உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/152

விக்கிமூலம் இலிருந்து

152. யானே அளியேன்!

பாடியவர் : ஆலம்பேரி சாத்தனார்.
திணை : நெய்தல்,
துறை : மடல் வலித்த தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழி கேட்பச் சொல்லியது.

[(து–வி) தோழிபாற் குரையிரந்து நின்றான் தலைவன். அவள் உதவ மறுத்தனள். அதனால் நெஞ்சழிந்த அவன், அவள் கேட்குமாறு, தான் தன் நெஞ்சுக்குக் கூறுவானே போலத் தன் முடிபை இப்படிக் கூறுகின்றான்.]

மடலே காமம் தந்தது; அலரே
மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே
இலங்குகதிர் மழுங்கி, எல்விசும்பு படரப்
புலம்பு தந்தன்றே புகன்றுசெய் மண்டிலம்;
எல்லாம் தந்ததன் தலையும் பையென 5
வடந்தை துவலை தூவக் குடம்பைப்
பெடைபுணர் அன்றில் உயங்குகுரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று;
யாங்குஆ குவென்கொல் அளியென் யானே?

யான் தலைவிபாற்கொண்ட காமமானது இங்ஙனம் மடலேறி மன்றுபடும் இழிவினையும் எனக்குத் தந்துவிட்டது. ஊரவர் எடுத்துத் தூற்றும் பழிச்சொற்களோ, பன்மலர் இட்டுக் கட்டிய எருக்கம்பூவினது மாலையினையும் தந்துவிட்டது. அனைத்துயிரும் விரும்பி வரவேற்றுத் தொழில் செய்திருந்ததற்குக் காரணமான ஞாயிற்று மண்டிலமோ விளங்கிய கதிர்கள் மழுக்கமுற்றதாய் மேற்றிசை வானத்தையும் சென்றடைந்தது. இவை எல்லாம் எனக்குத் துன்பத்தைத் தந்தன. அதன்மேலும், மெல்லென வாடைக்காற்றும் மழைத் துளிகளைத் தூவத் தொடங்குகின்றது. கூட்டிடத்துப் பெடையைப் பிரியாது கூடியிருக்கும் அன்றிற் பறவைகளும், வாடைக்கு ஆற்றாவாய் வருந்தும் குரலொடு தமக்குள் அளவளாவியபடி இருக்கின்றன. இத்தகைய இராப்பொழுதும் என் செயலனைத்தும் ஒடுங்கும்படியான கையறவைத் தந்தது. இனி, யானும் எவ்வண்ணம் உயிர் வாழ்வேனோ? யான் இனி இரங்குதற்கே உரியனாவேன்!

கருத்து : 'என் சாவிற்குக் காரணமாயினாள் இவளே என்னும் பழி இவளைச் சூழும்' என்பதாம்.

சொற்பொருள் : மிடைபூ – இடையிட்ட பல பூக்கள்; ஆவிரை, பூளை உழிஞை என்பன. எல் – கதிரவன். விசும்பு - இங்கே மேற்றிசை வானம். புலம்பு – தனிமைத் துயரம். புகற்சி – விருப்பம். வடந்தை – வாடைக் காற்று. துவலை – துளிகள். கையறவு - செயலறுந் தன்மை

விளக்கம் : 'காம நோயானது வயிரமுற்றதனால், மடலேறியாயினும் அவளைக் கொள்வேன்' எனத் துணிந்தான் அவன். நலிவாரைக் காத்துப் பேணுகின்ற மரபினை உடையாரான பெருங்குடியினைச் சேர்ந்தவளாயிருந்தும், அவள்தான் தன்னை நலியச் செய்தல் பெரிதும் பழிக்கத் தகுந்ததென்பதையும் உணர்த்துகின்றான். மாலையில் வந்தடையும் தனிமைத் துயரோடு, வாடையின் தூவலும் அதற்காற்றாவாய்ப் புலம்பும் அன்றில்களது கூக்குரலும் சேர, அவன் துயரம் பெரிதும் பெருகுவதாகும் என்று கொள்க. அன்றில் இரவிடத்து நரலுதலைக் குறுந்தொகை, 160, 177, அகநானூறு 50 ஆகிய செய்யுட்களாலும் அறியலாம்.'கூடியிருப்பாரையும் வருத்தும் வாடையானது, கூடப்பெறாதிருக்கும் நலிவுடையாரைப் பெரிதும் மனந்தளரச் செய்தல் உறுதி' என்பதுமாம்.

பிற பாடம் : 'அன்றில் இயங்கு குரல் அளைஇ'

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/152&oldid=1731757" இலிருந்து மீள்விக்கப்பட்டது