நற்றிணை 1/138
138. கண்ணறிவு!
- பாடியவர் : அம்மூவனார்.
- திணை : நெய்தல்.
- துறை : அலராயிற்றென ஆற்றாளாய தலைமகளுக்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
[(து–வி.) "பிரிவாலே மேனியிடத்துத் தோன்றிய மாற்றங்களைக் கண்ட பிறர் பழித்துப் பேசத் தொடங்குவர் என ஐயுறுகின்றாள் தலைமகள் அவளது அத்துயரம் நீங்குமாறு வரைந்துவருதலை வற்புறுத்துவாளாகச் சிறைப்புறமிருக்கும் தலைமகன் கேட்குமாறு. தோழி இப்படிச் சொல்லுகின்றாள்]
உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண்அழி பழம்பார் வெண்குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன்நாள் நம்மொடு
5
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇக்
கண்அறி வுடைமை அல்லது நுண்வினை
இழைஅணி அல்குல் விழவுஆடு மகளிர்
முழங்குதிரை இன்சீர் தூங்கும்
10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.
ஓரிடத்தே தங்கியிருந்தபடி வாழ்கின்ற நிலையான வாழ்க்கை முறையினை இல்லாதவர்கள், உவர்நிலத்து விளையும் குன்றங்களைப்போன்ற உப்புக்குவியல்களை மலை நாட்டகத்துக் கொண்டு சென்று விலைமாறிப் பொருளீட்டி வாழும், கூட்டங் கொண்ட உப்பு வாணிகர்கள். அவர்கள், தங்கள் வண்டிகள் முறிந்துபோன இடத்திலே. அதனைப்போட்டுப் போயினதனாலே தன் பண்பழிந்தவாய்ப் போயின பழைதான பாரினிடத்தே, வெளிய நரையானது கூடுகட்டித் தன் சினையை ஈன்றிருக்கும். அத்தகைய தண்ணிய கடற்றுறையினைச் சார்ந்தவன் தலைமகன். அவன், முன்னை நாளிலே, பசிய இலைகளின் இடைநின்றும் மேலெழுந்து வெளித்தோன்றிய திரண்ட தண்டினையுடைய நெய்தல் மலருடனே, நெறிப்பைத் தருகின்ற தழைகளையும் இடையிட்டுத் தொடுத்த மாலையினை நினக்குச்சூட்டினன். அதனைக் கண்ணாற் கண்டறிந்த அறிவுடைமை ஒன்றையன்றி, நுண்மையான வேலைப்பாட்டினாலே சிறந்த அணிகலனை அணிந்த அல்குல் தடத்தையுடையரான, விழாக்களத்துத் துணங்கைத் கூத்தினை ஆடுகின்றவரான இளமகளிரினுடைய, இனிதான தாள அறுதியுடனே முழங்கும் திரையொலியும் சேர்ந்துபரவிநிற்கும் ஆரவாரத்தையுடைய இவ்வூர் மகளிர், பிறிதொன்றனையும் கண்டு அறிந்தவர் அல்லர்காண்!
கருத்து : அங்ஙனமாகவும் தான் வருத்தமுறுவதுதான் எதற்காகவோ?' என்பதாம்.
சொற்பொருள் : குன்றுபோல் குப்பை – குன்றைப்போலத் தோற்றும் உப்புக் குவியல்கள். உயங்குவயின் ஒழித்த - வண்டி முறிந்தவிடத்துப் போட்டுப் போயின; பசி வருத்திய விடத்து உணவாக்கி உண்டுவிட்டுக் கழித்துப்போயின அடுப்பும் பிறவும் எனலும் ஆம். பண் – பண்பு; அது அழிதல், மாறித் தோன்றுதல். குருகு ஈனுதல் – குருகு முட்டையிட்டிருத்தல். பாசடை – பசிய இலை. நெறிதருதல் – நெறிப்பைத் தருதல். நெறிப்பு – சுருளுதல். தொடலை – தழை மாலை. கண் அறிவு – காட்சியறிவு. விழவு – துணங்கை; கடற்றெய்வத்தைப் பராவும் வும் விழவும் ஆம்.
உள்ளுறை : உமணர் ஒழித்த பழம்பாரிலே குருகு சினை ஈனும் என்பதுபோலத் தலைவனால் நலனுண்டு கழிக்கப்பட்டு அழகிழந்த தலைவியின் மேனியிலே பசலை நோய் பற்றிப் படரும் என்பதாம்.
இறைச்சி : 'தாளவறுதி அலையோசையோடு சேர்ந்து பரவும் ஆரவாரத்தையுடைய ஊர்' என்றது, அவ்வாறே பழிச்சொற்களும் எழுந்து பரவுதல் உற்றது என்பதாம்.
விளக்கம் : இதனைக் கேட்டலுறும் தலைவன், தொடலை கண்டு பழித்த அலகுரைக்கே பெரிதும் வருந்தும் இவள், களவுக்கூட்டத்தைப் பற்றி ஊர் பழிக்கத் தொடங்கிற்றாயின் செத்தொழிவாளோ எனக் கலங்குவான். அதனால் விரைவிலே அவளை ஊரறிய மணந்து பெறுகின்ற இன்பத்திலே கருத்தினனாவான் என்பதாம். நலனழிந்த தலைவியது எழிலுக்குப் 'பண்ணழி பழம்பார்' சிறந்த உவமையாகும்.