உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/144

விக்கிமூலம் இலிருந்து

144. பேதை நெஞ்சம்!

பாடியவர் : கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆற்றது ஏதத்திற்குக் கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.

[(து–வி.) மழைநாள் இரவிலும் இரவுக்குறி வேட்டு வருதலை உடையானாகிய காதலனின் செயலை நினைந்து பெரிதும் கவலைகொண்டாள் தலைவி. அவன் குறியிடத்துச் சிறைப்புறமாக நிற்பதறிந்தவள், தன் தோழியிடம் கூறுவாள் போல இப்படிக் கூறுகின்றாள்]

பெருங்களிறு உழுவை தாக்கலின், இரும்பிடிக்
கருவிமா மழையின் அரவம் அஞ்சுபு,
போதுஏர் உண்கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்குஆ கின்றால் தோழி! பகுவாய்ப் 5
பிணவுப்புலி வழங்கும் அணங்களுங் கவலை
அவிர் அறல் ஒழுகும் விரைசெலல் கான்யாற்றுக்
கரையருங் குட்டம் தமியர் நீந்தி
விரவுமலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியா தேற்கே. 10

தோழி! அச்சத்தை மிகக்கொண்ட கடத்தற்கரிய வழியிடையே பிளந்த வாயினைக்கொண்ட பெண்புலி இரை தேடியதாய் உலவியபடியிருக்கும். அவ்விடத்தே, விளங்கிய விரைந்த செலவையுடையதும் கரைகாணற்கு அரிதாமாறு பெருவெள்ளத்தை உடையதுமாகிய காட்டாறும் சென்றபடியிருக்கும். அதனைத் தமியராக நீந்திக் கடந்த, வெள்ளத்து வந்த கலப்பான மலர்கள் படிந்த தோளினராய், நம் காதலரும் இந்த இரவில் வருபவராவார். அப்படி அவர் வருவார் என்பதனை ஆய்ந்தறியாத பேதைமை உடையவளாயினேன் யான். புலியானது பெருங்களிற்றைத் தாக்குதலினாலே கலங்கிய அதன் கரிய பிடியானது தொகுதி கொண்ட கார்மேகத்தைப்போல முழக்கமிட்டுக் கதறுகின்ற ஒலியைக் கேட்டு அஞ்சினேன், நீலமலர் போன்று மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீரைச் சொரியவும், ஆதரவற்ற பேதை நெஞ்சும் கவலையால் பேதுறவுமாக யான நடுங்கியிருப்பேன். 'இரவின் வாராதே கொள்' என அவர்க்குக் கூறாத என் அறியாமையினாலேதான் என் நிலைமை இங்கு இவ்வாறாயிற்று!

கருத்து : 'அவர் வரும் வழியை நினைந்து அதன் கொடுமைக்கு நடுங்கிக் கலங்குவேன்' என்பதாம்.

சொற்பொருள் : கருவி மா மழை – தொகுதி கொண்ட கார்மேகம். அரவம் – மழையது இடியொலி. போது – நீலப்போது. கவிழ்தல் – கலங்குதல். கவலை கவற்ற - கவலையாற் சுழற்சி கொள்ள. பிணவுப் புலி – பெட்டைப்புலி, பகுவாய் – பிளந்த வாய், பசிக்கு உணவுதேடித் திரியும் கொடுமையைச் சுட்டியது. குட்டம் – ஆழம். அறல் – நீர் ; புது வெள்ளமாதலின் அறல்பட்ட மணலது தோற்றத்தை உடைத்தாயிருந்தது.

விளக்கம் : 'விரவு மலர் பொறித்த தோளர்' என்றது, அவன் மார்பிடத்து விளங்கிய பன்மலர்களானே, அவன் காட்டாற்றையும் நீந்திக் கடந்தவந்த துணிவுச் செயலை அறிந்து, அதற்குக் குறிநேர்தலே காரணமாயினதனால் அதற்கிசைந்த தன் பேதைமைக்கு வருந்தித் தலைவி கூறுவதாகும்! காட்டிய கண் கலுழ்தல் இயல்பேனும், யாதுமறியாத நெஞ்சத்தும் கவலை சூழ்கின்றதுதான் எதனாலோ? எனச் சோர்கின்றாள், இரவுக்குறி வருதலின் ஏதமிகுதியை உணராதிருந்த 'அவளுக்குக்' களிற்றைப் புலி தாக்கக்கண்டு நடுங்கிப் பெருங்குரலெடுத்துப் பிளிறிய பிடியின் குரலும், காட்டாற்றை நீந்திவந்த தலைவனின் துணிவுச் செயலும் அச்சத்தை எழுப்பின என்று கொள்க. இதுபற்றியே, 'அறியாதேற்கே' என்கின்றனள்.

உள்ளுறை : 'புவியால் தாக்கப்படும் களிற்றது நிலைக்கு நடுங்கிப் பெருங்குரல் எடுத்துப் புலம்பும் பிடி' என்றது, இவ்வாறே தலைவனுக்கு வழியிடையே ஓர் இடையூறாயின் தானும் கலங்கிப் புலம்பும் தன்மையினள் என்று உணர்த்துதற்காம். 'இதனால், தலைவன் இரவுக்குறி வருதலைக் கைவிட்டானாகித் தலைவியை வரைந்து கொள்ளுதலிலே மனஞ் செலுத்துவானாவன்' என்பதாம்.

ஒப்பு : 'இரவுக்குறி வரின் ஊனும் அஞ்சுவல்' எனும் குறுந்தொகைச் செய்யுளடியும் (குறுந்: 216,22) இவ்வாறு தலைவியர் அஞ்சுதலை உணர்த்தும். புலியும் களிறும் தம்முள் எதிருற்ற ஞான்று பொருதும் இயல்பின. களிறு புலியைத் தாக்குதல் 'சிறுகட் பெருங் களிறு வயப்புலிதாக்கி' (குறு 88.2) என்பதனால் அறியப்படும். புலி களிற்றை அடப் பிடிபுலம்பும் என்பது, 'குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை, பூநுதல் இரும்பிடர் புலம்பத் தாக்கித், தாழ்நீர் நனத்தலைப் பெருங்களிறு அடுஉம்' எனவரும் சீத்தலை சாத்தனாரின் வாக்காலும் அறியப்படும் (நற்:361–3).

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/144&oldid=1731740" இலிருந்து மீள்விக்கப்பட்டது