உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/150

விக்கிமூலம் இலிருந்து

150. தாயின் சினம்!

பாடியவர் : கடுவன் இளமள்ளனார்.
திணை : மருதம்.
துறை : தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது...
[(து–வி.) தலைமகன் ஒரு பரத்தையோடு உறவு வைத்திருந்தான். சில காலம் சென்றதும், அவளை மறந்து மற்றொருத்திப்பாற் சென்றான். இதனால். முதற்பரத்தை சினங் கொள்ளலானாள். அதனைத் தணிவிக்கக் கருதிய தலைவன், பாணனை அவள்பாற் செல்லுமாறு பணிக்கின்றான். சென்ற பாணனிடம், அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நகைநன்கு உடையன் பாண! நும் பெருமகன்
'மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி
அரண்பல கடந்த முரண்கொள் தானை.
வழுதி வாழிய பலஎனத் தொழுது ஈண்டு
மன் எயிலுடையோர் போல, அஃதுயாம் 5
என்னதும் பரியலோ இலம்எனத் தண்நடைக்
கலிமா கடைஇ வந்துஎம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்சக்
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
கதம்பெரிது உடையள்யாய் அழுங்கலோ இலளே. 10

பாணனே! நம் பெருமகனாவான் இதுகாலைப் பிறரால் நகையாடப்படுதலைப் பெரிதும் உடையானாயினான். "காவல் அரண்களது வலிமை சிதைந்துபோமாறு பல போர்க் களிறுகளை நாற்புறமும் பரப்பி வைத்துப், பகைவரது அரண்கள் பலவற்றையும் வென்று கைக்கொண்டவன், வலிமிகுந்த சேனைகளை உடையோனான பாண்டியன். 'இன்னும் பலகாலம் வாழ்வானாக' என்று தொழுது நின்று, அடையப் பெற்ற நிலையான அரண்களை உடையராயிருக்கும் சிலரைப் போல, அதன்பொருட்டு யாம் எவ்வளவேனும் வருந்துதல் இலராவோம்' என்று கூறித், தண்ணிய நடைகொண்ட கனைக்கும் குதிரையைச் செலுத்தியவனாக வந்து, எம் சேரியிடத்தே தன்னுடைய தாரினையும் தலைக் கண்ணியையும் எமக்குக் காட்டி, ஒருமைப் பாட்டைக் கொண்டதான என் நெஞ்சத்தையும் அப்போதே கவர்ந்து கொண்டான். அந்தத் தொடர்பானது என்றைக்கும் இனி என்னை விட்டுப் போகுமோ? ஆனால், யாவரும் அஞ்சுமாறு, கணுக்களையுடைய சிறு மூங்கிற்கோலைத் தன் கையிற் பற்றிக்கொண்டவளாக நிற்கும் அன்னையோ, பெரிதும் சினமுடையாளாய் உள்ளனள்; சிறிதேனும் என் நிலைக்கு வருத்தம் கொள்ளுதலும் இல்லாதாளாய் உள்ளனள்!

கருத்து : 'அவரோடு எனக்குள்ள உறவு வீட்டுப் போகாது எனினும், இதுகாலை அன்னையின் சினம் பெரிதாயிருக்கின்றது' என்பதாம்.

சொற்பொருள் : மிளை – காவலரண்; காவற்காடும் ஆம்; யானைகளாற் காவற் காட்டை அழித்துப் பின் அரணைக் கைப்பற்றினதாகக் கொள்ளலும் பொருந்தும். 'களிறு பல பரப்பி' என்பதும் இதனை வலியுறுத்தும். முரண்கொள் தானை – மாறுபாடு கொள்ளும் தானையும் ஆம்; மாறுபாடாவது பகைவரை அழிகின்ற உறுதிப்பாடு. ஒருமைய நெஞ்சம் – ஒன்று கலந்துவிட்ட நெஞ்சம்.

விளக்கம் : தலைவன் வழுதிக்குத் திறை செலுத்திவாழும் குறுநிலத் தலைவனாதலை, 'மிளை வலி...... பரியலோ இலம்' என்பதனாற் காணலாம். 'தண்டைக் கலிமா கடைஇ வந்து' என்றது, பரத்தையர் சேரியுள் தன்மனம் கவர்வாள் ஒருத்தியைத் தேடியபடி குதிரையை மெல்லச் செலுத்தி வந்தான்' என்பதனால். 'ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ' என்றது, தான் பொருளாசையாலன்றி, மெய்யாகவே அவன்பாற் கலந்த நெஞ்சினளாதலைக் கூறி, அதனால் தன் தொடர்பு விட்டுப் போகாத உறுதியுடைத்து என்பதற்காம். 'தாரும் கண்ணியும் காட்டி' என்றது, 'அவள் அவனுக்கே உரியள்' என்பதனைத் தாரணிவித்தும் கண்ணி சூட்டியும் உறுதிப்படுத்தியதை. ஆயின், 'அன்னை வருந்திலள்' என்றது, தான் பிரிவுக்கு வருந்தி வரவை எதிர்நோக்கினும், தன் தாய் அவனை உள்ளே வரவொட்டாளாய்ச் சினத்தோடு வாயிலிடத்தே அவனை எதிர்நோக்கி இருப்பதைக் கூறியதாம். சிறுகோல் பற்றி இருக்கும் யாய் அவன் வரின் அவனை அடித்தலும் கூடும்; நின்னைக் காணின் புடைத்தலும் கூடும்; ஆகவே அவன் வருநல் வேண்டா: நீயும் உடனே இவ்விடத்திலிருந்தும் அகன்றுபோக' என்றும் உரைக்கின்றனள்.

உள்ளுறை : 'களிறு பல பரப்பி, மிளைவலி சிதைத்து, அரண் பல கடந்த வழுதி' என்றது, அவ்வாறே பொருள் பல கொணர்ந்தளித்து அன்னையின் காவலைப் போக்கி, என்னையும் இனி அவர் அடைதற்கு உரியரென நுட்பமாகப் புலப்படுத்தற்காம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/150&oldid=1731752" இலிருந்து மீள்விக்கப்பட்டது