நற்றிணை 1/055
55. சந்தனக் கொள்ளி!
- பாடியவர் : பெருவழுதி.
- திணை : குறிஞ்சி,
- துறை : வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவிக்குச் சொல்லியது.
[(து–வி.) வரைவுக் காலம் நீட்டித்துக் கொண்டே போகக் களவுறவை விரும்பி வந்து குறியிடத்தே தலைவி பொருட்டாகக் காத்து நிற்கின்றான் தலைவன். அவனைக் கண்ட தோழி, தான் தலைவியை ஆற்றுவித்திருந்த தன்மையை அவனுக்குக் கூறுகின்றாள்]
ஓங்குமலை நாட! ஒழிகநின் வாய்மை!
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி,
உறுபகை பேணாது, இரவில் வந்து, இவள்
பொறிகிளர் ஆகம் புல்லத் தோள்சேர்பு,
5
அறுகாற் பறவை அளவுஇல மொய்த்தலின்
கண்கோள் ஆக நோக்கிப் 'பண்டும்
இனையையோ!'யென வினவினள், யாயே;
அதன்எதிர் சொல்லா ளாகி, அல்லாந்து
என்முகம் நோக்கி யோளே: 'அன்னாய்!'
"யாங்குஉணர்ந்து உய்குவள்கொல்?" என, மடுத்த
10
சாந்த ஞெகிழி காட்டி—
ஈங்குஆ யினவால்' என்றிசின் யானே.
ஓங்கிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! நின் வாய்மைகள் எல்லாம் இனி ஒழிவனவாக! மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறு வழியிடத்தே, நின்னை வந்தடையும் மிக்க பகையினைப் பொருட்படுத்தாதே, இரவுப் போதிலே, நீயும் வந்து தலைவியது திருவிளங்கும் மார்பைத் தழுவிச் செல்வாய். அந்த மணத்தை விரும்பியவாய், இவள் தோள்களிடத்தே சார்ந்து, அளவற்ற வண்டினங்கள் ஒரு சமயம் மொய்த்துக் கொண்டன. அதனைக் கண்ட அன்னை, கண்களாற் கொல்வாள்போல இவளது மார்பினை நோக்கினாள். 'மகளே! நீ முன்பும் இந்த மணத்தை உடையையோ?' எனவும் வினவினாள். அதற்கு எதிருரை சொல்லமாட்டாத நிலையளாகி வருத்தமுற்று இவளும் என் முகத்தை நோக்கினாள். 'அன்னையைத் தெளிவிக்கும் வகையை எப்படி அறிந்து இலள் பிழைக்கப் போகின்றாளோ!' என யானும் கலங்கினேன். அடுப்பிலிட்டிருந்த சந்தன விறகின் கொள்ளியைக் காட்டியவாறே, இதனை அடுப்பிலிட, இதன்பாலிருந்த வண்டுகள் அகன்று போய், இவள் தோள்களிலே மொய்த்தன, அன்னாய்' என்றும் கூறினேன்.
கருத்து : 'இனியும், இவளது பிரிவுத் துயரையும் களவு உறவையும் அன்னைக்கு மறைத்தல் அரிது' என்பதாம்.
சொற்பொருள் : வாய்மை – வாய்மை தோன்றக் கூறிய சொற்கள்; அதனை அவன் பொய்த்து ஒழுகலின் 'ஒழிக' என்றனள். காம்பு – மூங்கில். பொறி திருமகள்; அழகு; தேமற்புள்ளிகளும் ஆம். கோள் – கொல்லுதல். ஞெகிழி – கொள்ளி.
விளக்கம் : ஒழிக நின் வாய்மை' என்றது, பன்னாளும் வரைந்து வருவதாகக் கூறிய உறுதிமொழிகளைப் பொய்த்ததனால். 'பண்டும் இனையையோ? என வினவியது, அவள் பெற்ற புதுமணத்தைக் கண்டு வினவியதாம் அது சந்தனச் சாந்தின் மணம் என்பதும் விளங்கும். அல்லாந்து – வருந்தி, இவற்றாற் களவு பற்றிய ஐயம் அன்னைக்கு உண்டாயிற்று எனவும், அதனால் இற்செறிப்பு நிகழும் எனவும், இனி வரைந்து கொண்டாலன்றித் தலைவியைப் பெறமுடியாதெனவும் உணர்த்துகின்றாள் தோழி. இவற்றைக் கேட்பானாகிய தலைவன் 'இனியும், வாய்மை தவறாது' வரைதலிலே முற்படும் திண்மையன் ஆவான்' என்பதாம்.
மேற்கோள் : செவிலி வினாவியமையைத் தோழி கொண்டு கூறினாள்' என இச்செய்யுளைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 115. உரை), இதனால் செவிலி வினவியதாகச் சொன்னது படைத்து மொழிதல் என்றறிக.