நற்றிணை 1/154
154. நிலம் பரந்த நெஞ்சம்!
- பாடியவர் : நல்லாவூர் கிழார்.
- திணை : குறிஞ்சி
- துறை : இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக வரைவு கடாயது.
[(து–வி.) இரவுக் குறியை நாடிவந்த தலைவன், செவ்வி நோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான். தலைவியை வரைந்துகொள்ளுதற்கு விரைதலை வற்புறுத்த நினைத்த தோழி, இவ்வாறு தலைவியிடம் கூறுவாள் போலக் கூறுகின்றாள்.]
கானமும் கம்மென் றன்றே; வானமும்
வரைகிழிப் பன்ன மையிருள் பரப்பிப்
பல்குரல் எழிலி பாடுஓ வாதே;
மஞ்சுதவழ் இறும்பில் களிறுவலம் படுத்த
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை
5
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதி யோஇல தூவி லாட்டி!
பேர் அஞர் பொருத புகர்படு நெஞ்சம்
நீர்அடு நெருப்பின் தணிய இன்றுஅவர்
வாரார் ஆயினோ நன்றே; சாரல்
10
விலங்குமலை ஆர்ஆறு உள்ளுதொறும்
நிலம்பரந்து ஒழுகும்என் நிறைஇல் நெஞ்சே!
ஏடீ! சற்றேனும் வலிமை இல்லாதவளே! காடும் கம்மென்று ஒலி அடங்குவதாயிற்று. வானமும் மலைப் பிளப்பைப் போன்று விளங்கும் காரிருளைப் பரப்பிக் கொண்டு, பலவான இடிக்குரலைச் செய்யும் மேகத்தின் முழக்கத்தினைக் கைவிட்டதாயில்லை. வெண்மேகம் தவழ்கின்ற குறுங்காட்டிடத்தே, களிற்றினை வெற்றி கொண்ட வெஞ்சினத்தையும் பிளந்த வாயையுமுடைய புலியேறானது, யாவரும் அச்சங் கொள்ளுமாறு முழங்குதலையும் செய்கின்றது. இவ்வோசைகள் அனைத்தையும் கேளாதே நீயும் இதுகாலைத் துயில்கின்றனையோ? பெருந்துன்பம் வந்து மோதியதனாலே குற்றப்பட்ட நெஞ்சத்தினது வெம்மையெல்லாம், நீரைப் பெய்தலாலே அவிகின்ற நெருப்பைப் போலத் தணியுமாறு, இன்று மட்டும் அவர்தாம் வாராதிருந்தனராயின் நன்றாயிருக்கும். நிலையில்லாததான என் நெஞ்சமானது, சாரலிடத்துக் குறுக்கிட்ட மலைக் கண்ணே செல்லும் நெறியை நினையுந்தோறும் எங்கணும் பரவிச் செல்கின்றதே! இனி யான் யாது செய்வேனோ?
கருத்து : 'அவர் வரும் வழிக்கண். அவர்க்கு ஏதம் நேருமோவென யான் அஞ்சுவேன்' என்பதாம்.
சொற்பொருள் : கம்மென்றல் – ஒலியவிந்து போதல், மை இருள் – அடர்ந்த இருட்டு, இறும்பு – குறுங்காடு, வலம் படுத்த – வெற்றி கொண்ட; வலப்புறமாக வீழுமாறு வீழ்த்திய, தூவில் – வலிமை இல்லாத.
விளக்கம் : அஞ்ச வேண்டுமவற்றைக் கேட்ட ஞான்றும் அஞ்சாதே, வாளாவிருந்த நிலையினைக் காண்பாள், 'துஞ்சுதியோ? என்கின்றாள். அவனை இரவுக்குறியின்கண் பெற்று இன்புறுதல் இன்பமே எனினும், மழை நாளின் இரவையும் வழியது கொடுமையையும் நினையும்போது வராதிருத்தலே நன்றாகுமென்னும் எண்ணமே மிகுதியாகின்றது என்க. 'கம்மென்றன்று' என்பதற்குக் கம்மென்னும் மண்மணத்தை உடையதாயிற்று எனலும் பொருந்தும்; மண் மணம் புதுப்பெயலால் எழுவது என்று கொள்க.