நற்றிணை 1/071
71. பிரிதல் வல்லீரோ?
- பாடியவர் : வண்ணப்புறக் கந்தரத்தனார்.
- திணை : பாலை.
- துறை : தலைவனைத் தோழி செலவழுங்குவித்தது.
[(து–வி.) தலைவனது பொருள்வயிற் பிரிவினை அறிவிக்க கேட்ட தோழி தலைவியது பிரிவாற்றா நிலையை உரைத்தவளாக அந்தச் செலவைத் தடுக்க முயலுகின்றாள்.]
மன்னாப் பொருட்பிணி முன்னி 'இன்னதை
வளைஅணி முன்கைநின் இகுளைக்கு உணர்த்து'எனப்
பன்மாண் இரத்திர் ஆயின், 'சென்ம்' என
விடுநள் ஆதலும் உரியள், விடினே
கண்ணும் நுதலும் நீவி முன்நின்று
5
பிரிதல் வல்லிரோ–ஐய! செல்வர்
வகைஅமர் நல்இல் அகஇறை உறையும்
வண்ணப் புறவின் செங்காற் சேவல்
வீழ்துணைப் பயிரும் கையறு முரல்குரல்
நும்இலள் புலம்பக் கேட்டொறும்
10
பொம்மல் ஓதி பெருவிதுப் புறவே?
ஐயனே! நிலையற்றதான பொருளினைத் தேடும் ஆசை நோயினை அடைந்தீர். அதனையே கருத்திற்கொண்டு 'இக்காரியத்தை வளையணிந்த முன்னங்கைகளை உடையாளான நின் தோழிக்கு உணர்த்துவாயாக' என்று, பலவாக மாட்சிப்பட இரந்தும் கூறுகின்றீர். செல்வர்களது வகையமைந்த நல்ல நுமது வீட்டின் உள்ளிறைப்பில் தங்கியிருந்து வாழும் வண்ணப் புறாக்கனின் செங்கால்களை உடைய சேவலானது தான் விரும்பிய பெண்புறாவைக் கூட்டத்திற்கு அழைத்திருக்கும் செயலறவு தோன்ற எழுகின்ற அந்தக் குரலொலியை, நும்மை அருகிலற்றாளாய்த் தனிமையுற்றிருக்கும் காலத்தே வருத்தத்துடன் கேட்ட பொலிவு பெற்ற கூந்தலை உடையாளான இவள் பெரிதும் ஆசையுற்று நலியுமாறு பிரிந்துபோதற்கு வல்லீரோ? 'நீர் போவதனை யான் உரைப்பின் 'செல்வீராக' என நும்மைப் போகவிடுதற்கான சுற்புடையாளாகும் பொறுப்பிற்கும் இவள் உரியவள் ஆவாள். எனினும், அவ்வேளை, இவள் முன்பாக நின்று, கலங்கிய இவள் கண்களையும் பசந்த நெற்றியையும் தடவிவிட்டு, அந்நிலையே இவளை நலியுமாறு விட்டுப்பிரிவதற்கு நீர் தாம் வன்மை உடையவரோ?
கருத்து : 'இவளைப் பிரியும் வன்கண்மை கொண்டீரோ?' என்பதாம்.
சொற்பொருள் : பிணி – நோய் ; மனத்தைப் பற்றிப் பிணித்திருத்தலால் 'பிணி' ஆயிற்று. வகையமை நல்லில் – பவ வகுப்புக்கள் அமைந்த நல்ல வீடும் ஆம்; வகுப்பு – கட்டு. கையறு முரல் குரல் – காமத்தால் செயலற்று அது தோன்ற ஒலிக்கும் குரல், பொம்மல் ஓதி – பொலிவு பெற்ற கூந்தலை யுடையாள். விதுப்பு – ஆசை நோய்.
விளக்கம் : 'அவள் சென்மென விடுநளாதலும் உரியள்; ஆயின், நீர் பிரிதல் வல்லீரோ?, எனக் கேட்கும் சொற்செறிவை அறிதல் வேண்டும். 'துயரைப் பொறுத்திருக்க அவள் துணிந்தாலும், அவள் துயருற்று நலிவதனை நீர்தாம் பொறுக்கலாற்றீர்' என, அவனது காதன்மை மிகுதியைப்போற்றிச் செலவழுங்குவிக்கின்றாள் தோழி. 'செல்வர் வகையமர் நல்லில் அகவிறை உறையும் வண்ணப்புறச்சேவல்' பொருளை நாடாது தன் துணையைக் கூட விரும்பியதாய் அழைக்கும். குரலைக் கேட்டதும், தலைவி தன்னருகே இல்லாத தலைவனின் செயலை நினைந்து வருத்தமுற்று நலிவாள்' என்பதாம். 'செல்வர் வகையமை இல்' என்றது, தலைவனது வளமனையைக் குறித்தது ஆம். 'புலம்புதரு குரல புரவுப் பெடை பயிரும்' (குறுந். 79) எனப் புறவுச்சேவல் பெடையை அழைப்பதனைப் பிறரும் குறிப்பிடுவர்.