உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/120

விக்கிமூலம் இலிருந்து

120. முறுவல் காண்கம்!

பாடியவர் : மாங்குடி கிழார்.
திணை : மருதம்.
துறை : விருந்து வாயிலாகப் புக்க தலைவன் சொல்லியது.

[(து–வி.) பரத்தை உறவிலே நாட்டமுற்றுப் பிரிந்து சென்ற தலைவனிடத்தே தலைவி பெரிதும் ஊடல் கொண்டிருந்தனள். ஒருநாள் வீட்டிற்கு விருந்தி வரக்கண்ட தலைவன், தானும் அவர்களோடு கலந்து கொண்டான். விருந்தினர் நடுவே அவனை வெறுத்து நோக்க விரும்பாத அவளும், ஏதும் கூறாளாய் விருந்து சமைப்பதிலேயே ஈடுபட்டுவிட்டனள். அவளது அந்த அமைதியை வியந்து தலைவன் தன் நெஞ்சோடு கூறிக்கொள்வதுபோல அமைந்தது இது]

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை

சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் 5
புகையுண்டு அமர்த்த கண்ணள், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை!
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பு ஆன்று, 10
சிறுமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே!

வளைந்த கொம்பினையுடைய எருமைகளின் இளநடையினையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காணத்தகுந்த சிறப்பினையுடையது எமது நல்ல மனையாகும், இவ்விடத்தே, வளைந்த குண்டலங்களைக் காதுகளிலே இட்டிருப்பாளான, செழுமைகொண்ட செவ்விய பேதைமையினையும் உடையாளான எம் காதலியானவள், சிறிதான மோதிரம் செறிந்த தன் மெல்விரல்கள் சிவக்கும்படியாக வாழையினது நீர்மைகொண்ட இலையினை மிகவும் சிரமப்பட்டுக் கொய்து வகிர்ந்து கொணர்ந்து பரிகலம் இட்டனள். அட்டிலாக்கியபோது புகைபடிந்ததனாலே அமர்த்த கண்களை உடையாளான அவள், தகைமைபெறத் தன் பிறைபோன்ற நெற்றியிடத்தே துளிர்த்திருந்த சிறிய நுண்மைகொண்ட பலவான வியர்வுத் துளிகளைத், தன் அழகிய துகிலின் நுனியிலே துடைத்துக் கொண்டாளாக, நம்மீது புலவிகொண்டு, அட்டிற் சாலையிடத்தாளாகவும் ஆயினள். இது காலை விருந்தாய் வந்தாரும் எம்முடன் இல்லிடத்தே வருவாராக வந்தனராயின் அழகிய மாமை நிறத்திறத்தினையுடைய அரிவையாளான அவளின் கண்சிவப்பு மறைந்துவிடும். சிறு முட்களைப் போன்ற பற்கள் வெளிப்பட்டுத் தோன்ற இளமுறுவலைக் கொண்ட முகத்தினளும் ஆகிவிடுவாள். கை கொண்ட அம்முகத்தினை நாமும் காண்போமாக.

கருத்து : 'தலைவியது ஊடற்சினத்தை விருந்தினர் வந்ததால் இன்றேனும் மாறக் காண்போம்' என்பதாம்!

சொற்பொருள் : தடமருப்பு – வளைந்த கொம்பு: பெரிய கொம்பும் ஆம். மடநடை – இளநடை; தளர்ந்த நடை செய் – செய்ய: செவ்விதாம் பண்பு கொண்ட. சிறுதாழ் – சிறிய மோதிரம். வாழை ஈர்ந்தடி – வாளையிலிருந்து கிள்ளிக் கொண்ட இலை. வகைஇ - வகுந்து. துகில்தலை – துகிலின் முனை; முந்தானை.

விளக்கம் : விருந்தினரோடு புகுந்த தலைவன், அட்டிற் சாலையிடத்தினின்றும் விருந்தினரை வரவேற்க வந்து திரும்பிய தலைவியைப் பின் தொடர்கிறான். அவனைப் புலந்தாளாகப் புகைபடிந்து சிவந்த கண்களை முந்தானையால் துடைத்தபடியே, அவன் அட்டிலறையுட் புகுந்து கொள்கின்றனள். அப்போது தலைவன் இப்படிக் கூறிக்கொள்கின்றான். தலைவனோடு புலப்பினும் விருந்து பேணுதலாகிய தன் கடமையில் திண்மையுடையளாதலின், அவர் முன்பாக இளமுறுவலுடன் தலைவனை நோக்கினாள் என்க. 'வாளை ஈர்ந்தடி' எனக் கொண்டு, வாளை மீனை அறுத்துத் துண்டுபடுத்தினள் எனவும் கொள்க.

மேற்கோள்: விருந்தோடு புக்கோன் கூற்றுக்கு மேற்கோளாக அகத்திணையியல் 24 ஆம் சூத்திர உரைக்கண் இச் செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/120&oldid=1731680" இலிருந்து மீள்விக்கப்பட்டது