உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - தொகுதி 2/ஈடில்லா நற்றிணை!

விக்கிமூலம் இலிருந்து

ஈடில்லா நற்றிணை!

வையத்தில் முதன்முதலாய் அறிவைப் பெற்றோர்
      வழிமுறைகள் வாழ்வியற்கே வகுத்துக் கண்டோர்
தெய்வத்தின் அருள்போற்றித் தமிழை வாழ்த்தித்
      தீதகற்றி நலன்கொழிக்கச் சிறந்தே வாழ்ந்தோர்
வையத்தின் வாழ்வுநெறி இவைதாம் என்ன
      வருமினமும் காணுதற்கே வடித்து வைத்தோர்
வையத்தின் முதன்மக்கள் தமிழ மக்கள்
      வழிப்பிறந்தோம் நாம்அவரை வணங்கு வோமே! 1

முகிழ்த்ததமிழ் அவரறிவின் ஊற்றே யாகும்.
      மூதறிஞர் புலவர்பலர் பாணர் வள்ளல்
செழித்ததுவும் அவர்வாழ்வின் சிறப்பா லாகும்
      செழுந்தமிழின் செய்யுள்வளம் பொருளின் சீர்த்தி
முகிழ்த்ததுவும் அவர்முனைந்து மொழியைப் போற்றி
      முனைப்போடு உயிரென்னக் கொண்ட தாலாம்
செழித்ததமிழ் செம்மொழியாய் உயர்ந்தே நாளும்
      சிறந்ததவர் தமிழ்ப்பற்றின் சிந்தை யாலாம்! 2

சூழ்ந்தநிலத் தன்மையினால் உள்ளத் துள்ளே
      சுடரிட்டே உணர்வுகளும் தோன்றும் என்றார்
வாழ்ந்திருந்த மக்களது வாழ்வை ஆய்ந்து
      வகைப்படுத்திக் குறிஞ்சியொடு முல்லை பாலை
சூழ்ந்தகடல் நெய்தல்வயல் மருதம் என்றார்
      தொடர்போடு வாழ்வதுவும் அமையும் என்றார்
ஆழ்ந்தறிந்து அவற்றில்வரும் ஒழுக்கம் மக்கள்
      அறிவினிலும் வாழ்வினிலும் அரும்பும் என்றார்! 3

வேறு

உணர்வுகள் உள்ளம் தன்னில்
      ஊற்றெடுத் தெழுந்து பாயக்
கனவுகள் எழுந்து மோதிக்
      கலக்கிட நெஞ்சம் தன்னை
நனவிலும் உறக்கம் கெட்டே
      நடுங்கிடும் இராக்கா லத்தும்
அனமெனும் குமரி காதல்
      அரும்பிட மயக்கங் கொள்வாள்! 4

கண்டதும் ஊழ்தான் கூட்டக்
      கரைந்திட்ட நெஞ்சம் தன்னில்
பெண்டினைக் குடிதான் வைத்துப்
      பிறவெலாம் நினையா தெய்த்து
மண்டிடும் காதல் நோயால்
      மயங்கியே மறந்தே என்றும்
வண்டென வீழ்ந்தே கன்னி
      வலையினில் துடிப்பான் காளை! 5

தினந்தினம் இவர்தான் கொள்ளும்
      சிந்தனை பேச்சின் போக்கும்
மனந்தனில் வாங்கிச் சான்றோர்
      மாத்தமிழ்த் தேனைக் கூட்டி
இனந்தரும் இயற்கைத் தூண்டல்
      இவையென வகுத்துக் காட்ட
மனந்தனிற் கருணை கொண்டார்
      மலர்ந்தன அகநூல் எல்லாம்! 6

வேறு

வகுத்தபல வாழ்க்கையதன் பகுதி எல்லாம்
      வண்தமிழின் ஓவியமாய் இனிமை துள்ளத்
தொகுத்துபல இலக்கியமாய்த் தொன்மைக் காலத்
      தொல்தமிழர் வாழ்வியலாய் வழங்கும் என்றே
தொகுத்தவற்றை முறைப்படுத்தித் தொகையும் காட்டித்
      தொல்லோர்கள் அகநூல்கள் என்றே பண்டு
பகுத்தவற்றுள் நல்லனவாம் ஒழுக்கம் காட்டும்
      பாவளத்தில் நற்றிணைக்கோர் ஈடே இல்லை 7

நற்றிணையின் நயமெல்லாம் நாளும் ஆய்ந்தே
      நல்லவுரை வகுத்திட்டார் நலங்கள் காட்டிக்
கற்றறிந்த புலமையுடன் தமிழின் ஆர்வம்
      கனிந்தவுளப் பின்னத்தூர்ப் புலவர் செம்மல்
நற்றிறத்து நாராயண சாமி அய்யர்
      நவின்றவுரைத் துணையின்றேல் நமக்கே நல்ல
நற்றிணையின் செழுமையொடு தமிழின் சீர்த்தி
      நலம்நுகர மார்க்கமில்லை உண்மை தானே! 8

அவர்பின்னர் ஔவையெனும் ஆழ்ந்த ஞான
      அறவோரும் பேருரையால் அழகு செய்தார்
இவர்செய்த உரைநலத்தால் இன்பம் கண்டார்
      இயற்றமிழில் வல்லவர்கள்; எவரும் கற்றே
நலம்காணத் தெளிவுரையிஃ தமைத்தேன்; நல்ல
      நற்றமிழப் பாரியவர் பதிப்பிக் கின்றார்;
வளம்நிறைக தமிழுலகம் தமிழ்ப்பற் றோங்கி
      வான்முட்டத் தமிழ்முழக்கம் எழுக யாண்டும்! 9

புலியூர்க் கேசிகன்
7 - 9 - 1980