உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - தொகுதி 2/இணைப்பு—2

விக்கிமூலம் இலிருந்து


இணைப்பு—2

தொல்காப்பியப் பொருளதிகாரம் களவியல் உரையுள், நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டும் செய்யுள் (தொல். பொருள், களவு 23) ஒன்று நற்றிணைப் போக்கில், பத்தடியளவில் அமைந்துள்ளது. அதுவே காணாமற்போன பாட்டாகக் கொள்ளலாம் என்பர் சிலர். அது வருமாறு:


நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறை
புதுவை யாகலின் கிளத்தல் நாணி
நேரிறை வளைத்தோள் நின்தோழி செய்த
ஆருயிர் வருத்தம் களையா யோ! என,
எற்குறை உறுதிர் ஆயின், சொற்குறை 5
எம்பதற் தெளியள் அல்லள்; எமக்கோர்
கட்காண் கடவுள் அல்லளோ—பெரும!
ஆய்கோல் மிளகின் அமலையம் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறம் தைவரும்
மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே!

தெளிவுரை : பெருமானே! ஆய்ந்தெடுத்த கோல்போல நேரிதாகப் படர்ந்து செல்லும் மிளகினது வளமான செழித்த கொடியானது, தூங்கிக் கொண்டிருக்கும் புலியினது கோடுகள் அமைந்த மேற்புறத்தைத் தடவிவிடும், மேகங்கள் சூழ்ந்த கருமணி போன்ற மலைநாட்டு மன்னவனின் மகள் அவள். அவள்தான் எம்போலும் தகுதியுடையார் அணுகி வசப்படுத்துவதற்கு எளிமையானவளே அல்லள். எமக்கெல்லாம் கண்ணெதிரே காண்கின்றதற்குரிய ஒரு கடவுள் போல்வாளும் அவளாவாள் அல்லவோ! ஆகவே நேற்றும், அதற்கு முதல் நாள் பகல் வேளையிலும், ஒரு பக்கமாக வந்து நின்ற நீதான், இவ்விடத்துக்குப் புதியவன் ஆதலினாலே, நின் கருத்தை எடுத்துச் சொல்லுவதற்கு நாணினையாய்த், திரும்பிச் சென்று, இன்று நேரான முன்னங்கைகளையும் வளையணிந்த தோளினையும் உடையவளான நின் தோழியாவாள் செய்த, என் அரிய உயிரே போவதான இந்த வருத்தத்தைப் போக்க மாட்டாயோ? என்று என்னிடத்தே நின் குறையினைச் சொல்லுதற்கும் முற்படுவாய் ஆயினை! நின் சொற்கள் எம்மால் நிறைவு செய்தற்கு இயலாதனவாதலின் குறையுள்ளனவேயாகும் என்று அறிவாயாக என்பதாம்.

கருத்து : தலைவியை நீ அடைவது முடியாதது என்பதாம்.

சொற்பொருள் : நெருநல் – நேற்றைக்கு. முன்னாள் – அதற்கு முந்தின நாள். எல்லை – பகல்வேளை. ஒரு சிறை – ஒரு பக்கம். நேர் இறை – நேரான முன் கை. எம் பதத்து – எம்முடைய நிலைக்கு. கட்காண் கடவுள் – கண்ணெதிரே காணக் கூடிய தெய்வம். மணிவரை – கருமணி போலும் மலை.

விளக்கம் : துஞ்சும் புலிதான் தனக்குத் தடவித்தருவதற்கு எதனையும் நாடாத போதும், மிளகுக் கொடிதானே அதன் முதுகைத் தடவித் தந்து இன்பம் தருதல் கூறினாள். அவ்வாறே நீயும் நீ எதிர்பார்த்தற்கு உரியதல்லாத தலைவியின் உறவின்பத்தை அடைதலும் கூடும் என்றனள். 'கட்காண் கடவுள் அல்லளோ?' என்றது தலைவியின் சீர்மையை உயர்த்து, வியந்து கூறியதாம்.

பயன் : இங்ஙனம் மறுத்துக் கூறினாலும், அவன் நிலையறிந்து இரக்கமுற்றுத், தலைவியை இசைவிக்கவும் தோழி உதவுவாள் என்பதாம்.