நற்றிணை நாடகங்கள்/முன்னுரை
ஆசிரியர்
முன்னுரை
எனக்குப் பிறந்த முதல் குழந்தை ஈராண்டுக்குள் இறந்தது. வருத்தத்தில் மூழ்கிய எனக்கு அந்த வருத்தத்தினை மறக்கச் சிந்தாதரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளித் தொண்டு கிடைத்தது; அதன் செயலாளன் ஆனேன். ஆதலின், அதனை, மகவெனவே கொண்டு வாழலாயினேன். சிந்தாதிரிப்பேட்டைத் தொடக்க நிலைப் பள்ளி, இராவ் பகதூர் கலவலகண்ணன் செட்டியார் பெண்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை மாண்டிசோரிப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை ஆரம்பப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டைக் கலியாணம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி எனப் பள்ளிகள் இன்று வளர்ந்தோங்கி உள்ளன. சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியனாகத் தொண்டாற்றவந்ததும் பள்ளிகளின் செயலாளன் எனத் தொடர்ந்திருப்பது இயலாததாயிற்று. திரு. துரை வேலனார் அன்புடன் முன்போந்து செயலாளராகத் தொண்டாற்றிவருகிறார். ஆதலின், வருத்தம் ஒருவாறு எனக்கு மகிழ்ச்சியாக மாறியது.
பள்ளியோடு கால் நூற்றாண்டு தொடர்ந்திருந்த என் நினைவைப் பாராட்டவேண்டும் என்று நண்பர்கள் விரும்பினார்கள். தொண்டினைச் செய்தோம் என்ற நிறைவுள்ளமே பெரிய பாராட்டு. அதற்கு மேலும் பாராட்டு ஏன்? ஆனால் இளைய நண்பர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். யான் எழுதிய கட்டுரைகள் இதுவரை நூல்வடிவில் வெளிவராதவற்றைத் திரட்டி நினைவுப்பதிப்பாக வெளியிடுவதே இந்தப் பாராட்டு என்றபோது எவ்வாறு நான் மறுக்கத்தகும்?
இந்தச் சூழ்ச்சியைச் செய்த திரு. துரைவேலனார், திரு. பிநாகபாணியார், திரு. சண்முகசுந்தரனார், திரு. இராசேசுவரி அம்மையார், திரு. துரைக்கண்ணனார். திரு. துரை அரங்கனார் முதலியோருக்கும் இதனைத் தம் பதிப்பாக அச்சிட முன்வந்த திரு. பழனியப்பா அவர்களுக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் ?
இப்போது, நற்றிணைப் பாடல்களுள் ஒன்பது பாடல்கள் கொண்டு நான் எழுதிய சிறு நாடகங்கள் வெளிவருகின்றன. இவற்றுள் சில, பத்திரிகைகளிலும், வானொலியிலும் வெளியானவை.
இவற்றைத் தமிழ்மக்களுக்கு என்றே எழுதினேன். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ? என் கருத்துக்கள் என் கருத்துக்களே ! என் முகம்போல மற்றோரு முகம் இராது. ஆதலின், என் கருத்துக்கள் எல்லோர் கருத்துமாக முடிவது அருமை. என்றாலும், அன்பினால் குற்றத்தினைப் பொறுத்து வாழ்த்துவது அன்றோ தமிழ் மரபு? அதனையே நம்பி வாழ்கறேன்.
சென்னை, | தெ. பொ. மீனாட்சிசுந்தரன். | ||||
4-12-1954. |