உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/089

விக்கிமூலம் இலிருந்து

89. வாடை வருமே!

பாடியவர் : இளம்புல்லூர்க் காவிதி.
திணை : முல்லை.
துறை : 'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

[(து–வி.) பொருனீட்டி வருதற் பொருட்டாகப் பிரிந்து சென்றானாகிய தலைவன் மீண்டு வந்தானாதலைக் கேட்ட தோழி, தலைவிபாற் சென்று மகிழ்வுடன் இவ்வாறு கூறுகின்றாள்.]

கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடுகந்து ஏறி
நிரைத்து நிறைகொண்ட கமஞ்சூல் மாமழை
அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடைநாள்
இரும்பனிப் பருவத்த மயிர்க்காய் உழுந்தின் 5
அகலிலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயாஉயிர்த் தாஅங்கு
இன்னும் வருமே தோழி! வாரா
வன்க ணாளரோடு இயைந்த 10
புன்கண் மாலையும் புலம்பும்முந் துறுத்தே!

தோழி! கீழ்க்காற்றானது செலுத்துகையினாலே விண்ணிடத்துச் செறிவுற்றெழுந்து, அலையிடத்துப் பிசிரைப்போலத் தோற்றும் வெண்மேகமாக மலைமுகடுகளில் விருப்பத்துடனே ஏறிச்சென்று, ஒழுங்குபட அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலினையுடைய கார்மேகமானது. பெருமழையைப் பெய்து நீங்கியதாகத் தோன்றுவது கார்ப்பருவத்தின் இறுதியாகும். அதனிடத்தே மிக்க முன்பனிப் பருவத்தில், மயிர்கள் அமைந்த காய்களைக் கொண்ட உழுந்தினது அகன்ற இலைகள் எல்லாம் அகன்று போகும்படி வீசியதாக, நீங்கிப்போதலைச் செய்யாமல் நின்று நாள்தோறும் நம்மை அன்பு செய்யாத வாடைக் காற்றானது வருத்துதலைச் செய்யும். அத்தகைய வாடையானது, பருமத்தைப் பூண்டிருக்கும் யானையானது நெடுமூச்சு எறிந்தாற்போல வீசியபடி இனியும் வருமோ? இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையினை உடையவரான தலைவரொடு, ஒருங்கே பொருந்திய துன்பத்தைக் கொண்டதான மாலைக்காலத்தையும் நின் வருத்தையும் முற்பட விட்டுக்கொண்டதாக, அதுதான் இனியும் நின்னிடத்திற்கு வருமோ? வாராதுகாண்' என்பதாம்.

கருத்து : 'தலைவரது வரவினாலே, இனி நின்னது துயரம் முற்றவும் நீங்கிப்போகும்' என்பதாம்.

சொற்பொருள் : கொண்டல் – கீழ்க்காற்று. முகடு – மலையுச்சி. நல்கா வாடை – அன்பு செய்யாத வாடைக் காற்று. பருமம் – யானைமேல் இடும் அம்பாரம், புலம்பு – வருத்தம். புன்கண்மை - துன்பஞ்செய்யும் தன்மை.

விளக்கம் : கார்ப்பருவத்தே மீள்வதாகக் கூறிச்சென்ற தலைவன், முன்பனிப் பருவத்தும் வாராதுபோகப் பெரிதும் வாடித் தளர்ந்திருந்தாள் தலைவி. அவ் வேளையிலே அவனும் வந்தானாக, அப்போது தோழி தலைவிபாற் சென்று, அவள் துயரனைத்தும் தீர்ந்ததென்னும் களிப்பினாலே இவ்வாறு கூறுகின்றாள். இனி, இதனைத் தலைவன் வருவதாகக் குறித்த பருவத்தின் இறுதிவரையினும் வாராதானாகப் பெரிதும் நலிவுற்றிருந்த தலைவி, ஆற்றுவிக்க முயன்றாளான தோழிக்குத் தன் ஆற்றாமை மிகுதியைப் புலப்படுத்தினளாகக் கூறியதெனவும் கொள்ளலாம்.

'உழுந்து முன்பனிப் பருவத்தில் முதிரும்' என்பதனை 'பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும், அரும்பனி அற்சிரம்' (குறுந். 68) எனவும், 'பற்றுவிடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப அற்சிரம் நின்றன்றாற் பொழுதே' எனவும் (அகம்.339) கூறுவர்.

பிறபாடம் : அழிபெயல் – வழிபெயல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/089&oldid=1731526" இலிருந்து மீள்விக்கப்பட்டது