நற்றிணை 1/076
76. மெல்லடி உய்தற்கு!
- பாடியவர் : அம்மூவனார்.
- திணை : பாலை.
- துறை : புணர்ந்து உடன் போகாநின்ற தலைவன், இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.
வருமழை கரந்த வால்நிற விசும்பின்
நுண்துளி மாறிய உலவை அம்காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ
வருந்தாது ஏகுமதி வால்இழைக் குறுமகள்!
5
இம்மென் பேர்அலர் நும்ஊர்ப் புன்னை
வீமலர் உதிர்ந்த தேன்நாறு புலவின்
கானல் வார்மணல் மரீஇக்
கல்லுறச் சிவந்தநின் மெல்அடி உயற்கே!
ஒள்ளிய கலன்களை அணிந்தானான இளைய மகளே! இம்மென்று எழுகின்ற பேரலர் தானும் பொருந்துதலையுடைய, நும் ஊரது புன்னையின் காம்பு கழன்ற மலர்கள் மிகுதியாக உதிர்ந்து கிடப்பதனாலே தேன் மணம் வீசுகின்ற, புலவினையுடைய கழிக்கரைச் சோலையிடத்தே, நெடிதான மணற்பாங்கிலே, நின்னடிகள் மெல்லென நடந்து பழகியன! இப்பொழுதோ, கற்களிற் பதிதலினாலே அவை வருத்தமுற்றவாய்ச் சிவப்புற்றன. அத்தகைய நின் மெல்லடிகள் உய்தலின் பொருட்டாக வருகின்ற மேகமும் பெய்யாது போகிய வெளிய நிறத்தையுடைய வானத்தினின்றும் நுண்ணிய மழைத்துளிகளும் இல்லாது போகிய, காற்றுச் சுழன்றடிக்கும் அழகான காட்டுவழி யிடத்தேயுள்ள ஆலமரத்து நிழவிடத்தே தங்கி, நீயும் இளைப்பாறிக்கொள்சு! அஞ்சத்தக்க வழியிடமேனும் அதற்கு அஞ்சாயாய் எவ்விடத்துத் தங்க நினைப்பினும் அவ்விடத்தே தங்கினையாய்ச், சிறிதும் வருத்தமுறாமற் படிக்குக் கவலையின்றிச் செல்வாயாக!
கருத்து : 'வழிநடை வருத்தத்தைப் போக்கினையாய், அஞ்சாதே என்னோடும் உடன் வருக' என்பதாம்.
சொற்பொருள் : வரும் மழை – வருகின்ற மேகம். வால் நிறம் –வெண்ணிறம். நுண்துளி – நுண்ணிய மழைத்துளி; பெருமழையின்றேனும் சிறுதூறல்தானும் இல்லாதே போகிய வெங்காடென்பது கருத்து. உலவை – ஒருவகை மரமும் ஆம். இம்மென் பேரவர் – இம்மென்று எழுந்த பேரவர். இந்த மெல்லிய பேரவரும் ஆம்; மென்பேரலராவது, பலரும் காதொடு காதாகத் தம்முட் கலந்து பேசுதலினாலே பரவிய பழிச்சொற்கள்.விளக்கம் : 'வரு மழை சரந்த வால்நிற விசும்பு' என்றது, அவ்விடத்தேயாக வரும் மேகத்தையும் கோடை வெம்மை நீர்வற்றச் செய்துவிட்டதாக, அதுவும் வெண்ணிறம் பெற்றதாய், அதனால் வானமும் வெண்ணீற வானமாயிற்று' என்பதாம். 'நுண் துளி மாறிய' என்பதும் இது. மேகத்தின் நுண்துளிகளும் தரைக்கண் வீழா முன்னரே இடைக்கண் ஒழிந்தன என்பதாம். 'அம் காடு' என்றது. அப்படிக் கொடிய வெம்மை கொண்டிருப்பினும், அவள் உடன் வருதவானே அழகிதாயிற்று என்பதாம். 'ஆல நீழல்' அப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரம் நிழல் தருதலைப் போல, அவளும் தனக்கு இனிமை தருகின்றாளாயினாள் என்பவன், 'ஆலநீழல் அசைவு நீக்கி' என்கின்றான். 'வாலிழைக் குறுமகள்' என்றது, அவளது செல்வச் செழுமையினையும், அவளது மென்மைத் தன்மையினையும் சுட்டிக் கூறியதாம். 'புன்னை வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலலின்' என்றது, 'புலவினை உணக்கலால் எழுகின்ற புலால் நாற்றத்தையும் அடங்கச் செய்தபடி புன்னைப் புதுமலரின் புதுமணம் பரவி நிற்கும் என்றதாம்'. அவ்வாறே, தலைவியது உடன்போக்கால் எழுந்த பழிச்சொற்கள்தானும் தலைவி தலைவனுடன் அவனூரிலே மணம் பெற்று வாழ்கின்றாள் என்னும் செய்தியான் அடங்கிவிடும் என்பதாம். 'கல்உறச்சிவந்த மெல்லடி' என்றது, அவளது நடை வருத்தத்தைக் கண்டு அதனை மாற்றக் கருதினனாகிய மனநெகிழ்வால் எழுந்ததாம். "அஞ்சுவழி அஞ்சாதே" என்றது, தன் ஆண்மையின் உறுதுணையாகும் திறனைக் காட்டிக் கூறியதாம்; அவளைக் காக்கும் கடனைத் தான் மேற்கொண்டதான உரிமையினைச் சுட்டிக் காட்டிக் கூறியதுமாம். புன்னை பூத்து மணம் பரப்பும் காலம், நெய்தற் பாங்கிடத்து இளமகளிர்க்கு மணம் நிகழ்த்தற்குரியதான காலம், என்பதனையும், அது குறித்துக் கூறியதனாலே அவர்களின் மணம் விரைவில் அவனூரிடத்தே நிகழும் என்பதனையும் அறிதல் வேண்டும்.