நற்றிணை 1/166
166. கடலினும் பெரிது!
- பாடியவர் : ......
- திணை : பாலை
- துறை : செலவுக்குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.
[(து–வி.) தலைவன் வினைமேற்கொண்டானாய்த் தன்னைப் பிரிந்து செல்லற்கு நினைத்தானாதலைக் குறிப்பால் உணர்ந்து, அதனால் உடல் வேறுபட்டாள் தலைவி. அவளுக்குத் தலைவன் கூறுவதாக அமைத்த செய்யுள் இது.]
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகம்மலிந்து யானும்
5
அறம்நிலை பெற்றோர் அனையேன் அதன்தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து இலெனே; நினையின்
யாதனின் பிரிகோ? மடந்தை!
காதல் தானும் கடலினும் பெரிதே!
10
கருத்து : 'யான் பிரிந்து போதற்கு நினைத்திலேன்: ஆதலின், நின் மனத்தளர்வை கைவிடுக' என்பதாம்.
சொற்பொருள் : 'யாய்' என்பது முன்னிலை அசை. மாதர் – அழகிய. அகம் மலிந்து – உள்ளம் மகிழ்ந்து. அதன்தலை – அதற்கும் மேலாக. நினையின் – ஆராயின், பொய்தல் – ஒருவகை மகளிர் விளையாட்டு; இதனைக் 'கண்ணாமூச்சி' என்று இக்காலத்தே வழங்குகின்றனர்.
விளக்கம் : உடல் வேறுபட்டாளை இவ்வாறு பாராட்டிக் கூறித் தெளிவிக்கின்றான் தலைவன். பொருள் ஆசையாற் பிரிவானென ஐயுற்றதன் பொருந்தாமையினைக் கூறுவான், 'பொன்னும் மணியும் மேனியும் கதுப்புமாக நின்னிடத்தேயே அமைந்து கிடக்கின்றனவே' என்கின்றான். அறம் நிலை பெற்றோர் அனையேன் என்றது, அறத்திற்கான பொருள் முட்டுப்பாடு தனக்கு இல்லாமையினைக் கூறியதாம்.
மேற்கோள் : பிரிவின் எச்சத்துப் புலம்பிய மனையாளைப் பிரிவுநீக்கிய பகுதிக்கண் தலைவன் சொல்வதற்கு இச்செய்யுளை இளம்பூரண அடிகள் மேற்கோளாகக் கொண்டனர் (தொல்; பொருள் 144ஆம் சூத்திரம்). 'அஃதாவது பிரியேன் என்றல்' எனவும் அவர் உரைப்பர்.
பிறபாடங்கள் : போதும் மணையும் போலும்: யாதெனிற் பிரிவாம் மடந்தை.