நற்றிணை 1/047
47. சொன்னால் என்னவோ?
- பாடியவர் : நல்வெள்ளியார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : சிறைப்புறமாகத் தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.
[(து–வி.) களவுக் காலத்தே பிரிந்து, அப்பிரிவையும் நீட்டிக்கச் செய்தான் ஒரு தலைவன். அவன் பின்னொரு நாள் வந்து, ஒருசார் தலைவியைக் காணுஞ் செவ்வியைத் தேர்ந்தானாக நிற்கின்றான். தோழி, அவன் உள்ளத்தைத் தலைவியொடு மணவினை நேர்தலிற் செலுத்தக் கருதினாள். தலைவிக்கு உரைப்பாள் போல. அவனும் கேட்குமாறு இவ்வாறு கூறுகின்றாள்.]
பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ, ஓய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்
5
கானக நாடற்கு, 'இதுஎன' யான்அது
கூறின் எவனோ தோழி! வேறுஉணர்ந்து
அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
பொன்நேர் பசலைக்கு உதவா மாறே?
10
தோழீ! நின் மேனியிடத்துக் களவுக்காலத்து நேர்ந்த இந்தப் பிரிவுத்துயரினாலே வந்துற்ற வேறுபாட்டினை கண்டனள் அன்னையும். அதுதான் வேறொன்றாலே வந்துற்ற தெனவும் அவள் கருதினாள். தெய்வம் அணங்கிற்றாதலை அறிதற்குரிய கழங்கினிடத்தே. அம்மாறுபாட்டைக் குறித்துக் குறிகாணவும் நினைந்தாள். அதனைக் காரணமாகக் காட்டி, 'முருகை வேட்டு வெறியயரத் தீரும்' எனவும் நம்பினாள். அந்த நினைவோடு, ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலியிட்டு, முருகிற்கு வெறியும் அயர்ந்தாள். வெறிக்களத்தே, வேலன்பால் தோன்றிய முருகும், நின் பொன்னொத்த பசலை நோய் தீர்தற்கு உதவாமற் போதலைக் கண்டாள். அதன் பின்னர்ப் பெரிதும் கவலையுற்றவள் ஆயினாள்.
புலியானது, தனக்குரிய பெருங்களிற்றைக் கொன்றதனைக் கண்டது, அதன் கரிய பிடியானை ஒன்று. அதனால், வாடச்செய்யும் பிரிவு நோயாகிய வருத்தத்தோடு, தான் நின்ற இடத்தினின்றும் அகன்று இயங்குதற்கும் மாட்டாதாய், அது ஆயிற்று. நெய்தலின் பசுமையான இலையைப் போலத் தோற்றும் அழகிய காதுகளையுடையதும், தகப்பனை இழந்து துன்புற்றிருந்ததுமான தன் அழகிய கன்றினைத்தான் தழுவிக் கொண்டதாய்த், திடுமென விரைவாக வந்தடைந்த ஆற்றுதற்கரிய புண்ணுற்றார் ஒருவரைப் போலப் பெரிதும் வருத்தமுற்று, அவ்விடத்தேயே நிற்பதுமாயிற்று. அத்தன்மையினையுடைய கானக நாடன் நம் தலைவன் ஆவான்!
அவனுக்கு, 'நம் நிலைமைதான் இத்தன்மையது' என்று அதனைக் குறித்துக் கூறினால் எதுவும் குற்றமாகுமோ?
கருத்து : 'விரைய வந்து நம்மை மணந்துகொள்ளுமாறு அவனை வற்புறுத்துவோம்' என்பதுமாம்.
சொற்பொருள் : உழுவை – புலி. பிணி – பிரிவாலுற்ற நோய்; உள்ளத்தைப் பிணித்துக் கொண்டிருத்தலாற் பிணியாயிற்று. இயங்கல் – இடம்விட்டு நகருதல். பைதல் – துன்பம்.
விளக்கம் : 'முருகு உதவாமாறு' காணும் அன்னை, இது தெய்வக் குற்றமன்று என்பதனைத் தெளிந்து, தலைவியது களவுறவை அறியவும், அதனால் தலைவியை இற்செறிக்கவும் நேருமாதலின், வரைந்து வந்து மணத்தலே செய்தற்கு உரித்தாகுமெனத் தலைவனும் உணர்வான். ‘கழங்கு காணல்' ஒரு வகைக் குறிபார்த்தல். 'அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி, சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல், ஆகுவதறியும் முதுவாய் வேல! கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம்' எனக் குறிகேட்டறியும் மரபினைக் 'கயமனார்' மணிமிடைபவளம் விளக்கிக் கூறுகின்றனர் –(அகம். செய்யுள் 195). 'யான் அது கூறின் எவனோ?' என்றது, நம்பால் அருளுற்று நம் துயரையறிந்து தீர்த்தற்கு மறந்தானாகிய அவனுக்கு, யானே அதுகுறித்துக் கூறித் தெளிவித்தால் என்ன தவறோ?' என்றதாம். இதனால், தலைவி தோழிக்குக் கூறியதாக இச்செய்யுளைக் கொள்வதும் பொருந்துவதாகும்.
உள்ளுறை : 'களிற்றின் பிரிவுக்கு ஆற்றாத பிடியானது, தன் கன்றைத் தழுவியபடியே செயலற்று வாடி நிற்கும் நாடன்' என்றது, 'அத்தகைய நாட்டினனாயிருந்தும், தன்னைப் பிரிந்ததனால் தலைவிக்கு வந்துறும் பெருநோயைப் பற்றிக் கருதானாய், அவளை வரைந்கொள்ளாதும், பிரிந்து நெடுநாள் அகன்று போயும் அருளற்றவன் ஆயினனே' என்று நொந்ததாம். 'தலைவனை இழந்த பெருவருத்தத்தோடும் செயலற்ற பிடி, தன் கன்றினைக் காத்துப் பேணும் பண்பினதாய் அதனைத் தழுவி நின்றாற்போலத், தலைவனின் பிரிவுக் கொடுமையால் நலனிழந்த தலைவி, நாணாகிய நலனுடைமையால். தன் துயரைப் பிறர் அறியாதபடி காக்துப் பேணி நின்றனள்' என்று, அவளது கற்பு மேம்பாட்டைக் கூறியதும் ஆகும்.