நற்றிணை 1/110
110. சிறு மதுகை!
- பாடியவர் : போதனார்.
- திணை : பாலை.
- துறை : மனை மருட்சி; மகள்நிலை உரைத்தலும் ஆம்.
[(து.வி.) (1) மனை மருட்சியாவது, உடன்போகிய மகளது விளையாட்டுப் பருவம் மாறாத தன்மையை எண்ணி, 'அவள் எப்படித் தன் காதலனுடன் இல்லறமாற்றுவாளோ' எனத் தாய் இல்லிடத்திருந்தபடியே உளங் கலங்குவது. (2) மகள் நிலை உரைத்தது என்பது, தலைவியின் இல்லற மாற்றும் செவ்வியினை உவப்புடன் கண்டு உவந்த செவிலித்தாய், அதனை நற்றாயிடம் வந்து பாராட்டி உரைப்பது.]
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
'உண்' என்று ஓக்குபு பிழைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
5
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
10
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே!
தேனிட்டுக் கலந்த தூய சுவைகொண்ட இனிதான பாலைக் கதிரொளி பரக்கும் பொற்கிண்ணத்தே ஒரு கையில் ஏந்திக்கொண்டு, அடிக்குங்கால் மேனியிற் சுற்றிப் படியும் மெல்லிய நுனியுடைய சிறு கோலினை மற்றொரு கையிடத்தே எடுத்துக்கொண்டு, 'இதனை உண்க' 'என்று கோலினை ஓங்குதலும், அதனின்றும் தப்பிப்போதற்கு நினைவாள் அவள். தெளிவான நீர்மைகொண்ட முத்துக்களைப் பரவலாக இட்டிருக்கின்ற பொற்சிலம்பானது ஒலிமுழக்கஞ் செய்ய, அவள் தத்திதத்திப் பிடிபடாது ஓடுவாள். மென்மையும் நரையும் கொண்ட கூந்தலினரும், செவ்விதாக வயதும் அதுபவமும் முதிர்ச்சி பெற்றவருமான செவிலித் தாயரும் அவளைத் தொடர்ந்து சென்று பற்றிப் பாலூட்டுதற்கு இயலாதாராய் மெலிவுற்று, அத்த முயற்சியையே கைவிட்டுவிடுவர். முற்றத்துப்பந்தர்க்கீழ் இப்படி ஓடியோடிச் செவிலியருடைய ஏவலை மறுக்கும் சிறு விளையாட்டைச் செய்பவள் ஆயிற்றே! அவள்தான், இதுகாலை இல்லறமாற்றுதற்கு உரித்தான அறிவையும் ஒழுக்கத்தையும் எவ்விடத்தே உணர்ந்துகொண்டனளோ? தன்னை மணந்து கொண்ட கணவனது குடியானது வறுமை அடைந்ததென்று, தந்தை கொடுத்த கொழுவிய சோற்றினையும் நினையாளாயினளே! நீர் ஒழுகும் பாங்கிலே வளைந்து வளைந்து உருவாகிக்கிடக்கும் கருமணலைப் போலப், பொழுதிற்கு உண்பதையும் கைவிட்டுத் தன் கணவனது குடியின் நிலைக்கேற்றபடி ஒழுகுவாளாய்த், தானும் ஒரு பொழுதுணவைக் கைவிட்டு உண்டு வாழும் சிறிதான மதுகை கொண்டவளாகவும் விளங்குவாளாயினனே!
கருத்து : 'இத்துணை மதுகையுடன் கூடிவாழும் செவ்வியினை எங்குத்தான் அவள் கற்றோளோ?' என்பதாம்.
சொற்பொருள் : பிரசம் – தேன். வெண் சுவை - தூய்தான சுவை; விருப்பந்தரும் சுவையும் ஆம். புடைத்தல் - அடித்தல். பிழைப்ப – தப்பியோட தௌநீர் – தெளிந்த நீர்மை: குற்றம் அற்றதாய தன்மை. தத்துற்று – தத்திச் செல்லலை மேற்கொண்டு; தத்துதல் - துள்ளித் துள்ளி நடத்தல். பரி – பற்றுதல். நுணுக்கம் - வளைவாந்தன்மை; அது நீர்ப்போக்கிற்கு ஏற்ப மாறிமாறி அமையும் இயல்பு. மதுகை – மனத்தின் எக்களிப்பு.
விளக்கம் : 'உண்ணற்கு எளிதான தீம்பாலையும் மறுத்து அச்சுறுத்துதற்கும் அஞ்சிப் பணியாது மறுத்தோடும் சிறுபருவப் பண்பினள்' என்றது, அவளது விளையாட்டுப் பருவத்தை நினைந்து வருந்துவதாம். அவள், 'கொழுநனின் குடி வறனுற்றதெனத் தன் பரியையும் மறுத்துப் பொழுதிற்கு உண்ணலையும் நீக்கிவிடும் மதுகையளாயினளே' என, அவள் படும் துயரத்தை நினைந்து பெரிதும் ஏக்கமுற்றதுமாம். மகள் நிலை உரைத்தாகக் கொள்ளின், அதனை வியந்து பாராட்டியதாகக் கொள்க. 'அறிவு' நன்மை தீமைகளை ஆய்ந்து நடக்கும் ஆற்றல். ஒழுக்கம் – ஒழுகும் முறைமை.
பெண்கள் தம் கணவரது வருவாய்க்கு ஏற்ப வாழ்ந்து இல்லறம் பேணும் சிறந்த செவ்வியினராகத் திகழ்தலே பண்டைக்கால மரபு. அதனை இச் செய்யுளால் அறியலாம். தாய்வீட்டுப் பெருவாழ்வையும் மறந்து கணவன் வீட்டு நிலையோடு ஒன்றிக் கலந்துவிடும் உயரிய கற்புநெறியே போற்றத்தக்க தமிழ்நெறி ஆகும்.
மேற்கோள் : மனையறங் கண்டு மருண்டு உவந்து செவிலி கூறியதெனக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல். சூ -153 உரை). 'குடி வறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தது' என, மீண்டும் காட்டுவர் அவர் (தொல். சூ. 244 உரை.) வாயில்கள் தமக்குள் தலைவியது செவ்வியைக் கூறி மகிழும் கூற்றுக்கு மேற்கோள் காட்டுவர் இளம்பூரண அடிகள் (தொல். சூ. 151. உரை).
பிற பாடம் : 'ஓக்குபு புடைப்ப'