நற்றிணை 1/115
115. பேரன்பினர்!
- பாடியவர் : ......
- திணை : முல்லை.
- துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது.
[(து–வி.) பிரிதற்காலையிற் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தினது வரவைக் கண்டதும், தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அவளைத் தேற்றுவாளாகத் தலைவனின் பேரன்பை எடுத்துக் கூறுகின்றாள் தோழி.]
மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண்இனிது படீஇயர்
அன்னையும் சிறிதுதணிந்து உயிரினள்;இன்நீர்த்
தடங்கடல் வாயில் உண்டுசில் நீர் என
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
5
மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழக்
கார்எதிர்ந் தன்றால், காலை; காதலர்
தவச்சேய் நாட்டார் ஆயினும், மிகப்பேர்
அன்பினர் வாழி, தோழி! நன்புகழ்
உலப்பின்று பெறினும் தவிரலர்;
10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?
தோழீ! பொய்கையிடத்து மலர்ந்திருக்கும் பூக்களை நாளும் கொய்ததன் தளர்ச்சியால் சோர்வுற்ற ஆயமகளிர் அனைவரும் இனிதாகக் கண்ணுறங்குமாறு, அன்னையும் சிறிது சினந்தணிந்து உயிர்ப்பான் ஆயினள். இனிதான நீர்மையினைக் கொண்ட பரந்த கடலினது நீரை வாயினாலே உண்டு. அதுவும் சிறிதளவான நீரே என்னுமாறு பொழியும் கார்மேகங்களும் வானத்தே எழுந்தன. மயிற்பாதம் போன்ற இலைகளைக் கொண்ட கருங்கதிர்களையுடைய நொச்சிப் பூவானது, மனையது நடுமுற்றத்துள்ள முல்லையோடுஞ் சேர்ந்து தம்பால் முகிழ்த்திருந்த மொட்டுக்கள் இதழவிழ்ந்து மலருமாறு கார்காலமும் இந்நாள் காலையிலே எதிர்ப்பட்டுள்ளது. காதலர் மிகவும் தொலைவான நாட்டிடத்தே உள்ளாராயினும், நின்பால் மிகப்பெரிதும் அன்புடையவராவர். நல்ல புகழினைக் கெடுதலன்றிச் சென்றுள்ளவிடத்தே பெற்றனராயினும், நம்பாற் கூறிச் சென்ற உறுதிமொழியினைத் தவிர்பவர் அல்லர். அவரது வரவை அறிவிக்கும் வானத்து அருள் முழக்கத்தினை யானும் இன்று கேளா நின்றேன் அல்லனோ!
கருத்து : 'குறித்த காலத்து வருதலில் அவர் ஒரு போதும் பிழையார்' என்பதாம்.
சொற்பொருள் : குறுதல் – பறித்தல். கண்படுதல் – உறங்குதல். உயிரினள் – உயிர்ப்பாளாயினள். மாக்குரல் – கரிய பூங்கொத்து; இது கருநொச்சி. ஊழ்த்தல் – தோன்றுதல். தவச்சேய் நாட்டர் – மிகத் தொலைவான நாட்டிலுள்ளார். உலப்பின்றி – கெடுதலின்றி; உலப்பு – ஒழிபு.
இறைச்சி : முற்றத்து முல்லை வேலியிடத்து நொச்சியிற் படர்ந்து கிடக்கிறது; காரின் எதிர்வினால் நொச்சியும் முல்லையும் ஒருசேர மலர்ந்திருக்கும் காட்சியைக் கூறினர்; அவ்வாறே இல்லிடத்திலிருந்து வருந்தும் தலைவியும் தலைவனைத் தழுவி மகிழ்வள். இருவரும் மகிழ்ச்சியடைவர் என்றற்காம். இவர்களது இல்லற வாழ்வு மலர்ச்சி பெற்று விளங்கும் என்பதுமாம்.
விளக்கம் : முல்லையும் நொச்சியும் மலர்ந்திருப்பக் கண்டதனால், அன்னை, பொய்கையிடத்துச் சென்று பூக்கொய்து தளரும் ஆய்மகளிரை அதிகாலையில் எழுப்பிப்போதற்குத் துண்டாளாயினள்; அவர்கள் இனிதாகக் கண்ணுறங்குமாறும் விட்டிருந்தனள்' என்பதாம். 'மனைநடு மௌவல் – மனையிடத்தே நட்டுப்பேணும் முல்லை: பூக்க மணம் வாய்க்கும்' என்பது மரபு. 'விசும்பின் தகவாவது தலைவியையும் தலைவனையும் ஒன்று சேர்ப்பதற்குக் காரினைத் தோற்றுவித்தது.
'சேய் நாட்டாராயினும். மிகப் பேரன்பினராதலின் சொற்பிழையாராய்த் திரும்பி வந்து அருள்வர்' என்பதாம்.
ஒப்பு : முல்லை மலர்த்து கார்காலத்தைத் தெரிவிக்கும் என்பது குறுந்தொகை 3: 8.126 முதலாய செய்யுட்களானும், 'ஆர்கலியேற்றொடு கார்தலை மணந்த, கொல்லைப் புதைத்த முல்லை மென்கொடி எயிறென முகைக்கும்' (குறு. 186) என்பதனாலும் அறியப்படும்.