நற்றிணை 1/156
156. பகற்போதிலேயே வருவாயாக!
- பாடியவர் : கண்ணன் கொற்றனார்.
- திணை : குறிஞ்சி,
- துறை : இரவுக்குறி மறுத்தது.
[(து–வி) இரவுப் போதிலே வந்து தலைவியைக் களவிற் கூடிச் செல்லும் களவொழுக்கத்தினனாக இருக்கின்றான் தலைவன், அவனிடம், அவ்வாறு இரவிலே வருதலை மறுத்துத் தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
நீயே அடியறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்தெம்
கடியுடை வியல்நகர்க் காவல் நீவியும்
பேரன் பினையே பெருங்கல் நாட!
யாமே, நின்னும்நின் மலையும் பாடிப் பல்நாள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால்
5
பகல்வந் தீமோ பல்படர் அகலி!
எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடிமிழ் விடர்முகை முழங்க.
ஆடுமழை இறுத்ததுஎம் கோடுயர் குன்றே.
10
பெருமலை நாட்டைச் சார்ந்தவனே! வழியது தன்மையினை அறிந்து அடிவைத்து ஒதுங்கிச் செல்லுதற்கும் இயலாதபடி இருள் நிரம்பியிருக்கும் இரவுப்பொழுதிலே, நீதான் அதனைக் கருதாயாய் வருவாய் ஆயினை! காவன் மிகுந்த எமது பரத்த மாளிகையிடத்தே பொருந்திய காவலையும் கடந்து வந்தனை! இவற்றால், எம்மிடத்தே பேரன்பு உடையவன் தீயாதலைக் கண்டேம். கொருக்கச்சி அடர்த்தியாக விளங்கும் பெரிய மனைப்பக்கத்தே வாழ்கின்றவரான சிறுகுடியினர் யாம் ஆவேம். கள்னினை மிகவுண்டு கனிப்பேறினராயினும் எம் ஐயன்மார் சினம் மிகுந்தவராகவே உள்ளனர். வானத்தே இயங்கும் மேகங்களும் இடிமுழக்கினைச் செய்கின்றன. மலைமுழைக்கண் சென்று மோதிய இடியொலியின் எதிரொலியும் எழுந்தபடியேயிருக்கின்றது. கொடுமுடி உயர்ந்த எம் குன்றத்தினிடத்தே மேகங்களும் வந்து தங்கியுள்ளன. இதனால், இனி இரவின் கண் எம்மை
நாடி நீதானும் வாராதிருப்பாயாக. நின்னையும் நின் மலையையும் பாடியவராக, பல நாட்களும், சிறுதினை முற்றியிருக்கும் எம் புனத்தைக் காவல் செய்வதன் பொருட்டாக யாமும் செல்பவராவேம். பலவாய நம் துன்பங்கள் எல்லாம் தீரும்படியாகப் பகற்போதிலேயே புனத்தயற்கண் நீயும் இனி வருவாயாக!கருத்து : 'இவளை விரைந்து மணந்து கொள்ளுதலே இனிச் செய்தற்கு உரியது' என்பதாம்.
சொற்பொருள் : ஆர் இருள் – அடர்ந்த இருட்டு. கடி – காவல். நகர் – மாளிகை. பல்படர் – பலவான துன்பம். பலவாகப் படரும் காமநோயாதலின் 'படர்' என்றனள்; எருவை – கொருக்கச்சி; ஒருவகைச் செடி; குருக்கத்தி என்பர். அரியல் – கள்; நாரால் அரிக்கப்படுதலை உடையதனால் இப் பெயர் பெற்றது. இமிழ் – முழக்கம். மழை -மேகம்.
விளக்கம் : வழிபிழைக்கச் செய்யும் ஆரிருளையும், சினம்மிக்காரது காவலையும், மழை வரவையும் உரைத்து, இடிக் குரலையும் காட்டி, இரவுக்குறி மறுத்தனள். 'நின்னும் நின் மலையும் பாடி' என்றது, இரவுக்குறி மறுப்பினும், தாம் அவன்பாற் காதற்பெருக்கினம் என்றற்காம். ஐயன்மாரைப் பற்றிக் கூறியது, அவரால் துயர் வரக்கூடுமென அஞ்சி இரவுக் குறியை மறுத்து வரைவு வேட்டதாகும். தலைவனைப் பழியொடு வருவன செய்யாது நீக்குதற்கு அறிவுறுத்துவதும் ஆம். 'மணந்து கூடுதலே இனிச் செய்யத்தக்கது' என்று இதனால் புலப்படுத்துகின்றனள்.