புறப் புறவின் செங்காற் சேவல்
களரி ஓங்கிய கவைமுட் கள்ளி
முளரியங் குடம்பை ஈன்றிளைப் பட்ட
வுயவுநடைப் பேடை உணீஇய மன்னர்
முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம்" (நற்.384)

என்று முட்டையிட்ட பெண் புறாவிற்காகப் பாழடைந்து பாலையாய ஊர்களிலுள்ள நெல்லைக் கொண்டுவரும் ஆண் புறாவின் அன்பைப் புனைந்துரைத்தல் வாயிலாகப் பாலையின் சிறப்பை உணர்த்திய நயமும், தலைவன் சென்று இல்லறம் நிகழ்த்தப்போகிற பெருமையை இதன் வழியாக இறைச்சிப் பொருளாக உணர்த்தும் குறிப்பும் பாராட்டத் தக்கன. பெண் புலியின் பசிக்கு வருந்திய ஆண் புலி, யானையைக் கொல்வதாக மற்றொரு புலவர் கனாக்காண்கிறார்:

"கல்லயற் கலித்த கருங்கால் வேங்கை
அலங்கலந் தொடலை அன்ன குருளை
வயப்புனிற் றிரும்பிணப் பசித்தென வயப்புலி
புகர்முகஞ் சிதையத் தாக்கிக் களிறட்(டு)
உருமிசை உரறும் உட்குவரு நடுநாள்" (நற்.383)

எனக் கொடிய விலங்குகளிடத்தும், அன்பு, திருக்கூத்தாடுவதைக் காண்க. இத்தகைய பாடல்கள் பலப்பல.

6

ஓரறிவு உயிர்களையும், உடன் பிறந்தாராகக் கொண்டுவாழும் உயர் நிலையையும் இங்குக் காண்கிறோம். சகுந்தலை, கண்ணுவரை விட்டுப் பிரிகையில், அங்கே, தான் நீரூற்றி வளர்த்த செடிகளோடு எல்லாம் உறவு கொண்டாடுவதை,சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் பெரிதும் பாராட்டி இயற்கையனைத்தையும் உறவாகக் கொள்ளுகிற இந்தியரின் பேருள்ளத்தை எண்ணி எண்ணி வியக்கின்றார். அத்தகைய பேருள்ளம் தமிழ்ப்பேருள்ளமேயாகும். நீரூற்றி வளர்த்தாள் சகுந்தலை. பாலூற்றி வளர்த்தாள் தமிழ் மகள் ; அவ்வுறவைத் தான்மட்டுமன்றித் தன் மகளும் கொண்டாடுமாறு வாழ்ந்துவந்தாள். மணலில் கொட்டை முதலியவற்றை மறைத்துவைத்துப் பின் மணலை வரிந்து இரு கையையும் கோத்து வரிமணல்மேல் வைத்து ஒருத்தி இருப்பப் பிற மகளிர் அக்கொட்டையிருக்கும் இடத்தில் கை வைத்தெடுக்கும் விளையாட்டு, இன்றும் தமிழ்ச் சிறுமிகள் மிக மகிழ்ந்து விளையாடுவது ஒன்றாகும். அவ்வாறு விளையாடிய தமிழ் மகள் ஒருத்தி, புன்னைக் கொட்டையை மணலிலேயே மறந்துவிட்டுச் சென்றாள்; அது, முளைவிட்டு வளரத் தொடங்கியது; தன் குழவி எனப் பேசத் தொடங்கினாள்; பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்தாள்; பின்னே, மணமகளானாள்; மகளிரையும் பெற்றாள்: இம்மகளிரோ புன்னையேபோல விட்ட இடத்திலே ஆர அமர நில்லாமல், ஓடிஆடிப் பானையை உடைத்தும் பாலினை உருட்டியும் பிற குழவிகளை அலைக்கழித்தும் வந்தனர். அந்நிலையில் அவர்கள்மேல் சிறிது சினந்தோன்ற நிற்பவள், தன் முதற் குழவியான புன்னை, விட்ட இடத்திலேயே வேரூன்றியதைப் புகழ்ந்தாள். இவ்வாறு பன்முறை வற்புறுத்தியதைக் கேட்ட மகளும், அப்புன்னையைத் தன் தமக்கையாகவே நம்பி வாழ்ந்தாள்; பின்னொரு நாள், தன் தலைவனோடு கூட வருகையில், அப்புன்னை தன்னுடைய தமக்கையாகலின் அப்புன்னை நீழலில் தலைவனோடு நகையாடவும் நாணிநின்றாளாம். உறவாடுதல் எத்துணை தொலைவு சென்றுள்ளது கண்டீர்களாக !

"விளையா(டு) ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகும்" என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க நீநல்கின்
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே" (நற்.172)

என்ற பாட்டில் உயிர்களை எல்லாம் உறவாய்க்கொண்டு பாராட்டும் உயிரன்பின் ஒருமைப் பாட்டை யாரே வியவாதவர்!

இவர்கள், செல்வம் எனக் கொண்டதும் இவ்வுயிரன்பின் ஒருமைப்பாட்டுக் கொத்ததேயாம்.

"நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம்என் பதுவே" (நற்.210)

என வருவதன் உயர்வைத் தமிழர் அறிந்தின்புறுவாராக!

7

அன்பு என்றால் வெறுங்காதலன்று; உணர்வும் அறிவும் உணர்ச்சியும் இயைந்ததொருநிலையே; அன்பாயினார் ஒன்றாகின்ற நிலை. நிலத்திலே பொழிந்த மழைநீர் அந்த நிலத்தின் நிறமும் சுவையும் பெற, நிலமும் நீரின் தன்மை பெற்று நெகிழ்ந்து குழைகிறது. காதலனும் காதலியும் அவ்வாறு ஒன்றுபடுகின்றனர் எனச் செம்புலப்பெயல் நீரை ஒரு புலவர் உவமை கூறினர். அவ்வுவமையினும் இன்சுவை மிக்கதும் நறுமணங்கமழ்வதுமான ஓருவமையைக் கபிலர் பெருமான் நற்றிணையிற் கூறுகின்றார். தாமரை எங்கோ நீரில் பூக்கின்றது. அதன் தேன் அம்மணமும் இனிமையும் பெறுகிறது. சந்தன மரம் எங்கோ காட்டில் வளர்கின்றது. இயற்கை இவ்விரண்டின் தாதையும் ஒருங்கு கமழ வைத்துச் சந்தன மரத்தில் தேன்கூடு கட்டுதல் அமைகின்றது. சந்தனத்தின் நறு மணமே தேனின் மணமாகிறது; ஆனால், சுவையோ, தேனின் சுவையே. இவ்வாறு இயற்கை வழியே தலைவனும் தலைவியும் ஒன்றாகி ஒருவர் இயல்பு ஒருவரதாக இருவரும் ஒருவராகின்றனர். ஒருவரை விட்டு ஒருவர் வாழ்தல் எங்ஙனம் கூடும்?

"நின்ற சொல்லர் நீடுதோ(று) இனியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தா(து) ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந்தேன்போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின்(று) அமையா நம்நயந் தருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே !" (நற். 1)

இத்தகைய வாழ்க்கை இக் காலத்திற்கும் ஏற்றது அன்றோ?

இப்பிறவியில் மட்டு மன்று அவர்கள் ஒன்றாக வாழ விரும்பியது. "யான் இறப்பதற்கு அஞ்சவில்லை; ஆனால் மறு பிறப்பில் தலைவனை மறப்பேனோ என்றுதான் அஞ்சுகின்றேன் என்று கூறும் தலைவியின் கற்பு நிலையை என்னென்று புகழ்வது?

"தோளும் அழியும் நாளும் சென்றென
நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக்
கண்ணுங் காட்சி தவ்வின: என்நீத்(து)
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே !
நோயும் பேரும் மாலையும் வந்தன்(று):
யாங்(கு) ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாத லஞ்சேன்; அஞ்சுவல் சாவிற்
பிறப்புப்பிறி தாகுவ தாயின்
மறக்குவேன் கொல்லென காதலன் எனவே
" (நற்.397)

என வரும் பாடலைக் காண்க.

8

இவ்வாறு இரு மனமும் ஈருயிரும் ஒன்றாகித் தம்மையே மறந்து முனைப் படங்கி இறை பணி நிற்குந் தூய இன்ப வாழ்வை மறந்து, ஊற்றின்ப வாழ்வையே காதலெனக்கொண்டு, உணர்வு நுட்பம் ஒன்றுமின்றி நிற்கின்ற காலம் வந்தது. அப்போதுதான் "காமம் இழித்திடப்பட்ட தன்றே" என்று சிந்தாமணி பாடத்தொடங்கியது. அதுமுதல் தமிழனுடைய கெட்ட நாள் தொடங்கியது;. அடிமை வாழ்வுந்தொடங்கியது. தூய இன்ப வாழ்வைத் தமிழன், தானும் வாழ்ந்து உலகிற்கும் வழிகாட்டி வாழ்ந்து, உதவுவானாக!

9

மற்றும், நற்றிணை ஆராய்ச்சியால் தெரியவரும் வழக்கங்கள் பல; வரலாற்று நூல் உண்மைகள் பல; இயற்கை அழகுகள் பல; இலக்கண மரபுகள் பல. ஆனால், அவற்றை எல்லாம் ஆசிரியர் முறையாகச் சங்க நூல்கள் அனைத்தும் கொண்டு கோவை செய்தல் வேண்டுமாதலின் இங்கு விரித்தலிற் பயனில்லை.

அகத்திணையில் பல சுவையும் வரக்காண்போம். போசன், "சிருங்காரம் எனும் உவகைச் சுவை ஒன்றே உளது; அதன் வகைகளே மற்றைய சுவைகள் அனைத்தும்” என்று வடமொழியில் வற்புறுத்தியுள்ளான். இக்கொள்கையின் உண்மையைப் பிற அகத்திணை நூலிற் காண்பதுபோல நற்றிணையிலும் காண்கின்றோம். குறிஞ்சி நெய்தல் முல்லை பாலை மருதம் எனப் பகுத்துப் பார்க்கும்போது இவ்வுண்மையைக் காண்போம்.

இனிக் குறிஞ்சி முல்லை என வகுத்தவற்றை உரிப்பொருள் அளவில் கொள்ளாது, பிற இடத்தும் அவ்வரையறைகளைக் கொள்வது குருட்டு வழியேயாகும் என்பதனை உணர்ந்த நற்றிணைப் புலவர்கள் அக்கட்டுப்பாட்டை மீறியும் பாடிப் புதுவழி கண்டுள்ளார்கள்.

"சிறுவீ ஞாழற் பெருங்கடற் சேர்ப்பனை
ஏதில் ஆளனும் என்ப...................
கண்டல் வேலிய ஊர் அவன்
பெண்டென அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே." (நற்.74)

"பாண! பரத்தையோடு கூடினான் தலைவன் என்பதனை நீ மறுத்துரைத்து என்ன பயன்? ஊரெல்லாம் அவளை அவன் பெண்டு எனக்கூறுகின்றதே" எனத்தலைவி பாணற்கு வாயில் மறுத்தது மருதத்துக்குப் பொருந்துவதாகக் கூறவேண்டுவதை நெய்தற்குப் பொருந்தக் கூறியது காண்க. மற்றொரு பாடல் அவர் கூறும் பெண்களின் இயல்பை மிக அழகாக எடுத்துரைக்கின்றதாகலின் முழுவதும் கூறுதல் பொருத்தமாகும்.

"சிலரும் பலரும் கடைக்க ணோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
வலந்தனென் வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமாப் பூண்ட நெடுந்தோர் கடைஇ
நடுநாள் வருஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந் தொழிகஇவ் வழுங்க லூரே." (நற்.149)

இப்பாட்டு உடன்போக்குக் கூறுதலின் பாலையுரிப்பொருட்கு ஏற்ற பாலைத் தலைமகனைக் கூறுவது, கொண்கன் என நெய்தல் நிலந்தோன்றக் கூறுதல் காண்க இத்தகைய பாடல்கள் இன்னும் பல, ஆகவே, தமிழ்ப் புலவர்கள் கண்மூடிகளாய்ப் பழைய வழக்கிலே சிறைப்பட்டுக் கிடந்தவர்கள் அல்லர் என்பதனை நாம் உணர்தல் வேண்டும். இடைச் சங்கத்தில் உள்ளவர் எனக் கருதப்பெறும் தொல்காப்பியர் நற்றிணைப் புலவர்க்கு மிக மிக முந்தியவர் என்பது இதனால் வலியுறுதல் காண்க. திணைமயக்கிற் கிடமமைத்த அவரும் குருட்டு வழியை நிலை நாட்டினர் அல்லர். இடைச் சங்கம் அழிந்த காலத்திருந்தவனாக இறையனாரகப்பொருளுரை கூறும் முடத்திருமாறனுடைய பாடல்கள் இரண்டு (105, 228.) நற்றிணையில்தான் அமைந்துள்ளன. அப்பெருமையும் இத்தொகை நூற்குத்தான் பொருந்துகிறது.