உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/147

விக்கிமூலம் இலிருந்து

147. எவ்வண்ணம் உய்வேம்?

பாடியவர் : கொள்ளம் பக்கனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) தலைவன் தலைவியை ஊரறிய மணந்து கொள்ளுதலைத் தூண்டுதற்கு நினைந்த தோழி இவ்வாறு தலைவிக்குக் கூறுவாள்போல அவனும் கேட்டு உணருமாறு கூறுகின்றனள்.]

யாங்குஆ குவமோ அணிநுதற் குறுமகள்!
'தேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவரநீ மற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்?' எனக் கூறி,
அன்னை ஆனாள் கழற முன்னின்று 5
'அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து
சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல் அந்தோ! வாய்த்தனை? அதுகேட்டுத் 10
தலைஇறைஞ் சினளே அன்னை;
செலவுஒழிந் தனையால், அளியை நீ, புனத்தே?

அழகான நெற்றியைக் கொண்ட இளமகளே! 'தேன் மணம் பரவுகின்ற மலைச்சாரலிடத்தே பொருந்திய சிறுதினைப் பயிரிடத்துப் பெருங்கதிரினைச், சிவந்த வாயினவான பசிய கிளிகள் கவர்ந்து போகவும். நீதான் மற்று அங்கே எவ்விடத்துக்குச் சென்றனையோ?' என்று, மனம் அமையாளாகிய அன்னை கேட்டனள், கேட்டலும், நீதான் அவள் முன்னர் நின்றபடி 'மூங்கிலாற்செய்த கிளிகடி தட்டையையுடைய யான், மலர்ந்த பூக்களைக் கொய்ததும், சுனைபாய்ந்து ஆடியதும் செய்தவள் அல்லேன்' என்றனை. 'அருவிகள் ஆரவாரிக்கும் பெருமலைநாட்டைச் சார்ந்தவனாகிய தலைவனை யான் பிறராற் கூறக் கேட்டவளும் இல்லேன்: கண்ணாற் காணக் கண்டவளும் இல்லேன்' எனவும் கூறினை. சற்றும் நினைவோட்டம் இல்லாதாய்! யாதும் பொய்புகலாது உண்மையை உரைத்தனையே! நீ உரைத்த அதனைக்கேட்டதும் அன்னையும் தன் தலையைக் கவிழ்ந்து கொண்டனளே! நீயும் புனத்திற்குச் செல்லும் செல்வினைப் போக்கிக் கொண்டனையே! நீ இரங்கத்தக்கவளாயினை! இனிமேல் நாம் எவ்வண்ணம் ஆவேமோ?

கருத்து : இனி மணந்தாலன்றித் தலைவனை அடைதற்கு வழியில்லை' என்பதாம்.

சொற்பொருள் : அணிநுதல் – அழகிய நுதல்; நெற்றிச் சுட்டிபோலும் அணிகள் திகழும் நுதலுமாம். தேம்படு சாரல் – தேன்மணம் பரந்திருக்கும் சாரல்; தேன் துளிகள் சொரிந்தபடி விளங்கும் சாரலும் ஆம். வெதிர் – மூங்கில். மலர்பூ – மலர்ந்திருக்கும் பூக்கள். வாய்த்தனை – வாய்மையே கூறினை. அளியை – இரங்குதற்கு உரியாய்.

விளக்கம் : தலைவனையே நினைவிற் கொண்டிருந்த தலைவியின் தன்மையினாலே, தாய் கிளிகளாற் கவரப்பட்டுக் கதிரிழந்து விட்ட தினைப்பயிருட் சில கண்டு வினவலும், தலைவி 'பெருவரை நாடனை அறியலும் அறியேன்; காண்டலும் இலனே' என வாய்சோர்ந்தாளாக உரைத்துத் தன் களவுறவைத் தானே காட்டிக் கொடுத்தனள் என்க. தாய் தலை இறைஞ்சினது, தன் குடிப்பெருமையின் சிறப்புக்குப் பழிவந்து எய்தியதென நினைத்ததனால் ஆம். களவுறவைத் தாய் அறிந்தமை இதனால் தலைவனுக்குப் புலப்படுத்தினளாம். 'செலவொழிந்தனை' என அடுத்து நேரும் இற்செறிப்பையுங் கூறினள். இதனால், தலைவியைக் குறியிடத்தே பெற்றுக் கூடுதல் இனி வாயாதென உணரும் தலைவன், அவளை முறையாக மணந்து கொள்ளுதலிலேயே கருத்தைச் செலுத்துபவனாவான் என்றறிதல் வேண்டும். தினைக் குரலைக் கிளி கவராமைப் பொருட்டுக் காவல் பூண்டவள், தானே களவிலே இன்பத்தை நாடிச் சென்றவளாயதும், அதனையுணர்ந்த தாயின் வருத்தமிகுதியும் இச் செய்யுளால் விளங்கும்.

மேற்கோள் : ஆசிரியர் இளம்பூரணனார், 'களவு அறிவுறினும்' என்னும் துறைக்கு மேற்கோளாகத் தலைவி கூற்றாகக் கொள்வர். அப்போது, தோழியால் களவு வெளிப்பட்டமை கூறித் தலைவி சொல்வதாகக் கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/147&oldid=1731746" இலிருந்து மீள்விக்கப்பட்டது